காதல் ஆயிரம் [பகுதி - 32]
311.
ஒருமுறை உன்னைத் திரும்பியே பார்த்தேன்!
மறுமுறையும் காணமனம் எண்ணும்! – கருத்தின்
கருவரை உன்னிரு கண்களடி! காதல்
அருளுரை செய்வாய் அணைத்து!
312.
கன்னி மனத்துள் கவிஞன் குடியேற
எண்ணி மனத்துள் எழும்கவிகள்! - என்னவளைப்
பின்னி மனத்துள் பெறும்சுகம்! எந்நொடியும்
மின்னி மனத்துள் மிகும்!
313.
தயக்கம் விடுவாய்!நீ தாவணி போட்ட
மயக்கம் வளர்ந்தென்னை வாட்டும்! - உயிரை
இயக்கும் விசையே! இனிக்கும் தமிழே!
வியக்கும் அழகே விரும்பு!
314.
பள்ளி வரவில்லை! பாவை ஒருசெய்தி
சொல்லி விடவில்லை! சோர்கின்றேன்! - கள்ளியவள்
துள்ளிக் குதிக்கும் துடுக்கடக்கி நான்துவள
இல்லில் இருப்பாள் இளைத்து!
315.
நேற்று வரவில்லை! இன்று வரவில்லை!
காற்று வரவில்லை! என்கண்ணே! - கூற்றகல
மாற்று வழியென்ன? மாதுனைப் பார்க்காமல்
ஈற்றடி தான்வருமோ இங்கு!
316.
மூன்று முழுநாள்கள் உன்முகம் பார்க்காமல்
ஊன்று நிலையின்றி உள்ளுருகும்! - தோன்றுமதி
ஆன்றெனை வாட்டும்! அலைபோல் தொடர்ஆசை
ஈன்றெனை வாட்டும் இணைந்து!
317
இளைத்திருப்பாள் என்னை மனத்தெண்ணி! கனவில்
களைத்திருப்பாள் என்னைக் கலந்தே! - கலையாய்
நிலைத்திருப்பாள்! என்னுள் நிறைந்திருப்பாள்!
இன்பம்
விளைத்திருப்பாள் என்றும் விழைந்து!
318
ஈரிரண்டு நாள்கள் இனியவளைக் காணாமற்
சீரிழந்து வாழ்வும் சிதைந்ததடி! - காரிழந்தே
ஊர்வரண்டு வாடும்! உளம்வரண்டே என்னுயிர்
வேர்வரண்டு வாடும் மிகுந்து!
319.
ஐந்துநாள் போனதே! அன்னவளைப் பார்க்காமல்
நைந்துதான் போனதே என்னிதயம்! - பைந்தமிழே!
வந்துநான் உள்ளேன்! மயிலிடத்தில் தூதொன்று
தந்துநான் உள்ளேன் தவித்து!
320.
ஆறுநாள் அல்லல் அகன்றோட, இன்பத்துள்
மாறுநாள் வந்தது! மங்கையெழில் - ஊறும்நாள்!
வீறுநான் கொண்டு விழைகின்ற அன்பாலே
ஏறுநான் நின்றேன் எழுந்து!
(தொடரும்)
இன்றோய பத்து பாக்களும் தேன்பாக்கள்
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வான்பூக்கள் ஆயிரத்தை வார்த்தொளிரும் வஞ்சியினைத்
தேன்பாக்கள் ஆயிரத்தில் தீட்டுகிறேன்! - நான்கண்ட
காட்சிகளைக் கம்பன் கவிபாட வாய்ப்பில்லை!
மாட்சிகளைச் சோ்க்கின்ற மாது!
தினமது தானெண்ணி உமதுணர்வைக் கவியாக்கி
RépondreSupprimerமனமதில் நாம் பதிக்க மதியோடிசைக்கும் மாகவியே! எம்
இனமது இன்பமுற எழுதுகிறீர் நற்றமிழில் உம்புலமை
கனம் கொள்ள வைக்கிறதே காண்.