jeudi 28 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 38]





காதல் ஆயிரம் [பகுதி - 38]


371.
வேலை முடிந்து விரைந்து குடில்வந்தேன்
சோலைக் கிளியிரண்டும் சூடேற்றும்! - கோலமுற
மாலைப் பொழுதை மனமெண்ணி ஏங்குதடி!
காலை கனிந்த கனவு!

372.
நினையாமை ஏனோ? நிறைமதிப் பெண்ணே!
உனையெண்ணி ஆண்மை உருகும்! - மனங்கள்
பிணையாமை வாழ்வா? பிறந்தபயன் காண
முனையாமை நீக்கி முழுகு!

373.
ஆடினாள்! பாடினாள்! அப்படியே விட்டென்னை
ஓடினாள்! உள்ளம் துடிக்குதடி! - தேடினேன்
நெஞ்சச் சுமையகற்றி நீள்துயர் நீக்குமிடம்!
தஞ்சம் அடைவேன் தனித்து!

374
முமுமையாய் உன்னழகை முத்தமிழில் பாடச்
செழுமையாய்ச் செந்தமிழைச் சேர்ந்தேன்! - எழுமைப்
பிறவிகள் போதுமோ? பின்னழகைக் கண்டும்
துறவிகள் எய்துவார் தூது!

375.
தேங்கிய எண்ணங்கள் தேனைச் சுரக்குதடி!
வீங்கிய வண்ணங்கள் வெல்லுதடி! - ஏங்கிமனம்
வாங்கிய கற்பனைகள் மாண்பாய் வளருதடி!
ஓங்கிய பாட்டில் ஒளிர்ந்து!

376.
ஆடுவதா? பாடுவதா? அன்புள்ளம் நீயின்றக்
கூடுவதா? கும்மியிசை கொட்டுவதா? - தேடிவர
மூடுவதா வாயிற் திருக்கதவை? முப்பொழுதும்
வாடுவதா? நேர்மை வளைந்து!

377.
காதடி தொங்கும் கலைமுத்துப் பேரழகால் 
மோதடி நெஞ்சை! முழுமோகக் - கீதத்தை
ஊதடி! உள்ளம் உருகிடும் பாவின்றி
ஏதடி வாழ்வும் எனக்கு?

378.
நந்தவனம் ஒன்று நடைபயின்று என்எதிரே
வந்ததினம் இன்று! வளருதடி - சிந்தையிலே
தந்தமணம் வென்று! தந்ததனப் போடுதடி
வெந்தமனம் நன்றே விரைந்து!

379.
தூக்கம் இலாமல் துடித்தே இளமையுறும்
ஏக்கம் எழுத எழுத்துண்டோ? - ஊக்கமுடன்
தாக்கும் விழியம்பு! தண்ணிலவே! என்துயரைப்
போக்கும் வழியைப் புகல்!

380.
உன்னெழிலைக் காணும்நாள்! உல்லாச சொர்க்கத்தின்
பொன்னெழிலைக் காணும்நாள்! பூவே!உன் - முன்னெழிலைப்
பின்னெழிலை எண்ணிப் பிதற்றுகிறேன்! பண்ணிசையால்
நின்றெழிலை நன்றே நிரப்பு!

(தொடரும்)

5 commentaires:

  1. Réponses

    1. வணக்கம்

      வஞ்சி வடிவழகை வண்ண வரிகளில்
      நெஞ்சி இனிக்க நிரப்புகிறேன்! - தஞ்சமெனக்
      கொஞ்சிக் கொழிக்கும் தமிழ்மொழிபோல் என்னவளும்
      விஞ்சிக் கொழிக்கும் வியப்பு!

      Supprimer
  2. பாடிவரும் பாவலனோ தமிழணங்கின் காதலனோ...
    கூடிக் குதூகலித்துக் கும்மாளம்போடுகிறீர்! ஐயா உம்பாடல்
    தேடிப்படித்தின்பம் நாளும் கொள்ளுமெங்கள் மனம்
    ஆடிக் களிக்கிறதே ஆனந்தங்கொள்கிறதே!...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஆடிக் களிக்கின்றேன்! ஆனந்த போதையினைச்
      சூடிக் களிக்கின்றேன்! சுற்றுகின்றேன்! - கோடிமுறை
      பாடிக் களிக்கின்றேன்! பாவையின் பேரழகில்
      கூடிக் களிக்கின்றேன் கூா்ந்து!

      Supprimer

  3. வெண்பா விருந்தை விரும்பிச் சுவைத்தவா்க்கு
    பண்பால் படைத்தேன் படா்நன்றி! - தண்பா
    மணக்கும் தமிழ்வலைக்கு வந்திடுவீா்! காதல்
    இணைக்கும் இனிமை இசைத்து!

    RépondreSupprimer