jeudi 1 août 2013

காதல் ஆயிரம் [பகுதி - 111]




காதல் ஆயிரம் [பகுதி - 111]

936.
உன்குரல் கேட்பதும் இன்பமடி! கற்பனையில்
இன்திரள் காண்பதும் இன்பமடி! - வன்திரள்
மார்புமுடி கோதி மயங்கும் மலர்விழியே!
சேர்ப்பு விதிகளைத் தீட்டு!

937.
என்மனக் காதலை ஏந்திநான் வந்திருந்தேன்!
உன்மனம் ஏனோ உறங்கியது! - என்னவனே!
வன்மனம் கொண்டவனே! காதல் தினமின்று!
பெண்மனம் இன்புறப் பேசு!

938.
என்னடி கோபம் எழிலரசி! உன்னுடைய
பொன்னடி பட்டமனை பூத்தொளிரும்! - இன்னடிகள்
பொங்கி வழியும் புலவன்என் நெஞ்சத்துள்!
தங்கி வழியும் தமிழ்!

939.
நீலநிற சேலையில் நின்னழகைக் கண்டவுடன்
காலநிலை எண்ணிநான் காத்திருந்தேன்! - கோலமுடன்
பக்கம் வரச்சொல்லிப் பாவை அழைத்தவுடன்
சொக்கும் நிலையே சுகம்!

940.
பல்லாடும் காலத்தே பாவலனே உன்பாட்டில்
சொல்லாடும்! சொக்கிச் சுவையாடும்! - வல்லதமிழ்
நல்லாடும் வண்ணம் நவில்கின்ற சொற்கேட்டு
அல்லாடும் என்றன் அகம்!

(தொடரும்)

7 commentaires:

  1. சுகமான சுவையான வரிகளை ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...

    RépondreSupprimer
  2. // சொல்லாடும்! சொக்கிச் சுவையாடும்//

    உண்மை ஐயா... உங்கள் சொல்லாடலில் சொக்கும் மனம் எங்களுக்கு!

    RépondreSupprimer
  3. என்னடி கோபம் எழிலரசி! உன்னுடைய
    பொன்னடி பட்டமனை பூத்தொளிரும்! - இன்னடிகள்
    பொங்கி வழியும் புலவன்என் நெஞ்சத்துள்!
    தங்கி வழியும் தமிழ்!

    வாழ்த்துக்கள் இன்று போல் என்றென்றும் இந்த
    உணர்வு பொங்கி வழியட்டும் மனம் போல !

    RépondreSupprimer
  4. சொல்லும் பொருளும் சிறந்தவெண் பாக்களாய்
    வெல்லுமே ஐயா விரைந்து!

    மிக மிக அருமை!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer

  5. தள்ளாடும் போதை தலைக்கேறி, நீா்நிலையில்
    உள்ளாடும் மீனாக ஓடுகிறேன்! - துள்ளியே
    அல்லாடும் என்றன் அகமென்பேன்! வண்ணமுடன்
    சொல்லாடும் உன்பா சுவைத்து!

    RépondreSupprimer
  6. அனைத்தும் இனிமையான வரிகள்...

    RépondreSupprimer