mardi 16 juillet 2013

பாரதி இன்று வந்தால்...




பாரதி இன்று வந்தால்...

கொளுத்தும் விழிகள்! கவியமுதைக்
     கொடுக்கும் திருவாய்! புவியழுக்கை
வெளுக்கும் சிந்தை! புரட்சியினை
     விளைக்கும் சொற்கள்! தமிழ்த்தேரைச்
செலுத்தும் கைகள்! சிந்துப்பா
     செழிக்கும் உள்ளம்! பாரதியே
மளுக்கு மளுக்(கு) என்றெதிரிகளை
     ஒடிக்கும் வன்மை பெற்றவனே!

திம்திம் என்று ஒலிக்கிறது!
     திசைகள் நான்கும் தமிழ்வாசம்!
நம்..நம்.. என்றே என்னரம்பு
     நன்றே ஊறிப் புடைக்கிறது!
கும்..கும்.. இருட்டு அகன்றோட
     குதித்தே ஆடும் பாரதியே
பும்..பும்.. மாட்டு மாந்தர்களைப்
     பொசுக்க மீண்டும் வந்தனையோ!

எல்லோ ரும்இந் நாட்டுடைய
     மன்னர் என்று மொழிந்திட்டாய்!
எல்லோ ரும்பேர் தலைவரானார்!
     எங்கும் சங்கம்! தொண்டனில்லை!
அல்லா! கிருத்து! சிவாவென்றே
     அழகாய்த் தமிழர் பிரிந்தள்ளார்!
உள்ளம் கொதிக்கும் பாரதியே
     உலகில் தமிழன் உயர்வானோ?

அச்சம் இல்லை! இல்லையென
     அதிரும் வண்ணம் அரைந்திட்டாய்!
மெச்சும் வாழ்க்கை அடிவருடி
     விழுந்து கிடந்தால் கிடைத்திடுமோ?
பச்சைத் தமிழன் பதவிபெறப்
     பணிந்து உரிமை இழப்பதுவோ?
எச்சம் இவனைத் துச்சமென
     எரிப்பாய் மீண்டும் பாரதியே!

ஒன்று பட்டால் வாழ்வுண்டு!
     என்று தமிழர் உணர்வாரோ?
அன்று தொடங்கி இன்றுவரை
     அடிமை வாழ்வு! தமிழினத்தை
நின்று காக்க நம்பெரியார்
     நெடிது உழைத்தார்! விழித்தோமா?
நன்று! தீது பிரித்துணரும்
     ஞானம் அளிப்பாய் பாரதியே!

பாப்பா பாட்டில் சாதியெலாம்
     இல்லை! இல்லை! எனப்பகர்ந்தாய்!
பூப்பா பாடி நெறிசொன்னாய்!
     புவியில் நீதி கற்றோர்கள்
தாட்..பூட போட்டுத் தம்சாதி
     தகவாய் வளர்க்கக் காண்கின்றேன்!
கேட்பார் இல்லை! பிறப்பொக்கும்
     கீர்த்தி உரைப்பாய் பாரதியே!

பட்டம் சூட்டி, நலந்தரும்
     சட்டம் தீட்டிப் பெண்ணுயரத்
திட்டம் போட்டு வழிவகுத்தாய்!
     தீராக் கொல்நோய் ஒழிந்ததுபோல்
வட்டம் உடைத்தே உயர்வாழ்வை
     வகுத்தார் பெண்கள்! தமிழ்ப்பண்பை
முற்றும் மறந்த நிலையேனோ?
     சற்றே சாற்றித் திருத்துகவே!

தன்னின் நலமே எண்ணுபவன் 
     தமிழின் நலத்தை நினைப்பானோ?
கண்ணின் பார்வை, தெளிந்தொளிரும்
     கருத்தின் பார்வை செலும்வரையில்
எண்ணிப் பார்த்தேன்! இன்றமிழை
     ஏந்திக் காப்பார் உள்ளாரோ?
என்னின் உயிரே! பாரதியே!
     ஏனோ உனைப்போல் எனைச்செய்தாய்!

இமய உச்சித் தலைப்பாகை!
     பரிதி எழும்பும் மலைப்புருவம்!
அமைந்த மீசை நம்பகையை
     அழிக்க எடுத்த இருவாள்கள்!
எமையிங் கிணைந்த பொய்யர்யார்?
     இன்பத் தமிழின் மெய்யர்யார்?
உமையின் மைந்தா! பாரதியே!
     உண்மை உரைத்த(து) உன்வரவே!

2009


8 commentaires:

  1. பாரதி இன்று வந்தால் வருந்துவான்
    மீளாத் துயரில் மிதப்பான்
    காகிதம் செய்வோம் என்றான் பாரதி
    இன்று கலவரம் அல்லவா செய்கிறார்கள்
    சாதிகள் இல்லையடி பாப்பா என்றான்
    இன்று சாதிதானே கலவரத்தின் மையம்

    RépondreSupprimer
  2. வணக்கம் !பாரதி வருவது கனாவகினும் கவிதையில் விழைந்த நற் கருத்துக்கள்
    அருமை !!!!.......வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  3. சரியாக அருமையாகச் சொன்னீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. அன்று தொடங்கி இன்றுவரை
    அடிமை வாழ்வு! தமிழினத்தை///இன்றைய நடைமுறை வாழ்கையை மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்

    RépondreSupprimer
  5. பாரதி இன்று வந்தால்....

    ஆமாம் ஐயா! இன்றிருந்தால், இன்றுவந்தால் எத்தனையோவிற்கு நல்ல பதில் கிடைத்திருக்கும்...

    ஆனாலும் ஒன்றையா அந்த பாரதியே இன்று எங்கள்முன் பாரதிதாசன் ஐயாவாக நீங்கள் இருக்கின்றீர்களே...
    இதைவிட இல்லாததற்கு ஏங்கவா வேண்டும்.
    உங்கள் கவிகள் சாற்றுகின்றன சாட்டையடியாக சாடுகின்றன...
    அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  6. நற்கவி நினைவதை நெஞ்சதில் நிறுத்தி
    சொற்கணை தொடுத்து சுள்ளெனத் தாக்கி
    விற்பதற் கில்லை வீரம தைதமிழா
    செற்றிட முன்செய் என்றீர் செம்மையே!

    உறைக்கின்றதையா உங்கள் கவிதை!
    நீங்களும் உங்கள் கவிகளும் இருக்கும்போது மீசைக்கார பாரதி இல்லையென்ற குறை எமக்கில்லையே ஐயா!...
    மிக மிக அருமை!!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer

  7. பாட்டுக்கோர் பாவலன் பாரதிபோல் பா..படைக்க
    நாட்டுக்கோர் பாவலன் நன்கெழுந்தால் - வேட்டையிடும்
    கள்ளநரிக் கூட்டங்கள் காடடையும்! நல்லோரின்
    உள்ளநெறி ஓங்கும் உயா்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மாட்டுக்கும் நிற்கும் மரத்திற்கும் பூசைசெய்வார்!
      நாட்டுக்கு நன்றே நலமென்பார்! - வீட்டுக்குள்
      நாய்வளா்ப்பார்! வெள்ளை எலிவளா்ப்பார்! நாம்அமா்ந்தால்
      போய்த்துடைபார்! வீணரைப் போக்கு!

      Supprimer