lundi 29 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 110]




காதல் ஆயிரம் [பகுதி - 110]


931.
செங்கரும்பே! செந்தேனே! சிந்தை சிலிர்க்குதடி!
சங்கழகே! தண்மலரே! சந்தமிடும் - தங்கமே!
ஊடல் ஒழித்தே உருகுமென் உள்ளத்துள்
கூடல் கொடுப்பாய் குளிர்ந்து!

932.
சின்ன குழந்தைபோல் என்முன் சிரிக்கின்றாள்!
என்ன அழகவள்? ஏங்குகிறேன்! - கன்னம்
கவிபிறக்கும் காதல் களஞ்சியம்! அங்கே
குவிந்திருக்கும் இன்பம் குழைந்து!

933.
கொய்யாப் பழச்சாறே! கோதையே! உன்னழகில்
நெய்யாய் உருகுதடி என்னெஞ்சம்! - மெய்முழுதும்
சூடேறும்! பின்னே குளிரேறும்! சூதறியேன்!
ஏடேறும் இன்தேன் எழுத்து!

934.
தேனலையில் நீந்தித் திளைக்கின்றேன்! இன்பமுடன்
வானலையில் நீந்தி வருகின்றேன்! - மானழகுப்
பார்வை படைப்பவளே! பாவலனை வென்றிடவோ
கார்..மை எழுதும் கணக்கு!

935.
என்னையே எண்ணி இருக்கின்றாய்! என்னவளே
உன்னையே எண்ணி உருகுகிறேன்! - முன்னையே
போட்ட முடிச்சென்பேன்! நம்முறவு பூத்தொளிரும்
தோட்ட அழகென்பேன் தோய்ந்து!

(தொடரும்)

9 commentaires:

  1. உருக வைக்கும் வரிகளை ரசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    RépondreSupprimer
  2. ரசித்தேன்.. அத்தனையும் அழகு...

    RépondreSupprimer
  3. அத்தனை சீர்களும் அழகான மோனை!
    இத்தனை பாக்களில் இருக்கிறதே! சித்தம்
    கிறங்குதே! செந்தமிழ்க் கிள்ளை மொழியில்!
    உறங்குமோ? மனம் உணருதே நன்கு!

    ஐயா!...
    அனைத்துப் பாக்களும் மிக அருமை!

    முதலாம் வெண்பாவில் (இல 931) ஒவ்வொரு அடியிலும் வருகின்ற நான்கு சீர்களும் ஒரே மோனையில் மிகமிக அழகாக இருக்கின்றன.
    எத்தனை திறமை ஐயா!... வியப்புத் தீரவில்லை எனக்கு!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
  4. காதற் கவிதைகளில்தான் எங்கள் மொழியின் சிறப்பு மேலோங்கி இருக்குமோ?
    அத்தனைகளும் வரிகளும் சித்திரமாய் எண்ணத்தில் தோன்றுகின்றனவே.

    அதனைத் தொகுத்து இங்கே பாக்களாகத் தருகிறீர்கள். ரசிக்க வைக்கின்றீர்கள்!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  5. சின்ன குழந்தைபோல் என்முன் சிரிக்கின்றாள்!
    என்ன அழகவள்? ஏங்குகிறேன்! - கன்னம்
    கவிபிறக்கும் காதல் களஞ்சியம்! அங்கே
    குவிந்திருக்கும் இன்பம் குழைந்து!

    தித்திக்கும் காதல் ஆயிரம்
    தேன்சிந்தி வரவும் காரணம்
    கட்டழகு நாயகியின் கன்னமது
    மதுக் கிண்ணமோ சொல் மனமே ?:...:)

    வாழ்த்துக்கள் ஐயா.அருமையான கவிதைக்கு .

    RépondreSupprimer
  6. கண்டேன் கவிதைகளை! கெண்டேன் தேனின் சுவைதனை உண்டேன்!! விண்டேன்!

    RépondreSupprimer

  7. கோபுரத்தைக் கட்டுகின்ற கோல எழிலாகப்
    பாபுரத்தைக் கட்டுகின்ற பாவலனே! - மாபுரத்தைக்
    கண்டு களிக்கின்ற காட்சியென உன்கவியைக்
    கொண்டு களிக்கின்றேன் கூா்ந்து!

    RépondreSupprimer