jeudi 4 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 99]




காதல் ஆயிரம் [பகுதி - 99]

871.
அவளிடத்தில் பேசிய அந்தமுதல் நாளில்
சுவையிடத்தில் என்னுயிர் சொந்தம்! - தவமிடத்தில்
தங்கும் சிலநொடியும் தாரகையின் தேன்மொழி
பொங்கும் மனத்துள் புகுந்து!

872
உன்னை விரும்புகிறேன் என்று..நீ சொன்னவுடன்
என்னை மறந்தேன்! இனியவளே! - பொன்னை
நிகர்த்தவளே! என்னுள் நிலைத்தவளே! தூய
அகத்தவளே! தந்தாய் அமுது!

873.
நல்லிரவில் கண்விழித்து நான்பிறந்த வாழ்துரைத்தாய்!
சொல்..இரவில் ஓர்பா சுவையென்றாய்! - நில்..இரவே
என்று நெகிழ்ந்தாடும் இன்பக் கனவுகள்!
என்றும் இனிக்கும் இரவு!

874.
கைவிரல் மோதிரத்தைக் காதல் பரிசாக்கி 
மைவிழி காட்டி மயக்கினையே! - தை..வளம்
இட்டு மகிழ்கின்றேன்! இன்மணக் காட்சிகளைத்
தொட்டு மகிழ்கின்றேன் தோய்ந்து!

875.
நாள்முழுதும் உன்னினைவில் நான்நனைந்து நிற்கின்றேன்!
தோள்முழுதும் ஓர்உணர்வு தோன்றுதடி! - கேள்..முழுதும்
பார்க்கவும் பேசவும் பாடாய்ப் படுகின்றேன்!
சேர்க்க வழிசொல் தெளிந்து!

(தொடரும்)

10 commentaires:

  1. அடடா... அருமை அருமை.
    தொடர்கிறேன்....

    த.ம.2

    RépondreSupprimer
  2. காட்சிகள் கண் முன் தெரிந்து மகிழ்ந்தேன்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    RépondreSupprimer
  3. கலக்கல்... அருமை...
    கவிதை வரிகளில் தமிழ் நர்த்தனமாடுகிறது.

    RépondreSupprimer
  4. நாளுமொரு செய்தியை நீர்தரும் பாக்களில்
    மீளுகிற நினைவினை மீட்டி கேளுமிதை
    தோழரே தெள்ளுத் தமிழ்பா வென்றீர்
    மூழுகிற தேஎம் உணர்வும் சேர்ந்தே!

    வணக்கம் ஐயா!
    அருமை. அழகு சொற்களில் நல்ல மலரும் நினைவுகள்!
    அற்புதம். ரசிக்கின்றேன்.

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    த ம.4

    RépondreSupprimer
  5. வாவ்... ஒவ்வொன்றும் ஒரு முத்துக்கள்..

    RépondreSupprimer
  6. எத்தனை கொடுத்து வைத்தவர் நீங்கள் ஐயா. உங்களை விரும்புவதாக தமிழே சொன்ன பிறகு வேறென்ன வேண்டும்.

    RépondreSupprimer
  7. காதல் ஆயிரத்தின் கடைசி பதிவுகளில்
    கனிகின்ற காதல்பா காட்டி நிற்கும்
    நிகழ்வெல்லாம் எந்தன் நினைவுக்குள் சுழியோடி
    மகிழ்கிறதே மனதில் மறுபடிம் மடிதேடி...!

    மிக அருமை கவிஞரே
    கடந்த பதிவுகளை படிக்க மறந்த பாவியானேன் விரைவில் எல்லாம் படித்திடுவேன்....!

    வாழ்கவளமுடன் வளர்க உங்கள் தமிழ் பணி....

    RépondreSupprimer
  8. கைவிரல் மோதிரத்தைக் காதல் பரிசாக்கி
    மைவிழி காட்டி மயக்கினையே!........

    இந்த எதுகை, மோனை சொற்களை எப்படி புடிக்கிறீங்க....! சொற்சுவை அருமை...

    நம்ம தளத்தில்...

    அவள்- ஆறாவது பெருங்காப்பியம்
    http://iravinpunnagai.blogspot.com/2013/07/blog-post_4.html

    RépondreSupprimer
  9. மிகமிகச் சுவைததும்பும் பாக்கள்.
    வாழ்த்துக்கள் கவிஞரையா!

    RépondreSupprimer

  10. என்னென்பேன்? ஏதென்பேன்? இன்காதல் வெண்பாவை!
    தின்னென்பேன் பாடும் திறனோங்க! - இன்ப
    இயலென்பேன்! ஈடிலாக் கவிதை விளையும்
    வயலென்பேன்! உன்றன் வலை!

    RépondreSupprimer