என்னுயிர்த் தாயே!
[குறள் வெண்பா]
1.
அன்னைத் தமிழே! அடியேனின் நாப்படகில்
உன்னைச் சுமப்பேன் உவந்து!
2.
கன்னல் தமிழே! கடையனென் நாச்செருப்பை
உன்றன் அடிக்கே உடுத்து!
3.
வண்ணத் தமிழே! வளமாய்என் நாமீதும்
எண்ணம் இனிக்க இரு!
4.
கொஞ்சும் தமிழே! குழந்தையென் நாமலரில்
நெஞ்சம் நிறைந்து நெகிழ்!
5.
இன்பத் தமிழே! எளியேனின் நாஅமர்ந்து
துன்பம் அனைத்தும் துடை!
6.
கோலத் தமிழே! குளறுமென் நா..திருத்திக்
காலப் புகழைக் கணி!
7.
சந்தத் தமிழே! சருகனென் நா..தழைக்க
வந்து தருவாய் வளம்!
8.
மின்னும் தமிழே! விரியிலை நாஎழுத்தைத்
தின்னும் சுவையாய்த் திரட்டு!
9.
சங்கத் தமிழே! தளிர்தாழை நாவணிந்து
பொங்கும் கருத்தைப் பொழி!
10.
தங்கத் தமிழே! தவறின்றி நா..பயிலத்
தங்கி இருந்தெனைத் தாங்கு!
அனைத்து தமிழும் அற்புதம் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
போற்றும் தமிழின் புகழைத் தொகுத்துரைத்தல்
காற்றின் அளவெனக் காண்!
என்னுயிர்த் தாயே என்றே குறளில்
RépondreSupprimerபின்னிய சீர்கள் பெருமை மின்னும்
மொழியில் சொல்லிய உவமை விந்தை
வழி காணவென் விழிகள் மலர்ந்து!
மிக மிக அருமையான குறள் வெண்பாக்கள் ஐயா!
அதில் கூறப்பட்ட பொருள் அற்புதம்.
நாப்படகு, நாச்செருப்பு, நாமலர், சருகு, விரியிலை, தளிர்தாழை
இப்படி ஒவ்வொரு குறளிலும் ’நா’வினை மிகச்சிறப்பாக உவமித்துள்ளீர்கள்!
மீண்டும் மீண்டும் படித்துப்பார்த்து மகிழ்கின்றேன்.
ஐயா!..
உங்களால் எம் மொழி வாழ்கிறது! இன்னும் வாழும்!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!
Supprimerவணக்கம்!
நாமீது நற்றமிழ் அன்னை நடைபுரிந்தால்
பாமீது பொங்கும் பயன்!
கவிஞரையா!...
RépondreSupprimerஅன்னைத் தமிழ், கன்னல் தமிழ், வண்ணத் தமிழ், கொஞ்சும் தமிழ், கோலத் தமிழ்
சந்தத் தமிழ், சந்தத் தமிழ், மின்னும் தமிழ், சங்கத் தமிழ், தங்கத் தமிழே!
குறள்களில் எத்தனை விதமாய் உங்களிடம்
குழைகிறது எங்கள் செல்லத் தமிழ்!
அருமை! வாழ்த்துக்கள்!
Supprimerவணக்கம்!
வண்ணம் பலபல மின்னும் வளா்தமிழை
எண்ணம் இனிக்க இயப்பு!
குறள் வெண்பாவில் தமிழ்தாயின் சிறப்புக்கள் சிறப்பு! அருமை! நன்றி!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தமிழின் சிறப்பைத் தருகின்ற பாட்டை
அமிழ்தின் சுவையாய் அருந்து!
RépondreSupprimerமுன்னைப் பயனாய் முடிதரித்து ஆள்கின்றீா்!
அன்னைத் தமிழின் அடிகளையே! - பொன்னை
நிகா்த்த குறட்பாக்கள்! நெஞ்சத் துயரைத்
தகா்த்த குறட்பாக்கள் தந்து!
Supprimerவணக்கம்!
என்னைப்போல் வெண்பாவை ஏற்றமுறப் பாடுகின்ற
உன்னைப்போல் இவ்வுலகில் யாருள்ளார்? - பொன்னைப்போல்
மின்னும் கருத்தேந்தி விஞ்சும் அணியேந்திப்
பின்னும் கவிதையுன் பீடு!
RépondreSupprimerவணக்கம்!
என்னுயிர்த் தாயை இசைத்த குறட்பாவை
உன்னுணவாக உண்பாய் உவந்து!