காதல் ஆயிரம் [பகுதி - 101]
881.
அடக்கம் ஒளிரும் அகத்தவளே! என்னை
மடக்கும் மலர்க்கொடியே! மானே! - தொடர்ந்து
படிக்கும் கலையே!உன் பாவலன் முன்னே
நடிக்கும் நிலையை நகர்த்து!
882.
மனத்தினில் நாளும் மகிழ்ந்தாடி என்றன்
நினைவினில் நின்றாள் நிலைத்து! - கனவினில்
ஆட வருவாள்! அமுதத் தமிழ்ச்சுவையைச்
சூட வருவாள் தொடர்ந்து!
883.
எப்படி பெண்ணே..நீ இப்படி மின்னுகிறாய்?
துப்படி கண்ணார் தொலையட்டும்! - தப்படி
என்னிடம் கண்டாயோ? ஏனோ வெறுக்கின்றாய்!
உன்னிடம் ஏங்கும் உயிர்!
884.
அளவெடுத்துச் செய்தானோ? ஆசைகள் பொங்கும்
உளமெடுத்துச் செய்தானோ உன்னை? - வளர்மதியே!
வல்ல இறைவன் வடித்த அழகியலே!
மெல்லப் படிப்பேன் மிளிர்ந்து!
885.
என்னெஞ்சம் என்னவளே உன்னழகை நன்கருந்திப்
பொன்னெஞ்சம் ஆகிப் பொலிகிறது! - இன்னெஞ்சம்
பெற்ற இளையவளே! கற்ற கவிஉயிரை
முற்றும் பிடித்தாய் முறைத்து!
(தொடரும்)
எப்படி பெண்ணே..நீ இப்படி மின்னுகிறாய்?
RépondreSupprimerதுப்படி கண்ணார் தொலையட்டும்! - தப்படி
என்னிடம் கண்டாயோ? ஏனோ வெறுக்கின்றாய்!
உன்னிடம் ஏங்கும் உயிர்!
அடடா... அருமை அருமை...
என்னவென்று பாராட்ட? நீரெழுதும் இன்னழகைப்
பொன்னென்று காப்போம் புகழ்ந்து!
தொடரட்டும் உங்கள் காதல் வேட்டை.வாழ்த்துக்கள்
RépondreSupprimerகவிதையில் காதல் ரசம் கொட்டுகிறது...
RépondreSupprimerஅளவெடுத்துச் செய்தானோ? ஆசை பொங்கும்
உளமெடுத்துச் செய்தானோ உன்னை? - வளர்மதியே!
அருமையான வரிகள்.
காதல் வேட்டை தொடரட்டும்...
RépondreSupprimerவாழ்த்துகள் அய்யா...
Supprimerவணக்கம்!
காதலின் வேட்டையா? கன்னல் தமிழ்மொழியில்
காதலின் கோட்டையைக் கட்டுகிறேன்! - காதல்
பயிர்செழிக்கும் நல்லுரமாய்ப் நற்பயன் நல்கும்!
உயிர்செழிக்கும் என்றே உணா்!
ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...
RépondreSupprimer// மனத்தினில் நாளும் மகிழ்ந்தாடி என்றன்
RépondreSupprimerநினைவினில் நின்றாள் நிலைத்து! - கனவினில்
ஆட வருவாள்! அமுதத் தமிழ்ச்சுவையைச்
சூட வருவாள் தொடர்ந்து! //
கவிஞர் வேந்தே... நினைவில் நின்றாடும் அம்மாது தினமும் கனவுகளில் தடையின்றி உங்களிடம் வரவேண்டும். அப்போதுதான் அமுதத் தமிழ்ச்சுவையை நாங்களும் உங்களிடமிருந்து தொடர்ந்து பெறமுடியும்..
அருமை ஐயா அத்தனையும்..!! மனமார வாழ்த்துகிறேன்!
தொடருங்கள்..
RépondreSupprimerஇப்படிப் பாபடைத்தே எங்கள் உளம்மயக்க
எப்படிக் கற்றீா் எழிற்கவியே! - அப்படியே
உன்றன் அருந்தமிழை உண்டவா்கள் யாப்பழகில்
என்றும் கிடப்பார் இணைந்து!
Supprimerவணக்கம்!
இணைந்து மகிழும் இதயங்கள் தம்மை
பணிந்து மகிழும்பா வாணன்! - அணிகின்றேன்
உங்கள் கருத்துகளை ஒண்மணி மாலையென!
தங்கத் தமிழின் தயவு!