mercredi 17 juillet 2013

ஆடிடலாம்!





ஆடிடலாம்

கொத்தித் தின்னும் சிறுகுருகே!
            கொஞ்சிப் பேசும் பசுங்கிளியே!
அத்தி மரத்தின் எழிலணிலே!
            அழகாய் ஆடும் பொன்மயிலே!
தத்தி நடக்கும் இளங்கன்றே!
            சந்தம் பாடும் கருங்குயிலே!
கத்தி அழைத்தேன் உங்களையே
            கண்ணாம் மூச்சி ஆடிடவே!

துள்ளி ஓடும் கலைமானே!
            தூங்கா துழைக்கும் சிற்றெறும்பே!
அல்லி மலரின் மதுபருகி
            ஆடித் திரியும் தேன்வண்டே!
ஒல்லி யாக நீண்டிங்கே
            உயரப் பறக்கும் சிறுதும்பே!
சொல்லிக் கொடுப்பேன் ஓராட்டம்!
            சூழ்ந்து நிற்பீர் என்னருகே!

கண்ணைப் பறிக்கும் உடைபெற்றுக்
            காற்றில் நீந்தும் பட்டானே!
மண்ணைக் கிளறி விளையாடும்
            வாத்து கோழி வெண்முயலே!
பண்ணைத் தோப்பைக் காக்கின்ற
            பாசம் மிகுந்த நன்னாயே!
என்னை நாடி வந்திடுவீர்
            இனிதே கூடி ஆடிடலாம்!

20.05.2000

8 commentaires:

  1. அழகான மழலைப்பாடல்.

    RépondreSupprimer
  2. அருமை... ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  3. வண்ணத் தமிழில் வார்த்த கவியிலே
    எண்ணக் குவியலின் எழிலைக் கண்டே
    சின்னஞ் சிறுமியாய் சிரித்த போதிலும்
    மின்னிடும் சீர்களால் மிகவே வியக்கிறேன்!.

    அழகாகத் தொடுக்கப்பட்ட சீர்களில் சிக்குண்டு நிற்கின்றேன்.
    மிக அருமை!

    ஐயா!....
    சில சொற்கள் சேர்ந்த இடங்களில் ஐயங்கள் உண்டு.

    மதுபருகி, நன்னாயே இவற்றின் விளக்கம் தந்தால் மகிழ்வேன்.
    மிக்க நன்றி!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா..!

    RépondreSupprimer
  4. ஆடிடலாம் சேர்ந்து பாடிலாம்!

    ஐயா! உங்களின் இப்பாடலை நான் சிறுவர்களுக்கு மெட்டுப்போட்டு இசைப்பாடலாகச் சொல்லிக்கொடுக்கவென சேமித்துள்ளேன்.
    மிகமிக அற்புதமாய் இருக்கிறது. அருமை!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  5. வாவ்.. அற்புதமான பாடல்...

    RépondreSupprimer

  6. அன்னம் அணிலை அழைத்திங்கே அன்புடனே
    சொன்ன கவிதை சுவைஅதிகம்! - இன்பமுடன்
    பாடிட எண்ணும்! பறந்திட எண்ணும்!கூத்
    தாடிட எண்ணும் அகம்

    RépondreSupprimer