காதல் ஆயிரம் [பகுதி - 23]
221.
கும்மென்(று) இருக்குதடி போதை! குளிர்விழிகள்
சிம்மென்(று) இசைக்குதடி சீர்ப்பாட்டு!
- செம்மலரே!
நம்மென்(று) அரிக்குதடி நண்ணும் உணர்வுகள்!
உம்மென்(று) இருப்பதே னோ!
222.
சிலுக்குடை போடும்,சிங் காரி! மயங்கத்
தளுக்குநடை போடும்,ஒய் யாரி! - குலுக்கிக்
கலக்கும்,கைக் காரி! மலுக்கென்(று) ஒடித்தே
உலுக்கும்,மைக் காரி!தேன் ஊற்று!
223
செல்லமே! செந்தமிழச்; செல்வமே! கெண்டைகள்
துள்ளுமே! நெஞ்சினை அள்ளுமே! - உள்மனம்
சொல்லுமே! தூயபெரு வெள்ளமே! உன்னழகு
வெல்லுமே காதல் விளைத்து!
224.
நன்றி உரைத்தேன் நறுந்தமிழே! வாழ்வில்நீ
இன்றி எனக்கே(து) இனிமையடி! - என்னுயிரை
வென்றிப் படைநடத்தும் வேல்விழியே! உன்னழகில்
ஒன்றிக் கிடக்கும் உணர்வு!
225.
தேர்பெற்ற வேந்தன்! திறம்பெற்ற வீரன்!நல்
பேர்பெற்ற கீர்த்தி! பெருகுமே! - ஊர்வசியே!
நான்பெற்ற வாழ்வினிமை தேன்பெற்ற செல்வியுன்
ஊன்தொட்டு வந்த உயர்வு!
226.
குயிலிருந்து கூவும்! மயிலிருந்து ஆடும்!
ஒயிலிருந்து மின்னும்! ஒளிரும்! - கயலே!
உயிரிருந்து ஏங்கும்! உருகும்!என் காதல்
பயிரிருந்து ஓங்கும் படர்ந்து!
227.
ஒருமுறை சொல்லடி! உள்ளம் குளிர!
திருமுறை போலத் திகழும்! - உருகி
வருநிலை பார்த்து வளர்நிலை செய்யும்
அருமரைப் பெண்ணே அரண்!
228.
சொன்னாள்! சுரந்தூறும் காதலை! இன்சொல்கேட்(டு)
என்னால் இருக்க இயலுமோ? - அந்நாளோ
பொன்னாள்! இதயம் புகுந்த திருநாள்!ஆம்
அன்னாள் அழகின் அணி!
229.
வண்ணத்துப் பூச்சியென வந்து பறக்கின்றாள்!
எண்ணத்துள் நின்றே இசைக்கின்றாள்! - இன்பத்தால்
கன்னத்தைக் காட்டிக் கவிதை படைக்கின்றாள்!
அன்னத்தைக் காட்டும் அழகு!
230.
நந்தவனம் செந்தமிழ்ச் சந்தமிடும்! என்னவளின்
கந்தம் கமழ்கின்ற கால்பட்டு! - செந்தமிழ்போல்
தந்தசுகம் கண்டு தழைக்குதடி அந்தவனம்!
வந்தவுடன் வாடும் வளைந்து!
(தொடரும்)
ஐயா...
RépondreSupprimerஇனிக்கும்தமிழ் சுவைக்கும் உம் கவியழகு கண்டு
பனிக்குமே எம்கண்கள் கசிந்து...
Supprimerவணக்கம்
இனிக்கும் தமிழை இசைக்கின்ற பெண்ணே!
மணக்கும் மனமே வணக்கம்! - நினைவில்
பிணைக்கும் வண்ணம் பெருந்சுவை ஈந்தே
இணைக்கும் கருத்துக்கே தீடு!