samedi 13 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 102]




காதல் ஆயிரம் [பகுதி - 102]

886.
வில்லழகா! விந்தைமிகு பேரழகா! என்ராமா!
வெல்லழகாய் மின்னும்என் வேல்விழிபோல் - நல்லழகா
உன்சீதை? உண்மை உரைப்பாய்! அவள்பெயரே
இன்போதை ஏற்றும் எனக்கு!

887.
அரங்கன் அடியை அணுவும் அகலாது
இரங்கும் எனதுயிர்! காதல் - சுரங்கமாம்
என்னவள் நெஞ்சுள் இடம்பிடிக்க! இப்..பா
பொன்னவள் நெஞ்சுள் புகும்!

888.
அந்தச் சிரிப்பழகு என்னகத்தைக் கொல்லுவதேன்?
சொந்தம் உரைத்துச் சுருட்டுவதேன்? - எந்தப்
பொழுதும் என்னுள் புகுந்து புரட்டுவதேன்?
எழுதும் கவிபோல் இனித்து!

889.
அந்தச் சிரிப்பொலி அப்படியே என்னுயிரைப்
பந்தாடிச் செல்லும்! பகடையிடும்! - சந்த
மழைபொழியும்! என்றுமதைக் கேட்கமனம் ஏங்கும்!
இழைபுனையும் வண்ணம் இணைந்து!

890.
உன்னால் இருக்கின்றேன்! உன்குரல் கேட்டவுடன்
துன்னாள் கழிந்த துணிவுறுவேன்! - என்..நா
முணங்கிடும் மந்திரம் உன்பெயர்! மோகம்
இணங்கிடும் இன்பம் எனக்கு!

(தொடரும்)

9 commentaires:

  1. கவி மழை பொழியும் தங்கள் ஆற்றல பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
    ஐயா! யாப்பிலக்கணம் கற்றுத் தருவீர்களாயின் பலரும் பலன் அடைவார்கள்

    RépondreSupprimer
  2. வில்லழகா! விந்தைமிகு பேரழகா! என்ராமா!
    வெல்லழகாய் மின்னும்என் வேல்விழிபோல் - நல்லழகா
    உன்சீதை? உண்மை உரைப்பாய்! அவள்பெயரே
    இன்போதை ஏற்றும் எனக்கு!

    அருமையான பாடல். ரசித்து மகிழ்ந்தேன்.


    RépondreSupprimer
  3. சிரிப்பழகு வரிகள் மனதை மகிழ்வித்தது... வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  4. எப்படித்தான் உங்கள் கற்பனை சிறகுகள்
    விரிகின்றனவோ தெரியவில்லை !
    காதல் கசிகிறது .எங்கள் இதயமும் உருகுகிறது !.

    RépondreSupprimer
  5. அந்தச் சிரிப்பழகு என்னகத்தைக் கொல்லுவதேன்?
    சொந்தம் உரைத்துச் சுருட்டுவதேன்? - எந்தப்
    பொழுதும் என்னுள் புகுந்து புரட்டுவதேன்?
    எழுதும் கவிபோல் இனித்து!

    வணக்கம் !
    இன்பக் கவிதை வடித்து நல் இதயம் போற்ற
    வாழ்த்துகின்றேன் ஐயா .இங்கிருந்து தான்
    புறப்பட்டதோ இத்தனை கவிதைகளும் என வியந்து !

    RépondreSupprimer

  6. கற்பனைக்கு எட்டாக் கருத்தைக் கவியாக்க
    நற்றுணை செய்தாள் நறுந்தமிழாள்! - பொற்கவியே!
    கற்றவா் போற்றும் கனித்தமிழை உன்போன்றே
    உற்றவா் யாரோ உரை!

    RépondreSupprimer
  7. // அந்தச் சிரிப்பழகு என்னகத்தைக் கொல்லுவதேன்?
    சொந்தம் உரைத்துச் சுருட்டுவதேன்? - எந்தப்
    பொழுதும் என்னுள் புகுந்து புரட்டுவதேன்?
    எழுதும் கவிபோல் இனித்து! //

    ஆகா... சிரிப்பழகிற்கும் சித்தரித்த கவியழகு!
    பிரமிக்கவைக்கின்றது ஐயா!
    வார்த்தைகள் அத்தனையும் உங்களிடம் வசப்பட்டுவிட்டது.
    உங்கள் கவிகளில் எங்கள் மனங்கள் வசப்பட்டதைப்போல...

    சொல்லுக்குச்சொல்லு அற்புதத்தை அள்ளித்தெளிக்கின்றீர்கள்!
    நனைந்து மனம் சிலிர்க்கின்றோம் நாங்கள்!

    வாழ்த்துக்கள் ஐயா...!!! தொடருங்கள்!

    RépondreSupprimer