jeudi 19 décembre 2013

மடக்கு அணி வெண்பா! - பகுதி 2மடக்கு அணி வெண்பா!

பாவாடை தாவணியில் பார்த்தவுடன் என்னெஞ்சுள்
பா..வாடை வீசுதடி பைங்கிளியே! - பூவாடைச்
சோலையில் சொக்கும் சுழல்வண்டாய் நோயுற்றேன்!
மாலையில் வேண்டும் மருந்து! 6

வளமை கொடுக்கின்ற மாதே!ஏன் போர்வை?
இளமை இனிக்கின்ற போர்..வை! - உளத்துள்
தலைமை தரிக்குதடி உன்நினைவு! அன்பே!
புலமை கொழிக்குதடி பூத்து! 7

கவிதை இதழ்கள் கனிகொடுக்கும்! உன்றன்
குவியும் இதழ்..கள் கொடுக்கும்! - செவியினிக்கச்
சிந்தை யினிக்கச் செயலாற்றும் செவ்வாயின்
விந்தை அனைத்தும் விருந்து! 8

பொங்கும் புதுமை பொலியும் கயற்கண்கள்
எங்கும் புது..மை எழுதுவதேன்? - தங்கமே!
மையிட்(டு) உயிர்மயக்கும் மந்திரமோ? என்தலையில்
கையிட்டு மெய்யே கதை! 9

தையென வந்து தழைப்பவளே! உன்னழகு
தை..யெனத் தாளமிடும் என்னுள்ளே! - பையென
உன்தோள் தழுவுதடி கற்பனை! ஒண்மணியாய்
உன்கால் தழுவுதடி ஊர்ந்து! 10


இலக்கணம்

ஒரேசொல் பிரியா நிலையில் ஒருபொருளும்,  
பிரிந்த நிலையில் வேறொரு பொருளும் தருதலுண்டு. அவ்வாறான ஒருசொல் இருமுறை பாடலில் வந்து  
வெவ்வேறு பொருள் தருமாறு அமைவது  
மடக்கு அணி எனப்படும்.

18.12.2013

32 commentaires:

 1. அய்யா..!
  லயித்தேன் ,வரிகளில்.....

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   சுவைத்தேன் எனும்சொல்லைச் சொல்லுக தோழா!
   சுவைத்..தேன் கொடுக்கும் சுரந்து

   Supprimer
 2. அற்புதம்
  இலக்கணத் தெளிவும் பெற்றோம்
  இலக்கியச் சுவையும் பெற்றோம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இலக்கணம் மின்ன! இலக்கியம் ஓங்க
   வலைக்கனம் ஓங்கும் வளா்ந்து!

   Supprimer
 3. Réponses

  1. வணக்கம்!

   அளித்திட்ட வாக்கால் அடியேன் உயா்ந்தேன்!
   களித்திட்ட செந்தமிழ் காத்து

   Supprimer

 4. வணக்கம்!

  பாவாடை! பா..வாடை! பாடிப் படைத்தகவி
  பூவாடை வீசிப் பொலிகிறது! - மாவாடை
  போர்த்தி மகிழ்கின்றேன்! பொங்கும் புலமையை
  ஏத்தி மகிழ்கின்றேன் இன்று!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இணைக்கின்ற உன்றன் இனியதமிழ் வெண்பா
   அணைக்கின்ற இன்பம் அளிக்கும்! - மணக்கின்ற
   வண்ணம் எழுதும் வளா்கவியே! உன்வரவால்
   எண்ணம் மகிழும் இசைத்து!

   Supprimer
 5. சுவைத்தேன் கவியேஉம் சுந்தரப் பாக்கள்!
  சுவை..தேன்! அதுவே சுகம்!

  வணக்கம் ஐயா!

  இன்றும் அத்தனையும் சுவை சொட்டும் மடக்கு அணிப் பாக்கள்!
  மிக அற்புதம்!

  என் வணக்கமும் வாழ்த்துக்களும்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அவை..தேன் சுவையா? அருந்தமிழ் ஏறும்
   அவைத்தேன் சுவையா? அருந்து!

   Supprimer
 6. ஆகா...! vilakkam மிகவும் அருமை ஐயா... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   மடக்கிப் பிடிக்கும் வலிமையைக் காட்டும்
   மடக்கணிப் பாட்டில் மயங்கு

   Supprimer
 7. ஆகா...! விளக்கம் மிகவும் அருமை ஐயா... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   விளக்கம் அறிந்து விளம்பிய சொற்கள்
   விளைக்கும் இனிமை விருந்து!

   Supprimer
 8. வை ...கை பார்க்க ஓடி வந்தேன் பா....வண்ணம் தீட்ட
  திற... மை காண பொறு... மை வேண்டும் தாயே அதை தருக.
  இது என் சிறிய முயற்சி.


  பா...வாடையிலேயே வாழும் தாம்
  பைந் தமிழில் பாடுவதா புதுமை
  வீசும் புலமை எல்லாம் யான்
  வாசிக்க வேண்டி யாசிக்கிறேன்
  நாவுக் கரசியளை நல்கிட.

  மிக்க நன்றி ..! வாழ்த்துக்கள்....!

  RépondreSupprimer
  Réponses

  1. இன்றமிழ்ப் பற்றேந்தி எங்கள் கவிஇனியா
   நன்றே பெறுக நலம்!

   Supprimer
 9. அருமை! அருமை! அருமை! புதுமை! புதுமை! புதுமை! தமிழுக்கே , பெருமை! பெருமை! பெருமை! நன்றி! வெண்பா வேந்தே!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   புலவா் வருகையால் பொங்குமென் நெஞ்சுள்
   குலவும் இனிமை குவிந்து!

   Supprimer
 10. கவிஞரே...
  இப்படி மடக்கிவிட்டீர்களே..:)

  எப்படித்தான் இப்படியெல்லாம் எழுதுகிறீர்களோ...
  அந்த நாமகளே நாவில் இருக்கின்றாள் உங்களிடம்!

  வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இனிய தமிழ்மகள் என்னாவில் நின்று
   கனிய எழுதும் கவி

   Supprimer
 11. லயிக்க வைத்த கவிதை...
  வாழ்த்துக்கள் ஐயா.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   வியக்கும் படியென் கவிதைகள் மின்னி
   இயக்கும் உயிரை இழுத்து!

   Supprimer
 12. புதுமையான பாவகைகளை அறிமுகப் படுத்தி அசத்துகிறீர்கள் ஐயா! புலவர் ஐயா சொன்னதுபோல தாங்கள் வெண்பா வேந்தர்தான்.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   ஆசான் அளித்த அருந்தமிழால் என்பாக்கள்
   பேசும் பெருமையைப் பெற்று!

   Supprimer
 13. வணக்கம்
  ஐயா.

  அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   வண்ணத் தமிழ்பரவ நன்றே வலையேற்றும்
   நண்பா் வளா்கவே நன்கு!

   Supprimer
 14. நாவில் இனிக்கும் நறுஞ்சொற்கள் நீவிடுத்து
  நா..வில் சுமந்தாய் நளினமே -பூவில்
  கமழும் புகழினிய கண்ணிதளால் ! பூப்பாய்
  அமிழும் உயிருக்காய் அன்பு !

  வணக்கம் கவிஞரே அழகிய பாக்கள் அருமை அருமை
  நானும் முயற்சித்தேன் அது மடக்குதோ மடக்கலையோ அறியவில்லை
  மீண்டும் முயற்சிக்கிறேன்

  மடக்கு அணிவெண்பா மண்டையிலே ஏற
  கிடைக்கத் தருவீர் கிளர்ந்து!

  வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
  த ம 13

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   ஒன்றிப் படித்தே உரைத்த கவிதைக்கு
   நன்றி நவில்கின்றேன் நான்!

   நாவில் நறுந்தமிழை நன்றாய்ப் பயின்றுநான்
   நா..வில் விடுகின்ற நன்மறவன்! - கோவிந்தன்
   மாவில்லும் மன்னா்தம் செங்கோலும் வண்டமிழின்
   பா..வில்லைப் போற்றும் பணிந்து

   Supprimer

 15. பருவத்து காதல் பனியினிலே சேரும்
  பரு...வத்தும்! உம்பா படிக்கும் - தருணம்
  உருவத்தில் தீயும் உணர்வுகளும் மீண்டும்
  கருவுற்று காய்க்கும் கனி!

  நன்றி சொல்லும் வார்த்தைகள் இல்லை கவிஞரே
  நானும் பாவினை கற்க வழிகாட்டும் உங்கள் பணிக்கு

  பேருக்கு வாழா பெருமகனே எந்நாளும்
  ஊருக்கு நீங்கள் உரம் !

  வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   கருவுற்றுக் காய்க்கும் கனியென்றாய்! நண்பா!
   செருக்குற்று நின்றேன் செழித்து!

   Supprimer
 16. அம்மா நிலத்தினிலும் இல்லா அருங்கவிதை
  “அம்மா“ எனவியந்தேன் நான்

  RépondreSupprimer
 17. தங்களது கருத்துக்களை பிற வலைத்தலங்களில் பார்த்துள்ளேன். தங்களது பதிவுகளை தற்போது முதன்முதலாகப் பார்க்கிறேன். வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.
  www.ponnibuddha.blogspot.in
  www.drbjambulingam.blogspot.in

  RépondreSupprimer