dimanche 3 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 20]





காதல் ஆயிரம் [பகுதி - 20]

191.
கொட்டுதடி நம்மிளமை கும்மி! குளிர்ந்தாடி
எட்டுதடி நம்மிளமை இன்னுலகை! – நுட்பமுடன்
கற்குதடி நம்மிளமை! காமனெழில் கோட்டையைப்
பற்றுதடி நம்மிளமைப் பாட்டு!

192.
பாவை விளக்கே! தமிழ்த்தாய் நடைபயிலும்
நாவை உடையவளே! நற்றேனே! – தேவையடி
கோவை இதழ்கொடுக்கும் முத்தம்! கவியெழுதச்
சேவை புரியும் சிறந்து!
       
193.
பித்தம் தெளிந்ததடி! சித்தம் செழித்ததடி!
நித்தம் நெகிழ்ந்ததடி! வெண்ணிலவே! – முத்தமிடும்
சத்தம் ஒளிக்குதடி! தந்ததன போடுதடி!
மொத்தம் மயங்குதடி மூச்சு!

194.
முத்த மழைபொழிந்து மோகப் பயிர்வளர்ந்து
அத்தை மகளே! அருஞ்சுவையே! – புத்தமுத
முத்தைச் சுவைத்து முடிமுதல் கீழ்வரையில்
வித்தை புரிவோம் வியந்து!

195.
ஒவ்வொரு முத்தமும் செவ்விதழ் தேன்கொடுக்கும்!
கவ்விடும் கண்கள் கவிபடைக்கும்! - தவ்விடும்
தாவிடும் நெஞ்சம் தமிழிசைக்கும்! பூந்தாது
தூவிடும் காமன் துணை!

196.
காதல் திருக்கோயில்! கன்னல் வழிபாடு!
மோதல் விழிகளின் போர்நிறுத்தம்! - ஓதும்நல்
வேதம் தரும்இன்பம்! விண்ணமுதம்! முத்தங்கள்
ஊதல் தரும்மிசை ஊற்று!

197.
அத்தை மகளே! அருந்தமிழே! வெண்பஞ்சு
மெத்தை நிகர்த்தஎழில் மேனியடி! – செத்தைக்
குடில்அமைத்துச் கூட்டாஞ் சோறாக்கி! சொர்க்கப்
படியமைப்போம் இன்பம் பகிர்ந்து!

198.
வாடும் பொழுதெலாம் வஞ்சியே உன்னினைவு
சூடும் இனிமையை! நற்றுணிவை! – நாடும்!என்
வீடும் புகழ்ந்திடப் பாடும் இளையவளே!
ஈடும் உனக்குளதோ இங்கு!

199.
ஈருயிர் சேர்ந்திட! இன்பம் சுரந்திட!
சீருயிர் தோற்றம் சிறப்பெய்த! – ஆருயிரே!
பேருயிர் என்றேநாம் பெற்றிடும் முத்தங்கள்
தேருயிர் ஏறும் திரண்டு!

200.
ஒருமுத்தம் நல்கும்ஓ ராயிரம் பாக்கள்!;
திருமுத்தம் நல்கும்செந் தேனை! – தருஞ்சீர்
அரும்முத்தம் நல்கும் அமுதக் கடலை!
பெரும்முத்தம் நல்கும் பிறப்பு!
                                                                                                                             
(தொடரும்)

17 commentaires:

  1. Réponses

    1. அருமைக் கவியெழுதும்! அன்புசுரந் துாறும்!
      பெருமை நிறைந்தாடும்! பெண்ணின் - கருமை
      விழியழகு! கண்டு வியப்புற்றுப் பாட
      மொழியழகு காணும் முனைந்து!

      Supprimer
  2. -
    இருநூறு பாக்களுமே இன்பத்தின் எல்லை!
    கருவூறும் காவியக் காதல்! – அருமை!
    வரும்மீதி பாடலுக்கு வாழ்த்துக்கள் சொல்ல
    அருந்தமிழில் தேடுகிறேன் ஆழ்ந்து!

    -

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஒருமை உளத்தோடே ஒண்டொடியின் சீரை
      அருமைத் தமிழில் அளித்தேன்! - திருசோ்
      கருமை விழியழகைக் கண்டுகவி பாடப்
      பெருமைத் தமிழே பெருகு!

      Supprimer
  3. முத்தமாய் மோகமாய் பின்னர்
    பித்தமாய் பெரும் புலயெனவாய்
    சத்தமில்லாமலாடும் சல்லாபத்தினை
    வித்தகமாய்த் தந்தீர் விரைந்து...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தேன்சிட்டுக் கூட்டம்! செழுங்கனிப் பூந்தோட்டம்!
      வான்தொட்டுத் துள்ளும் வளா்எண்ணம்! - மீன்விழியால்
      ஊன்தொட்டும் என்றன் உயிர்தொட்டும் ஊட்டுகிறாள்
      நான்கட்டும் பாட்டில் நலம்!

      Supprimer
  4. தேவையடி
    கோவை இதழ்கொடுக்கும் முத்தம்! கவியெழுதச்
    சேவை புரியும் சிறந்து!
    உண்மைதான் அய்யா! தேவையை யாரறிவார்?திவ்யமாய் யார் கொடுப்பார்?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கோவை இதழ்மணக்க! கூந்தல் மலா்மணக்க!
      நாவை தமிழ்மணக்க நாடுபவள்! - ஆவலாய்த்
      தேவை அறிந்து செயலாற்றும் வண்ணதமிழ்ப்
      பாவை கிடைத்தால் பயன்!

      Supprimer
  5. ஆகா! வெண்பாக்களில் மொத்தமாய் முத்த மழை அழகு..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முத்த மழைபொழிந்து மோகப் பயிர்விளைத்து
      நித்தம் மகிழ்வேன் நிலைத்து!

      Supprimer
  6. ஒருமித்த கருத்தைச்சொல்லி
    திக்கெக்கும் காதல் ரசம் பரப்ப்விட்ட
    பெருங்கவியே பெருமிதம் அடைகிறோம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அவளின் விழிகள் அளித்த கவிகள்
      துவளுமென் நெஞ்சத் துணை!

      Supprimer
  7. மலர்தேடும் வண்டுகள் மனம் மகிழ்ந்து
    புலர்காலை பூந்தேன் உண்ணும் -நிலையடைந்து
    உள்ளம் உருகிடும் ஒப்பற்ற பாசுவைத்தேன்
    மெள்ளக் கனிந்தே மனது.!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உள்ளத்தைக் கொள்ளையிடும் ஒண்டொடியைச்! செந்தமிழ்ச்
      செல்வத்தை! யான்எண்ணிச் சீா்தொடுத்து - வல்லகவி
      வெள்ளத்தைப் பாய்ச்சிடுவேன்! வெண்டளை பொங்கிவர
      வெல்லத்தைக் காய்ச்சிடு வேன்!

      Supprimer

  8. இருநுாறு வெண்பாக்கள்! என்னிதய வீட்டில்
    திருநுாறு தீபங்கள் ஏற்றும்! - கரும்பின்
    அருஞ்சாறு நல்கும் அவளழகைப் பாடிப்
    பெரும்பேறு பெற்றேன் பிறந்து!

    RépondreSupprimer
  9. முத்தம் பற்றி அருமையாக வெண்பாவில் விளைத்த கவி முத்துக்கள்§

    RépondreSupprimer
  10. வெண்பாவில் கவி முத்தம் அருமை ஐயா !

    RépondreSupprimer