காதல் ஆயிரம் [பகுதி - 109]
926.
பேருந்தில் என்னெதிரே பெண்ணழகே நீயமர்ந்தால்
பேருந்து பேரின்ப உந்தாகும்! - ஓருந்தும்
என்முன் தெரியா(து) இனியதமிழ்த் தேவதையே
உன்முன் கிடக்கும் உயிர்!
927.
தேர்விழா காணக் கிளம்புகிறோம்! தேவியே
ஓர்விழா உன்னிணை ஆகிடுமோ? - பார்த்துச்
சிறுபெட்டி வண்டியிலே சேர்ந்தமர்ந்தோம்! காதல்
நறும்பெட்டி நல்கும் நமக்கு!
928.
கப்பல் பயணமா? காதல் பயணமா?
செப்பல் எளிதோ? சிலிர்க்குதடி! - முப்பொழுதும்
அந்த நினைவுகள் ஆர்த்தெழுந்து பொங்குதடி!
வந்து கொடுப்பாய் வரம்!
929.
கூர்வான ஊர்தியிலே கூடிக் குலவியது
தேர்வான இன்பத் திரட்டென்பேன்! - தேர்..வானில்
செல்லும் அழகென்பேன்! தேவதையே உன்னழகு
வெல்லும் அழகென்பேன் வீழ்ந்து!
930.
குதிரைத் தேரேறிக் கொள்ளை எழிலாய்
மதுரை அழகி..நீ வந்தாய்! - மதுமரைக்
காட்டின் மணங்கண்டேன்! உன்கண்ணில் நானெழுதும்
பாட்டின் மணங்கண்டேன் பாய்ந்து!
(தொடரும்)
RépondreSupprimerஈரைந்து வண்டிகளை எண்ணிப் படைத்தகவி
சீரேந்தும்! செந்தமிழின் தேனேந்தும்! - பாரதியுன்
பேரேந்தும்! இன்பத்தின் பேறேந்தும்! இந்நுாலைப்
பாரேந்தும் நன்றே படித்து!
Supprimerவணக்கம்!
சீரேந்தி சொன்ன செழுந்தமிழை நன்குண்டு
காரேந்தி ஆடும் கவிமனமே! - நேரேந்தி
நின்றவளை! என்னுள் நிறைந்தவளை நேரிழையை!
என்[று]அவளைச் சோ்வேன் இணைந்து!
ஒவ்வொரு பயணமும் (வரியும்) மனதை கவர்ந்தது ஐயா.... வாழ்த்துக்கள்... நன்றி...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
என்னுள் பசுமையாய் என்றும் இருக்கின்ற
அன்பின் நிகழ்வை அசைபோட்டுப் - பொன்னுள்
பதித்துப் படைத்தேன்! அவளழகை எண்ணிக்
குதித்துப் படைத்தேன் குளிர்ந்து!
எண்ணம் உந்தியே எழுந்திட்ட காதலிது
RépondreSupprimerதிண்ணம் வாழுமே திளைத்து தென்னங்
காற்றெனத் தழுவுது கவிஞர் தருங்கவி
போற்றிடப் பொலிந்து சிறக்கும் தமிழ்!
Supprimerவணக்கம்!
தென்னைக் குருத்தழகாய்த் தேவியின் நல்வரவு!
என்னைப் புரட்டி எடுக்குமே! - முன்னைப்
பயன்என்பேன்! பாவையின் பார்வையே என்றன்
உயிர்என்பேன்! நன்றே உணா்ந்து!
வணக்கம் கவிஞரே!
RépondreSupprimerஇன்னும் வண்டிகள் வரிசையாய் வருகிறதே....:)
அத்தனையும் அருமையோ அருமை!
ஆமா...
// சிறுபெட்டி வண்டியிலே சேர்ந்தமர்ந்தோம்! காதல்
நறும்பெட்டி நல்கும் நமக்கு//
சிறுபெட்டில இடம் பத்துமாய்யா...;)
வாழ்த்துக்கள் ஐயா!
Supprimerவணக்கம்!
சின்ன அணுவிலும் சோ்ந்தமா்வோம்! கற்பனையின்
வண்ணம் பெருகும் விரிவானாய்! - என்னென்பேன்?
காற்றும் புகாமல் கயல்விழியை நான்அணைக்க
ஊற்றாய்ச் சுரக்கும் உணா்வு!
வணக்கம்
RépondreSupprimerஐயா
ஒவ்வொரு வரிகளும் மிக மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
ஒவ்வொரு நாளும் உயா்தமிழ் பாடிடவும்!
செவ்விய சிந்தனை சேர்ந்திடவும்! - திவ்வியமாய்க்
காட்சிதரும் கண்மணியால் காதல் கலைமணியால்
மாட்சிபெறும் என்னுடை வாழ்வு!
பாராட்ட சொல்லிலை! பாரதி தாசவும்மை -நாளும்
RépondreSupprimerபைந்தமிழில் வெண்பாவை தந்தேயெம்மை
சீராட்டி வளர்பதனைச் செப்பப் போமோ-வரும்
சிறப்புக்கு எதிரொன்று ஒப்ப ஆமோ
தேரோட்டம் தமிழென்னும் தெருவில் தானே -எட்டு
திசையெங்கும் பரவியே இனிக்கும் தேனே
காரோட்டும் காற்றினது வேகம் கொண்டீர்-நல்
கவிதைகளே உயிர்மூச்சாய் நீரும் கண்டீர்
Supprimerவணக்கம்!
தேரோட்டம் காணவரும் தேவி திருவிழிகள்
போராட்டம் என்னிடம் போடுவதேன்? - நீரோட்டம்
சோ்த்திழுத்துச் செல்வதுபோல் என்னுயிரைத் தான்மயக்கிக்
கோர்த்திழுத்துச் செல்வதுமேன் கூறு?