உன்றன் அழகால்..
பின்னி முடித்த குழலழகால்
பித்தம் கொடுக்கும் உடலழகால்
சென்னி தரித்த மலரழகால்
சிந்தை பறிக்கும் சிரிப்பழகால்
கன்னி உன்னைத் தேடுகிறேன்!
காதல் நோயால் வாடுகிறேன்!
எண்ணி எண்ணி எப்பொழுதும்
ஏக்கம் பிடித்தே உளறுகிறேன்!
------------------------------------------------------------------------------------------------------------
வருவாயே!
கிழவ னாக ஆனாலும்
கிளியே! ஆசை மாறிடுமோ?
உழவன் காக்கும் வயலைப்போல்
உன்னை யானும் காத்திடுவேன்!
அழகன் என்றும் நானன்றோ!
அன்பே! அமுதே! அருந்தமிழே!
மழலை போல என்மடியில்
மலர்ந்து தவழ வருவாயே!
------------------------------------------------------------------------------------------------------------
எந்நாளோ?
ஏங்க வைக்கும் பேரழகே!
இதயம் கவர்ந்த கலையழகே!
ஓங்கி நிற்கும் மொட்டெனவே
உன்றன் மேனி மிளிர்கிறது!
தூங்க வில்லை நெஞ்சமடி
துடிக்கும் இளமைத் தொல்லையினால்!
தேங்கி நிற்கும் என்னாசை
தீரும் நாளும் எந்நாளோ?
------------------------------------------------------------------------------------------------------------
பருகிடுவேன்
அழகை யெல்லாம் உன்னிடமே
அளித்து விட்டான் பிரம்மனவன்!
பழகப் பழக இனிமையடி!
பார்க்கப் பார்க்க இன்பமடி!
ஒழுகும் தேனின் கூட்டருகே
உட்கார்ந் திருக்கும் மூடவனென
அமுதே! என்னை நினைக்காதே
அள்ளி ஒருநாள் பருகிடுவேன்!
------------------------------------------------------------------------------------------------------------
01.11.1985
கன்னி உன்னைத் தேடுகிறேன்!
RépondreSupprimerகாதல் நோயால் வாடுகிறேன்!//இன்னும் ஏக்கம் தீரலையோ?
Supprimerவணக்கம்!
இறக்கின்ற நாள்வரை ஏக்கம் இருக்கும்!
பிறக்கின்ற வாழ்வில் பிணைந்து!
ஒவ்வொன்றும் மனதை கவரும் கவி வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கவரும் கயல்விழியாள்! வாழ்கிறாள் என்னுள்
திவளும் மதிபோல் திகழ்ந்து!
சின்னக் கவியினில் சிதறிடும் காட்சி
RépondreSupprimerஎண்ண இனிக்குதே எழிலினைக் கூட்டி
வண்ணக் கனவினில் வருமிதன் ஆட்சி
இன்னமும் சொல்லவோ ஏக்கமுங் கூட்டியே!
Supprimerவணக்கம்!
அகவற் கவியில் அளித்த கருத்து!
மிகநற் சுவைசோ் விருந்து!
ஒவ்வொரு கவிதையும் சிறப்பாக உள்ளதையா... அதுலும் உழவன் போல உனைக் காப்பேன் என்ற வரி மிகவும் பிடித்துள்ளது...
RépondreSupprimerத.ம 8
Supprimerவணக்கம்
புன்னகையார் தந்த புகழ்மாலைக் கீடாமோ
பொன்னகை கொண்ட பொலிவு!
ரசித்தேன்... அருமை.
RépondreSupprimerவாழ்த்துக்கள்!
Supprimerவணக்கம்!
பூங்கொடி வந்து புனையும் கருத்துக்கள்
மாங்கனி நல்கும் மனம்
RépondreSupprimerஅறுசீா் விருத்தத்தை ஆரமுதாய்த் தந்தீா்!
உறும்சீா் ஒளிரும் உயா்ந்து!
Supprimerவணக்கம்!
ஓங்கி ஒளிரும் உயா்தமிழ்ப் பெண்ணிடம்
ஏங்கிக் கிடைப்பேன் இனித்து
RépondreSupprimerதமிழ் உறவுகளுக்கு
தேனின் சுவையாய்த் திரண்ட கருத்துக்கள்!
ஊணில் கலந்தொளி ஊட்டின - வானின்
மழைபோல் வளங்கள் வழங்கின! வாழ்வு
குழல்போல் இனிக்கும் குளிர்ந்து!
கவிதை வரிகளில் காதல் மிளிர்கிறது.
RépondreSupprimerவாழ்த்துக்கள்.
//உழவன் காக்கும் வயலைப்போல்
RépondreSupprimerஉன்னை யானும் காத்திடுவேன்!//
அழகிய காதல் கவி. பல இடங்களில் கருத்தாளம் கம்பனைப்போல்...