jeudi 18 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 105]






காதல் ஆயிரம் [பகுதி - 105]

[பதிற்று அந்தாதி]

901.
உலகெலாம் ஓங்கி அளந்தோன்! அழகின்
நலமெலாம் நல்கினான் உன்மேல்! - நிலத்தின்
மலரெலாம் தோற்க மணந்தரும் மாதே!
வளமெலாம் வாரி வழங்கு!

902.
வழங்கும் கவிகளை வஞ்சியுன் நெஞ்சம்
விழுங்கும்! விழிஇரண்டும் சொக்கும்! - முழங்கும்
படையென உன்றன் பருவமெனைத் தாக்கும்!
கொடையென முத்தம் கொடு!

903.
முத்தம் கொடுத்தால்!என் சித்தம் மயக்கமுறும்!
புத்தம் புதுஅமுதை உண்டுருளும்! - சத்தம்
இலாத இடம்தேடி! இன்கதை பாடி
நிலாவை அழைப்போம் நிலம்!

904.
நிலமாளும் தேவிபோல் என்கவி நெஞ்சத்
தளமாளும் தாரகையே! தந்தாய் - குலமாளும்
வண்ண வழிகளை! எண்ணம் இனிக்குதடி
நண்ணும் கனவில் நனைந்து!

905.
நனைந்தாடி மின்னும் நறுமலர்க் காட்சி
நினைந்தாடி ஏங்குமென் நெஞ்சம்! - எனைக்கோடி
எண்ணங்கள் இன்பூட்டும்! என்னவளே நீ..பார்க்கும்
வண்ணங்கள் வாழ்வின் வளம்!

906.
வாழ்வும் வளமும் அளிப்பவளே! நானுற்ற
தாழ்வும் அகன்றதடி! தண்ணிலவே! - சூழ்புகழ்
ஆனவளே! அன்பாம் அகத்தவளே! மின்னழகு
வானவளே! இன்பம் வழங்கு!

907.
வழங்கும் கொடைமுகம் கண்ட,பா வாணன்
விழுங்கும் சுவையை விளைத்தாய்! - பழங்கள்
அனைத்தும் உனைப்பார்த்து அலைந்திடுமே! உன்சொல்
இனிக்கும் அமுதுக் கிணை!

908.
இணையிலாப் பேரழகே! இன்பத்தின் ஊற்றே!
அணையிலா ஆசைகள் பாயும்! - துணையிலா
நாளோ யுகமாய் நகரும்! உனையெழுதும்
தாளோ தமிழின் தளம்!

909.
தமிழ்மணப் பாவை தரும்உரை யாவும்
அமுதென நன்மை அளிக்கும்! - குமுத
மலர்க்காடு பூத்தொளிரும்! மங்கையுரு கண்டென்
உளக்காடு பூத்தொளி ரும்!

910.
பூத்தாடும் சோலையெனப் போதை கொடுப்பவளே!
கூத்தாடும் என்மனம்! கோதையே! - வேர்த்திங்(கு)
உருகுமே என்னகம்! உன்னுருவைச் சுற்றி
உருளுமே என்பாட்(டு) உலகு!

(தொடரும்)

7 commentaires:

  1. சொக்கத்தான் வைத்து விடுகிறது வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா.... நன்றி....

    RépondreSupprimer
  2. இணையிலா கவியழகு ஐயா தங்களுடையது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர்ந்து வரவில்லை. நேரம் இருக்கும் போது முந்தைய பதிவுகளை வந்து படிக்கிறேன். நன்றிங்க. ஐயா.

    RépondreSupprimer
  3. அரும்பொருள் தந்த அந்தாதி யருமை!
    கரும்பிடங் கிடையாக் கன்னற் றேனிமை!
    தருங்கவி உம்மால் தமிழ்பெறும் பெருமை!
    விரும்பியே கற்றிட விளைந்திடுந் திறமை!

    அதிசயிக்க வைக்கும் அழகு அந்தாதி!
    அந்தமுமாதியுமாக சீர்கள் இணைந்த விதம் கற்கும் ஆவலைத்தூண்டுகிறது.

    மிகமிக அருமை!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses
    1. ஐயா வணக்கம்!...

      இதற்கு முன்பும் பதிவொன்றில் தங்களால் தரப்பட்ட மின்விழி, இங்கும் தந்துள்ள மின்னழகு என்ற சொற்களின் விளக்கத்தினை அறிய விரும்புகிறேன்.

      மேலும்...
      அந்தாதி பாக்களின் இலக்கணத்தைக் குறித்தும் விளக்கமதை அறிய ஆவலுடையேன் ஐயா!.

      இத்தகைய இலக்கண விளக்கங்களைப் பெறுவதால் சரியாகவும் தரமாகவும் கவிப்படைப்புகளை நாம் கற்கவும் முயலவும் முடியும்.

      இவற்றை எமக்குக் கற்றுத்தரவேண்டி உங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

      மிக்க நன்றி!

      Supprimer
  4. அருமையான வார்த்தைகளால் தொடுத்த அற்புதமான கவிதைகள்...
    வாழ்த்துகள் கவிஞரே...

    RépondreSupprimer
  5. அந்தாதி அறிந்ததுண்டு. இன்று இங்கு உங்களின் பத்துப்பாக்களும் அந்தாதி நடையில் அற்புதமாக இருக்கின்றது. இத்தனை சிறப்பா இதற்கென வியப்பாக இருக்கிறது.
    ரசிக்கின்றேன்... வாழ்த்துக்கள்!

    தொடர்ந்து தாருங்கள் ஐயா!

    RépondreSupprimer

  6. சொக்கும் வரிகளின் சொந்தமே! நீயிங்குக்
    கக்கும் குரலும் கவிபேசும்!- ஏக்கி..நான்
    உன்போல் கவியெழுத ஏங்குகிறேன்! ஒண்டமிழைப்
    பொன்போல் இனிதே புசித்து!

    RépondreSupprimer