mercredi 3 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 98]




866.
கவியிடத்தில் பாடக் கருத்தேங்கும்! இந்தப்
புவியிடத்தில் வாழஉயிர் ஏங்கும்! - செவியிடத்தில்
சின்னவளின் சின்னச் சிணுங்கலும் ஏங்குவதேன்?
என்னவள் ஏக்கம் இனிது!

867.
கொடிபின்னும்! பூச்சரத்தைக் கை..பின்னும்! கோல
அடிபின்னும் பாட்டினிலே! அன்பே! - மடி..பின்னிக்
கட்டிவரும் சேலையிலே காதல் எனைப்பின்னும்!
வட்டியுடன் முத்தம் வழங்கு!

868.
நாய்ஓடும்! வஞ்ச நரியோடும்! பொய்புரட்டில்
பேய்ஓடும்! சிற்றுயிராம் பேன்ஓடும்! - சேயவளே!
மான்ஓடும்! வண்ண மயிலோடும்! என்னிதயம்
தான்ஓடும் உன்னினைவைத் தந்து!

869.
பனிக்கூழ் உருகும்!இன் பாகுருகும்! முற்றிக்
கனித்தேன் கசிந்துருகும்! கண்ணே! - கனற்பட்டு
நெய்யுருகும்! தாள்போற்றி நெஞ்சுருகும்! உன்னால்என்
மெய்யுருகும் மெல்ல மெலிந்து!

870.
நல்ல மனம்பொழியும் நன்றியினை! நற்றமிழ்
சொல்ல அமுதச் சுவைபொழியும்! - வல்ல
உரைபொழியும் மேடை உயிர்நனைக்கும்! உன்கண் 
மரைபொழியும் இன்ப மழை!

(தொடரும்)

11 commentaires:

  1. கவியிடத்தில் பாடக் கருத்தேங்கும்! இந்தப்
    புவியிடத்தில் வாழஉயிர் ஏங்கும்! -//ஆஹா...எடுத்ததும் சிறப்பான வரிகள் .இந்த வரிகளைக் காண தினம் ஏங்கும்.அதற்காய் என் உயிர் தங்கும்.

    RépondreSupprimer
  2. மெய்யுருகும் காதல் வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  3. தங்களின் பார்வைக்கு :

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Moon-Blossom.html

    நன்றி...

    RépondreSupprimer
  4. ரசித்து உரத்துப்படிக்க
    நாவிற்கும் பயிற்சி
    மனதிற்கும் மகிழ்ச்சி
    படித்து ரசித்தோம்
    பொறாமையத் தவிர்க்க இயலவில்லை
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  5. உன்விழி
    மரைபொழியும் இன்ப மழை!...

    அனைத்து பாடல் வரிகளும், அழகாக உள்ளதய்யா!!!

    RépondreSupprimer
  6. தேன்சுவை தந்தது தமிழில் பாக்கள்
    தானிவை என்றால் தரமோ நான்
    சொல்வேன் இவையே அந்த வானவர்
    மெல்லென கடைந்த மிகுசுவை அமுதே!

    த ம.6

    RépondreSupprimer
  7. // நல்ல மனம்பொழியும் நன்றியினை! நற்றமிழ்
    சொல்ல அமுதச் சுவைபொழியும்! //

    சுவைதோய்ந்த உங்கள்கவி மழைப்பொழியக் கண்டு
    உளம் நனைந்து போனதையா!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer

  8. ஒவ்வொரு வெண்பாவும் ஓதும் மனத்தினைக்
    கவ்வி இழுத்துக் கதைபேசும்! - செவ்விய
    சீா்மணக்கத் தீட்டும் கவியழகா! செந்தமிழின்
    வோ்மணக்க வைத்தாய் விருந்து!

    RépondreSupprimer