jeudi 21 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 30]





காதல் ஆயிரம் [பகுதி - 30]


291.
அவன்கொடுக்கும் பாக்கள் அனைத்துமென் சொத்தாம்!
சிவன்கொடுக்கும் நற்றவம் போலே! - நுவளும்
திறன்கொடுக்கும் வன்மை! செழுந்தமிழ் மேன்மை!
அறன்கொடுக்கும் வாழ்வின் அழகு!

292.
முத்தம் தருவாய்!என் பித்தம் அகன்றிடச்
சித்தம் குளிர்ந்திடச் சீர்பெறவே! - நித்தமும்
மெத்த மலர்மணக்க! மெல்லக் கவிபிறக்க!
அத்தை மகளே!வந்(து) ஆடு!

293
கலக்கம் எதற்கோ? கடுந்துயரம் ஏனோ?
விளக்கம் அளிப்பாய் விழியே! - கலக்கி
உலுக்கும் உயிரே! உரைத்திடுவாய் உண்மை!
குலுக்கும் அழகே கொழித்து!

294.
உன்குரல் கேட்காமல் உள்ளம் உருகுதடி!
இன்குரல் பெண்ணே! எனதுயிரே! - நன்மணியே!
பன்குரல் போட்டியில் நற்பரிசு பெற்றவளே!
என்குரல் கேட்டே எழு!

295.
முத்தழகு! மின்னும் மதிபோல் முகத்தழகு!
கொத்தழகு! கோவை உதட்டழகு! - சித்திரம்போல்
சொத்தழகு! தேன்பாயும் சொல்லழகு! என்னுயிரைக்
குத்தழகு உன்றன் குரும்பு!

296.
கீற்றாடிக் கொஞ்சும் கிளியிரண்டு! கண்(டு)எனக்குள்
நேற்றாடி பெற்றசுகம் நீந்திவரும்! - தோற்றேயான்
ஈற்றாடிக் கற்றகலை எண்ணியே என்மனம்
காற்றாடி போல்பறக்கும் காண்!

297.
மான்விழி என்றும் மலர்விழி என்றும்!பொன்
மீன்விழி என்றும் வியந்தனனே! - தேன்விழியே!
நான்..விழி என்றே நலமுறப் பார்த்தநொடி
ஏன்...விழி தாக்கும் இணைந்து?

298.
கண்ணுக்குள் காந்தம்! கருத்துக்குள் தேனூற்று!
பெண்ணுக்குள் ஈடிலாப் பேரழகு! - எண்ணுகின்ற
எண்ணுக்குள் பேரளவு என்னாசை! தீட்டுகின்ற
பண்ணுக்குள் போதை படர்ந்து!

299.
முத்தாடும் காதழகின் முன்னாடும் என்மனமே!
மத்தாடும் வண்ணம் மதியாடும்! - முத்தமிழே!
சித்தாடும் கண்களிலே சிக்கித் தவிக்கின்றேன்!
பித்தாடும் வண்ணம் பிழைத்து!

300
என்னடி கண்ணே! எதையடி சொல்வேன்யான்!
உன்னடி கண்டே உணர்வூறும்! - கண்ணடிக்கும்
இன்னடி பட்டே எழுதும் கவிதைகளைப்
பொன்னடி என்றே புகல்!

(தொடரும்)

7 commentaires:

  1. கொட்டுங்கய்யா..
    கொட்டுங்க...

    கவி மழை...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கொட்டும் விழியுடைய கோதையை வாவென்று
      கொட்டும் மலா்கொடிகள் கூத்தாடி! - கொட்டெனக்
      கொட்டும் அணிவகைகள்! கொஞ்சும் கவிச்சந்தம்
      கொட்டும் மழையாய்க் குளிர்ந்து!

      Supprimer
  2. அறன்கொடுக்கும் வாழ்வின் அழகு!

    அழகு கவிதைக்கு பாராட்டுக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பழகும் தமிழ்எனப் பற்றிக் கிடந்தாள்!
      உழுது விளைத்தாள் உறவை! - பழமாய்
      அழகுக் கவிகளை அள்ளி அளித்தாள்!
      ஒழுகும் அமுதை உடைத்து

      Supprimer
  3. கவிதைத் தேன் கலக்கல் ஐயா தொடருங்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தவித்தேன்! தனித்தேன்! தளிர்க்கொடிமுன் நெஞ்சைக்
      குவித்தேன்! குதித்தேன்! குழைத்தேன்! - சுவைத்தேன்!
      சிவந்தேன்! சிதைந்தேன்! அவளழகு மேனி
      கவித்தேன் சுரக்கும் களம்!

      Supprimer
  4. ஐயா... அழகு தமிழில் அத்தனை சிறப்பாகப் படைக்கும் கவிகள் அருமை!
    வாழ்த்துக்கள்!!!

    பின்னல்க் கவிதன்னைக் கன்னித்தமிழில்தான் புனைந்து
    மின்னலென மிளிரும் உம்மிகுதிறமை தனைக்கண்டு
    சின்னவள் வார்த்தையும் சொல்லுந்திறனும் இல்லாமல்
    கன்னல் கவிகரைத்துக்குடித்துக் களிக்கின்றேன்...

    RépondreSupprimer