jeudi 12 décembre 2013

உலக சைவ மாநாடு
உலகச் சைவ மாநாட்டு வாழ்த்துப்பா

சுவிச்சர்லாந்து

வானில் நந்திக் கொடியாட,
     வண்ணத் தேரும் அசைந்தாட,
தேனின் மிக்க செந்தமிழைப்
     செப்பும் பாட்டில் உளமாட,
மானின் விழியாள் என்னம்மை
     வழங்கும் கருணை மொழியாட
ஊனில் உயிரில் உமைப்பாகன்
     உருவம் பதித்தோர் ஆடினரே!

அருளார் அன்பர் சிவநந்தி
     அடிகள் புரிந்த அரும்பணியால்
பொருளார் தமிழும் புவியெங்கும்
     பூத்துப் பொலியக் காண்கின்றேன்!
இருளார் உலகு விழிப்படைய
     இன்பம் நிலைத்து மகிழ்ந்தாட
திருவார் சைவம் பரப்புகிற
     திறத்தை வணங்கி வாழ்த்துகிறேன்!

நொடியும் அவன்தாள் மறவாமல்
     நோக்கம்! செய்கை! திருத்தொண்டே!
படியும் வண்ணம் திருமுறையைப்
     பாடும் யோகா னந்தரடி!
விடியும் காலைப் பொழுதாக,
     விளையும் சோலை அழகாக,
தொடரும் பாதை மிளிர்கிறது!
     தூயோர் பணியை வாழ்த்துகிறேன்!

குலவும் சைவ நெறிசூடி,
     கொஞ்சும் தமிழின் புகழ்சூடி,
நிலவின் வெள்ளை மனஞ்சூடி,
     நினைவில் நாதன் தாள்சூடி,
உலகச் சைவப் பேரவையை
     உயிராய்க் காக்கும் சான்றோர்தம்
அலகில் சீரைக் கவிபாடி
     அடியேன் வணங்கி வாழ்த்துகிறேன்!

சீவன் தன்னைச் சிவனாக்கும்
     செம்மை நெறியைக் கேட்டுய்ய
ஆவல் கொண்டு வந்தவர்க்கும்
     அருளார் உரைகள் அளிப்பவர்க்கும்
ஏவல் புரிந்தே இந்நிகழ்வை
     ஏந்திச் சுமக்கும் அடியவர்க்கும்
காவல் அரணாய் இருப்பவர்க்கும்
     கவிஞன் வணங்கி வாழ்த்துகிறேன்!

அன்பே தெய்வம் என்றுரைக்கும்
     அருமை சைவம்! இவ்வுலகை
நன்றே ஆக்கும்! நலஞ்சேர்க்கும்!
     நற்றேன் மழையைப் பொழிந்தருளும்!
ஒன்றே இறைவன்! அவனடியை
     ஒன்றும் வழியே பலவாகும்!
வென்றே களிக்க! வினைமுடிய
     வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன்!

சந்தம் சிந்தும் திருமுறைகள்
     தமிழர் சொத்து! வருகின்ற
நந்தம் பிள்ளை அவைகற்று
     நடந்தால் ஒளிரும் அருள்முத்து!
சொந்த மாக இவ்வுலகைச்
     சூடிப் பழகு! உயிரோங்கும்!
அந்தம் இல்லா அவனழகில்
     ஆழ்ந்து களிப்போர் வாழியவே!

இருண்டக் காலம் முடிவெய்த,
     இன்பத் தமிழாள் மீண்டுமெழ,
திரண்ட அமுதின் தீஞ்சுவையாய்ப்
     பிறந்த பக்தி இலக்கியங்கள்
சுரந்த இனிமை! தமிழ்ப்பெருமை!
     தொடர்ந்த வாழ்வே நம்சீர்மை!
பரந்து மணக்கும் சைவத்தைப்
     பரப்பும் அன்பர் வாழியவே!

சைவம் என்றால் அன்பாகும்!
     சைவம் என்றால் அருளாகும்!
சைவம் என்றால் அறமாகும்!
     சைவம் என்றால் அறிவாகும்!
சைவம் என்றால் துயர்போக்கிச்
     சால்பை ஊட்டும் பணியாகும்!
சைவம் என்றால் தமிழாகும்!
     சார்ந்து வாழ்வோர் வாழியவே!

மதங்கள் கொண்ட வேற்றுமையால்
     மனிதம் குலைதல் இனிவேண்டாம்!
வதங்கள் ஏனோ? இறையென்னும்
     வள்ளல் ஒருவன்! உணர்ந்திடுவீர்!
பதங்கள் சேர அடிபிறக்கும்!
     பகையை மறப்பீர்! வளம்பிறக்கும்!
இதங்கள் சேர ஒற்றுமையை
     இயம்பும் அடியார் வாழியவே!

தொண்டர் பெருமை என்கவியில்
     சொல்லால் எளிதோ? தமிழின்மேல்
கொண்ட பற்றின் மிகுதியினால்
     கோலக் கவிதை மொழிந்திட்டேன்!
கண்டன் கழலில் கட்டுண்டு
     காதல் புரியும் அன்பரெலாம்
என்றன் கவியைப் பொறுத்திடுவீர்!
     நன்றி இயம்பி அமர்கின்றேன்!

25-05-2007

6 commentaires:

 1. அருமை ஐயா
  சைவம் தழைத்தோங்கட்டும்

  RépondreSupprimer
 2. எப்பொருள் குறித்து எழுதினும்
  இதை விட சிறப்பாக யாரும் எழுதிவிட முடியாது
  என்னும் எண்ணம் தோன்றும் வண்ணம்
  எழுதிடும் தாங்களே என் போன்றோருக்கெல்லாம் ஆசான்.
  தங்கள் கவிதைகளே எங்களுக்கு வழிகாட்டி
  வாழ்க தங்கள் தமிழ்த் தொண்டு

  RépondreSupprimer
 3. வணக்கம்
  ஐயா

  கவிதையின் இரசனையை சொல்ல வார்த்தைகள் இல்லை ..ஐயா மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
 4. கருத்துள்ள வரிகள் ஐயா...

  வாழ்த்துக்கள்...

  RépondreSupprimer
 5. உணர்வோடு சூட்டிய அருமையான வாழ்த்துப் பாமாலை!
  இன்று கேட்டாலும் இனிமையும் பெருமையும் தருகிறது!

  என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!

  RépondreSupprimer
 6. மதங்கள் கொண்ட வேற்றுமையால்
  மனிதம் குலைதல் இனிவேண்டாம்!

  கவிதை அருமை ஐயா...

  RépondreSupprimer