lundi 25 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 35]



காதல் ஆயிரம் [பகுதி - 35]


341.
என்னை மறந்தாயா? இன்பக் கவிபாடும்
பண்ணை மறந்தாயா? பைங்கிளியே! - உன்னுயிர்க்
கண்ணை மறந்தாயா? காதல் பயிர்விளையும்
மண்ணை மறந்தாயா? சொல்?

342.
அண்ணன் அடிக்க அரண்டாயோ? அன்பே!பா
வண்ணன் எனைநீ மறந்தாயோ? - விண்ணுலகில்
கண்ணன் கருணை இழந்தானோ! காதல்மொழி
உண்ணும் உளமே உடைத்து!

343.
மாமியும் மாமனும் வந்தே வதைத்தனரோ?
சாமிமேல் சத்தியம் கேட்டனரோ? - ஊமையாய்
ஆமைபோல் சென்றாயோ? அன்பை மறந்தாயோ?
தீமைமேல் தீமை திணித்து!

344.
தம்பியும் தங்கையும் சார்ந்துனைப் பேசியே
நம்பி இருந்து நடித்தனரோ? - அம்மம்மா!
கம்பியுள் பூட்டினரோ? காதல் சிறகுடைக்கத்
தும்பிபோல் வாட்டினரோ சூழ்ந்து!

345.
பாட்டி பகரும் பரிவுடைச் சொற்கள்;,உன்
கூட்டில் நடைபெறும் ஓட்டமே! - தீட்டிய
சீட்டுக் கவிபடித்தேன்! சேர்ந்ததுயர் எந்நொடியும்  
வாட்டும் உயிரையே மாய்த்து!

346.
வளம்பொங்கப் பாட்டெழுதி வஞ்சியவள் வாழ்வில்
நலம்பொங்க வாழ்த்துகிறேன் நாளும்! - குலவு
கலைபொங்கக் காதல் சுகங்பொங்க அன்பாம் 
நிலைபொங்கும் நெஞ்சம் நிறைந்து!

347.
பொய்யுரைத்துப் பாடும்பொற் பூவே! இனியென்முன்
மெய்யுரைத்துப் பாடு! விழைந்தாடு! - செய்!இனித்து
கைகொடுத்து வாழ்வை! கவிகொடுத்து நெஞ்சத்துள்
மைகொடுத்து வாழ்வை மயக்கு!

348.
காதலாம் காதலெனக் கண்ணிரண்டைக் கவ்வுதடி!
மோதலாம் மோதலென முந்துதடி! - மாதவமே!
ஈதலாம் ஈதலென இன்பமடி! காதல்நெறி
ஓதலாம் ஓதலாம் ஓர்ந்து! 

349.
கண்ணா வருக!என் மன்னா வருக!பொன்
வண்ணா வருக!இன் பந்தருக! - இன்னமுதப்
பண்ணா வருக! பசுந்தமிழ்ப் பா..பொழிக!
பெண்ணாய்ப் பிறந்ததென் பேறு!

350.
போதுமடா சாமி! பொலியும் அவளழகால்
மோதுமடா பொற்கனவு! மூளையிலே - மாதுருவம்
ஓதுமடா தேனொழுகும் காமக் கலைநூலை!
கோதுமடா காதல் கொழித்து!

(தொடரும்)

2 commentaires:

  1. காதல் கொண்டமனம் களிகொண்டாடுதல் போல்
    கூதல் கொண்ட உம்கவி குளிர்மிகத் தருகுதையா
    நோதலினி ஒருபோதும் வேண்டாம் நம்தமிழிற்குச்
    சாதல் இல்லையெனச் சாற்று.

    RépondreSupprimer