காதல் ஆயிரம் [பகுதி - 33]
321.
வாழும் வழியின்றி வற்றி வரண்டதுபோல்
ஏழு துயர்நாள்கள் ஏகினவே! - சூழுலகம்
பாழும் சடங்குகள் பார்ப்பதேன்? என்னுயிர்
ஆழும் நினைவில் அலைந்து!
322.
பட்டோ? மிளிர்மலர் மொட்டோ? சுவைபுட்டோ?
எட்டாத் தொலைவிலுள்ள வெண்தட்டோ? - கட்டழகோ!
சொட்டோ எனச்சொட்டும் தேனடையோ? இன்னமுதோ?
எட்டாம்நாள் வந்த(து) எழுந்து!
323.
ஒன்பது நாள்கள் உருண்டனவே! எண்ணங்கள்
தெம்பெதும் இன்றிச் சிதைந்தனவே! - செம்மலரே!
கம்பன் படைத்த கனித்தமிழே! கற்கண்டே!
எம்மின் துயரை இறக்கு!
324.
ஈரைந்து நாள்கள் இளையவளைப் பார்க்காமல்
ஓரைந்து மாதமென நாள்ஓடும்! - நீரின்றி
ஏர்குன்றிப் போகும்! இவளின்றி என்வாழ்வின்
சீர்குன்றிப் போகும் சிறுத்து!
325.
பத்துநாள் தீா்ந்து பதினொன்று வந்தேய்த
முத்துத்தேர் போல்அவள் முன்வருவாள்! -
எத்திசையும்
கத்தும் குயில்கூடிக் காதல் மொழிபேசிச்
சித்தம் களிக்கும் செழித்து!
326.
வானத்துத் தேவதையாய் வந்து நடக்கின்றாய்!
கானத்துப் பூவெல்லாம் கண்சிமிட்டும்!
- ஞானத்தை
நானுற்ற போதும்கூன் னுற்று நலிந்தனனே!
தேனொத்த உன்னழகில் தேர்ந்து!
327.
புதிய பொலிவொன்று நற்புலவன் என்னுள்
பதிய படைக்கும் பருவம்! - முதிய
மதிபோல் ஒளிரும் மலர்முகம் கண்டால்
நதிபோல் கொழிக்கும் நலம்!
328.
வண்ணத்துப் பூச்சிகள் வந்து வரிசையாய்
எண்ணத்துள் வட்டமிடும்! என்னவளே! - உண்ணென்றே
ஒண்சித்து வித்தைகளை ஊட்டும் உனைக்கண்டு
கண்செத்து மீளும் கமழ்ந்து!
329.
ஆயிரம் பூக்கள் அணிவகுத்து நின்றேங்கும்!
தாயிடம் வண்ணக் கிளிசாற்றும்! - கோயில்
சிலையென மின்னும் சிரிப்பழகே! பேச்சைக்
கலையெனக் கற்றவிடம் காட்டு!
330.
மாங்கனித் தோப்பு! மதியொளிர் வானழகு!
தேங்கனிச் சாறு! திணைமாவு! - பூங்கொடியே!
நானினி என்செய்வேன்? நங்கையுன் பேரழகில்
ஊனினி வாடும் உடைந்து!
(தொடரும்)
தமிழை தமிழாய் படிக்கும் போதும் என்ன ஒரு அழகாக இருக்கிறது !!...இந்த இலக்கண நடையை என்னவென்று சொல்வது!!...சற்று பொறாமையாகத் தான் இருக்கிறது..
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
முதல்வருகைக்கு என்றன் வணக்கம்! முத்தாய்ப்
பதம்தருகைக்கு என்றன் பணிவு!
இலக்கணம் என்பேனா? இனிக்கும் இன்ப
இலக்கியம் என்பேனா? பெண்ணே! - கலக்கிய
நீராகச் சுற்றும்! நிறைந்த அவளழகை
நேராகக் கண்டஎன் நெஞ்சு!
இது காதல் ஆயிரம் மட்டுமல்ல தமிழ் ஆயிரம்,அழகு ஆயிரம்
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
ஆயிரம் பின்னுாட்டம் அள்ளி அளித்ததாய்ப்
பாயுமே பாவலன் பாடு!
நல்லழகு ஆயிரத்தை அன்னவள் ஆள்கின்றாள்!
சொல்லழகு ஆயிரத்தைச் சூட்டுகிறேன்! - தொல்லுலகை
வெல்லழகு ஆயிரத்தை விஞ்சுதமிழ் ஏற்கின்றாள்!
வல்லழகு ஆயிரத்தை வாழ்த்து!
வணக்கம்
RépondreSupprimerகவிஞர் கி,பாரதிதாசன்(ஐயா)
வானத்துத் தேவதையாய் வந்து நடக்கின்றாய்!
கானத்துப் பூவெல்லாம் கண்சிமிட்டும்! - ஞானத்தை
நானுற்ற போதும்கூன் னுற்று நலிந்தனனே!
தேனொத்த உன்னழகில் தேர்ந்து!
ஐயா இணையத்தின் வித்தகனாய் இணையில்லா கவிகளை வாரிவாரி படைக்கும் உங்களை வாழ்த்துவதற்கு என்னிடம் வார்தைகள் இல்லை ஐயா,அருமையாக படைப்பு வாழ்க வளமுடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ஐயா... அருமை அத்தனையும்... வாழ்த்துகிறேன்.
RépondreSupprimerதனியே புலம்புவதேன் புலவரே பெருந்தகையே
கனிவே கொண்டு காதலியாள் வந்திடவே கமழ்மொழியில்
இனிதேயியற்றிடும் இன்னும்பலகவிதை இன்தமிழில் கூவும் உன்
தொனியே கூட்டிடும் விரைந்து ...