இதழ் அகல் வெண்பா
செங்கனியே! செந்தேனே! சித்திரைத் தேரழகே!
தங்கக் கலசத் தகையாளே! தாரகையே!
எங்கே..நீ சென்றனை? ஏங்கிடச் செய்தனை?
இங்கே..நீ இன்னலிடல் ஏன்?
இதழ் அகல் குறட்பா
இதழ்கள் இனிக்க இளங்கிளியே என்னை
இதயத்தின் ஏட்டில் இணை!
சின்ன கயற்கண்கள் என்னைச் சிறையிட
என்ன..நான் செய்ய இனி?
கன்னல் கனியெனக் காரிகைச் சீரினிக்க
இன்னல் எனக்கிங் கிலை!
சின்ன இடையழகில் சிக்கிக் கிடக்கின்றேன்
என்ன அழகின் இயல்?
தங்க அணியழகைச் சந்த நடையழகைச்
சங்கக் கலையழகைத் தா!
சிரிக்கின்ற தேனிதழ்கள் சேர்ந்தென்னைக் காதல்
தரிக்கின்ற காலத்தைத் தா!
எதிர்த்த செயல்நீக்கிச் சேர்ந்திட எண்க
இதய அறையில் எனை!
அழகே! அணியிழையே! ஆரணங்கே! என்றன்
நிழலெனத் தென்றலென நீ!
சிந்தை செழிக்கின்ற சிங்காரி கண்ணழகால்
கந்தையென ஆனதைக் காண்!
நங்கை நடையழகில் நாராய்க் கிழிகின்றேன்
கங்கை நதியாளே கா!
இலக்கணம்
உதடுகள் குவியாமலும் ஒட்டாமலும் பாடும் கவிதை.
இப்பாட்டில் வரக்கூடா எழுத்துக்கள்,
உகர எழுத்துக்களும், ஊகார எழுத்துக்களும் வரக்கூடா,
(உ,
கு, சு, து, டு, ....)(ஊ, கூ, சூ, தூ, டூ....)
ஒகர எழுத்துக்களும், ஓகார எழுத்துக்களும் வரக்கூடா,
(ஒ,
கொ, ஙொ, சொ, டொ....) (ஓ, கோ, ஙோ, சோ, டோ....)
ஓளகார எழுத்துக்கள் வரக்கூடா,
(ஓள, கௌ, ஙௌ, சௌ....)
ப, ம,
வ, வர்க்க எழுத்துக்கள் வரக் கூடா,
(ப,
பா, பி, பீ, பு, பூ......)
(ம,
மா, மி, மீ, மு, மூ......)
(வ,
வா, வி, வீ, வு, வூ......)
15.12.2013
வணக்கம் ஐயா!..
RépondreSupprimerமிக மிக அருமை! இதுவரை இப்படி நான் அறிந்ததில்லை.
ஆச்சரியத்தால் உண்மையிலேயே வாய்பிளந்த
நிலையில் நிற்கின்றேன்!..
சொல்ல வார்த்தைகளே இல்லை ஐயா!
நல்ல பயிற்சி எங்களுக்கு!..
அற்புதம்! அழகிய வெண்பாவும் குறட்பாக்களும்!
என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!
******************************************
ஐயா... என் சிறு முயற்சி. குறட்பா வடிவத்தில்!
தங்களின் ஞானத் தரத்திற்கி ணையாக
எங்களால் ஆகா தினி!
மோனை இரண்டாம் அடியில் அமையவில்லை.
அமைக்க முடியவில்லை ஐயா!
மிக்க நன்றி!
Supprimerவணக்கம்!
தங்களின் ஞானத் தரத்திற் கிணையாக
எங்களால் ஆகா தினி
இரண்டவது அடியில் மோனை உள்ளது
எ எழுத்துக்கு இ மோனையாக வரும்
த் - இ - தி
என்னைப் புகழ்ந்தே இசைத்திட்ட சொல்யாவும்
அன்னைத் தமிழின் அருள்
உதடுகள் குவியாமலும் ஒட்டாமலும் பாடும் கவிதை மிகவும் அருமை ஐயா...
RépondreSupprimerவாழ்த்துக்கள்...
Supprimerவணக்கம்!
உதடுகள் ஒட்டாக் கவிகள்! உயா்தமிழின்
புதுமைகள் என்றே புகல்!
வணக்கம்
RépondreSupprimerஐயா
கவிதை தனிச்சிறப்பு...அருமை வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்
நல்ல கவிபடித்து நல்கும் கருத்துக்கள்
வெல்லம் அளிக்கும் விருந்து!
வணக்கம்
RépondreSupprimerஐயா
த.ம 8வது வாக்கு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
வாக்களித் தென்னை வளமுறச் செய்திட்டீா்!
பாக்கள் அளித்த பயன்
இலக்கண சுத்தமாக எழுதப்பட்ட கவிதைகள் படிக்கும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.
RépondreSupprimerஇலக்கண விளக்கமும் அருமை.
Supprimerவணக்கம்!
கும்மாச்சி வந்தார்! குளிர்ந்த தமிழ்க்கவிக்குச்
செம்மாட்சி தந்தார் செழித்து
எப்படி இப்படியெல்லாம் கண்டுபிடிக்கின்றீர்கள்...
RépondreSupprimerநன்றாக ரசித்தேன்! வாழ்த்துக்கள்!
இன்னும் தொடருங்கள் கவிஞரே!...
வணக்கம்!
Supprimerபூங்கொடி வந்தாய்! புகழுரை பூத்துாவி
ஏங்கிடச் செய்தாய் எனை!
அம்மாடி இவ்வளவு விடயங்கள் இருக்குதா.
RépondreSupprimerஇருந்தாலும் அதை எளிதாக விளக்கி
எளிதாய் இனிதாய் அளித்தாய்
இதழ் அகல் நடை அழகை
இனியா இதயத்தில் இணைத்தது
இணை இல்லாதது என்னே திறன்.
என் முயற்சியில் ஒட்டாமல் குவியாமல் எழுதியுள்ளேன் மிக்க நன்றி.
இது பெ ரும் கடல் நான் என்ன செய்வேன் முயற்சி செய்கிறேன். மேலும் அறிய ஆவலாய் உள்ளேன்.
மிக்க நன்றி வாழ்த்துக்கள்...!
Supprimerவணக்கம்!
அம்மாடி என்றே..நீ சும்மா இருக்காதே
அம்..மாடி மேலேறி ஆடு!
RépondreSupprimerமுதல்முறை கண்டு முழித்தேன்! இனிய
இதழகல் பாக்கள் இசைத்து!
அருமை. ரசித்தேன்.
RépondreSupprimerஇப்படி ஒரு கவிதை இதுவரை படித்ததில்லை. மழையாய் பொழிகிறீர்கள். நனைந்தோம் இன்புற்றோம்
RépondreSupprimerஇலக்கணத்தை இனிதாய்க் தருகிறீர்
RépondreSupprimerஇதனால் கணக்கில்லா நன்றி
இதை எழுதவே கொஞ்சம் கடினமாயிற்று ஐயா..முயற்சி செய்தேன், பிழையிருந்தால் மன்னிக்கவும்..மிக்க நன்றி.