mardi 9 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 100]




காதல் ஆயிரம் [பகுதி - 100]
 
876.
கல்லூரி செல்கின்ற காட்சியினைக் கண்டுள்ளம்
தள்ளாடிச் சொக்குதடி தண்ணிலவே! - அல்லாடி
நிற்கின்றேன்! ஒவ்வோர் நிமிடமும் உன்னழகில்
கற்கின்றேன் காதல் கலை!

877.
பல்லாடும் என்றன் படும்முதுமைக் காலத்தும்
உள்ளாடும் என்றன் உணர்வோங்கும்! - சொல்லாடும்
வல்லவளே! என்னுயிரை மெல்ல வளைத்தவளே!
மல்லிகையே இன்றேன் வழங்கு!

878.
கண்ணாடி போட்டுவரும் காட்சியைக் கண்ணுற்றுப்
பெண்ணாடி நின்று பிதற்றிடுவாள்! - விண்ணாடி
நீந்தும் நிலவாக மின்னும் அவளழகை
ஏந்தும் கவியென் எழுத்து!

879.
யாரும் அறியாமல் நீ..கொடுத்த இன்பரிசுக்கு
ஊரும் உலகும் இணையாமோ? - நாரும்
மணக்கும்,நற் பூவால்! மகாகவியே! நெஞ்சம்
மணக்கும்,உன் பாவால் மலர்ந்து!

880.
பொங்கும் சிரிப்பாலும்! பூமுகத்தில் எப்பொழுதும்
தங்கும் சிரிப்பாலும் தாக்குகிறாய்! - தங்கமே!
எங்கும் எதிலும் தெரிகின்றாய்! உன்னிடத்தில்
தொங்கும் எனதுயிரைத் தூக்கு!

(தொடரும்)

8 commentaires:

  1. ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. வெண்பா வேந்தே! உங்கள் தண்பா கண்டேன்! தனி உவகை கொண்டேன்! வாழ்த்து!

    RépondreSupprimer
  3. // கல்லூரி செல்கின்ற காட்சியினைக் கண்டுள்ளம்
    தள்ளாடிச் சொக்குதடி தண்ணிலவே! - அல்லாடி
    நிற்கின்றேன்! ஒவ்வோர் நிமிடமும் உன்னழகில்
    கற்கின்றேன் காதல் கலை! //

    அழகான வரிகள்...

    RépondreSupprimer
  4. பொங்கும் சிரிப்பாலும்! பூமுகத்தில் எப்பொழுதும்
    தங்கும் சிரிப்பாலும் தாக்குகிறாய்! - தங்கமே!
    எங்கும் எதிலும் தெரிகின்றாய்! உன்னிடத்தில்
    தொங்கும் எனதுயிரைத் தூக்கு!

    கலக்கல் கவிதைகள்...
    மரபுக் கவிதையில் நெஞ்சை அள்ளுகிறீர்கள்.

    RépondreSupprimer
  5. கவிதைகளனைத்தும் அருமை ஐயா. மிகவும் இரசித்தேன்.

    RépondreSupprimer
  6. அட அட.. என்னவெனச் சொல்வது? வாழ்த்துவதற்கு வார்த்தையைத் தேடவேண்டிதாயுள்ளது கவிஞரையா!
    அல்லாடி, தள்ளாடி நல்ல சொல்லாடல்... ரசித்தேன்.
    மிக மிக அருமையாகவுள்ளது உங்கள் வெண்பாக்கள்!

    அத்துடன் இது காதலாயிரத்தின் 100வது பதிவா?... சிறப்புத்தான். அத்தனைக்கும் என் மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer

  7. நுாற்றின் பதிவில் நுவன்றுள்ள செய்திகள்!தேன்
    ஆற்றின் குளியல் அளித்தனவே! - ஈற்றின்
    அடிகள் அனைத்தும் அமுதுலகைக் காட்டும்
    படிகள்! உடனே படி!

    RépondreSupprimer
  8. ஆஹா காதலில் பள்ளி !ம்ம் மிகவும் ரசித்தேன் ஐயா!

    RépondreSupprimer