பருவம் மின்னிடும் பாவை
பருவம் மின்னிடும் பாவையின் பேரெழில்
பாய்ச்சிடும் மின்சாரம்!
உருவம் குன்றிட உள்ளுயிர் வாடிட
ஓங்குது சுகபாரம்!
பெருகும் காதலால் பேசிடும் கிளிகள்
பிணையுது வயல்ஓரம்!
அறுகம் புல்லென ஆசைகள் படருதே
அவள்மனை வெகுதூரம்!
என்ன சொல்வதோ? எப்படிப் சொல்வதோ?
இனியவள் மனஞ்சேர!
வண்ணம் பற்பல! எண்ணம் பற்பல!
என்னவள் எழில்பாட!
கன்னல் முற்றிய கனிகளைப் பூங்குயில்
கடித்திடச் சுவையேற!
பின்னல் கூந்தலில் என்னையும் பின்னுவாள்
எங்கினி நான்ஓட!
ஏற்றம் ஏறிய இளையவன் இசைமழை
ஏந்திடும் பொற்சந்தம்!
ஆற்றின் வெள்ளமாய் அன்னவள் அகத்தினில்
அரித்திட வளம்சிந்தும்!
காற்றில் நீந்திடும் கவிஞனைக் கவிதையால்
கட்டிய கலைப்பெண்ணே!
சாற்றிப் போற்றிய தமிழ்மொழி அமுதினைத்
தந்திட வா..முன்னே!
சோலை பூத்திடும் சூரிய மலர்களில்
சுந்தர முகம்மின்னும்!
ஆலை நெய்திடும் ஆடையைப் போலவே
அவள்விழி எனைப்பின்னும்!
மாலை சாய்திட மன்மதன் வந்திட
மல்லிகை மணம்வீசும்!
சேலை ஓய்ந்திடச் செங்கனி சுவைதரச்
சேர்ந்தவர் உயிர்பேசும்!
04.03.2010
அய்யா !
RépondreSupprimerரசம்னா...!
காரம்!
உங்கள்-
கவிதையோ-
இனிக்கும்-
காதல் ரசம்!
Supprimerவணக்கம்!
காரம் இதுவன்று! கன்னல் தமிழ்ச்சோலை!
பாரம் குறையும் படி!
சந்தம் கொஞ்சிடச் சாகசம் புரிந்திட
RépondreSupprimerசாதனை தான்பேசும்!
தந்தோம் தானன தந்தோம் தானன
தமிழும் குளிர்ந்தாடும்!
த.ம.2
Supprimerவணக்கம்!
சந்தம் ஒலிரும் தமிழ்மகள் பார்வையில்
சொந்தம் ஒளிரும் சுடா்ந்து!
என்ன சொல்வதோ? எப்படிப் சொல்வதோ?
RépondreSupprimerஇனியவள் மனஞ்சேர!//சீக்கிரம் சொல்லி விடுங்கள்
Supprimerவணக்கம்!
வள்ளியின் பேரழகைச் சொல்லுல் எளிதாமோ?
துள்ளிக் குதிப்பேன் தொடா்ந்து!
மின்னும் வரிகளையும் ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
மின்னும் வரிகளை மீட்டும் மனத்துக்குள்
பொன்னும் பொருளும் புகும்!
மின்னிடும் பாவை மனதை கட்டி இழுக்கிறாள்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
மின்னிடும் பாவையை எண்ணினால் போதுமே
பின்னிடும் இன்பம் பிணைந்து
ஐயா வணக்கம்!
RépondreSupprimerபாவலர் நீங்கள் பாடிய பாக்களில்
பாமகள் தமிழ்தஞ்சம்!
காவலர் எம்மொழி காப்பவ ரெனவே
கூவிடும் மனம்துள்ளும்!
உங்கள் பாக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறதையா!
புலியைப்பார்த்து பூனையும் கோடுபோட்ட கதையாக
ஆர்வத்தில் அரற்றியதை மன்னியுங்கள்!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!
Supprimerவணக்கம்!
விண்ணிலா போன்று வியப்பூட்டி மின்னும்என்
பெண்ணிலா என்னுள் பிணைந்து!
ஐயா.... இதை எப்படிச் சொல்வது..
RépondreSupprimerஆச்சரியத்தைக் கேட்கிறேன்....
உங்கள் பாக்களினால்...
இமை இழந்து அகலத் திறந்த விழிகளும்
வேறு நினைவு மறந்த மனமுமாகிவிட்டதையா!
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!
Supprimerவணக்கம்!
மாங்கனி போன்று மணக்கும் கருத்தெழுதிப்
பூங்ககொடி மின்னும் பொலிந்து!
ஆற்றின் வெள்ளமாய் தங்கள் வரிகள் அற்புதம் செய்கின்றன ஐயா.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
ஆற்றின் பெருக்கை அளிக்கின்ற செந்தமிழைப்
போற்றி பணிந்தேன் புகழ்ந்து!
ரசனையான கவிதை வரிகள்...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
சுவையான பாக்களைச் சூட்டுகிறேன்! என்றும்
அவையாவும் நிற்கும் அகம்!
RépondreSupprimerவணக்கம்!
பருவம் மிளிர்ந்திடும் பாவையை எண்ணி
உருவம் குலைந்தே உழன்றேன்! - பெருகும்என்
காதல் கவியாகும்! கன்னல் கனியாகும!
ஓதல் உயிரின் உயா்வு!
வணக்கம்
RépondreSupprimerகவிஞர் ஐயா
ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது படித்தேன் ரசித்தேன்
சோலை பூத்திடும் சூரிய மலர்களில்
சுந்தர முகம்மின்னும்!
ஆலை நெய்திடும் ஆடையைப் போலவே
அவள்விழி எனைப்பின்னும்!
என்ன .என்ன சொல்ல வார்தைகள் இல்லை…….. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
ஆசைப் பெருக்கில் அளித்த அடியாவும்
ஒசை பெருக்கும் ஒலித்து!
RépondreSupprimerஎன்ன எழுதுவதோ? எப்படி சொல்லுவதோ?
கன்னற் கவிகளின் கட்டழகை! - இன்னும்
கொடு..என்று கெஞ்சிகிறேன்! கோலத் தமிழழகைத்
தொடு..என்றும் நன்றே சுவைத்து!