காதல் ஆயிரம் [பகுதி - 29]
281.
வண்ணக் கவிதை வளமாய் வடிக்கின்ற
என்னவளே வாழ்க இனிதோங்கி! – என்றென்றும்
எண்ணம் முழுதும் எழுத்தாய்த் திகழ்கின்ற
சின்னவளே வாழ்க செழித்து!
282.
எல்லாத் துயரும் எனைவாட்டும்! அத்தனையும்
நில்லா(து) ஒழியும் உனைநினைத்தால்! - நல்லவளே!
கல்லாக் கலைகளைக் கண்ணால் உரைப்பவளே!
சொல்லாக் கதைகளைச் சொல்லு!
283.
எண்ணும் பொழுதெல்லாம் இன்பத் தமிழ்போலச்
கன்னல் சுரந்தூறும் கட்டழகே! - உன்கவிதை
பன்னும் பொழுதெல்லாம் பைந்தமிழ்த் தேன்சொற்கள்
மின்னும் எனக்குள் மிகுந்து
284.
எதுவரை காதலின் எல்லையோ? ஆம்!ஆம்!!
அதுவரை போகலாம் ஆழ்ந்து! – புதுமை
இதுவரை எண்ணினோம்! இன்றுநாம் கூடிப்
புதுவரை செய்வோம் புணர்ந்து
285.
உனக்கொன்(று) எனில்என் உளம்வாடும்! அன்பே
கணக்கொன்(று) இலாமல்உள் காயும்! - துணையாய்
எனக்கென்று வந்து பிறந்தவளே! இன்பம்
மணக்கின்ற வாழ்வை வழங்கு!
286.
உன்கண் கலங்கினால் உள்ளம் உடைந்துவிடும்!
என்..பொன் மயிலே! இளையவளே - என்னுயிர்
மண்மீ(து) இருக்கும்! மலரே உனைப்பிரிந்தால்
விண்மீ(து) இருக்கும் விரைந்து!
287.
காய்ச்சலெனச் சொன்னாய்! கவிஞனின் பாக்களிலே
பாய்ச்சல் குறைந்ததடி! பாநயம் - ஓய்ந்ததடி!
சாய்ந்துவரும் மாலை சதிபுரிந்து தாக்குதடி!
தோய்ந்துவரும் மாலைத் துயர்!
288.
எண்ணம் இனிக்கும்! எடுத்தெழுதும் இன்றமிழ்
வண்ணம் இனிக்கும்! வடிவாக - மின்னிடும்
கன்னம் இனிக்கும்! உயிர்கலந்து கட்டுகின்ற
சின்னம் இனிக்கும் சிவந்து!
289.
எழுதும் கவிதையை என்னவளே! நாளும்
தொழுது படித்தே சுவைப்பாய்! - அழகே
விழுது பிடித்து விளையாடிக் காதல்
உழுது விளைப்போம் உறவு!
290.
இவைகொடுக்கும் என்றே எனதுள்ளம் ஏங்க
அவைகொடுத்து ஆளும் அழகே! - புவியில்
சுவைகொடுக்கும் உன்றன் சுடர்மிகு பா..போல்
எவைகொடுக்கும் இன்பம் எனக்கு!
(தொடரும்)
காய்ச்சலெனச் சொன்னாய்! கவிஞனின் பாக்களிலே
RépondreSupprimerபாய்ச்சல் குறைந்ததடி! பாநயம் - ஓய்ந்ததடி!//
அதனால்தான் இடைவெளியோ கவிஞரே
என்ன துயர் எதிர்படினும்
RépondreSupprimerஎதுவும் நில்லாது ஓடும்
நின் பாக்களுக்கு முன்னே...
அருமை ஐயா.
கவிசொல்லும் காதல் சொல்லும் தமிழ்மொழி சொல்லும்
RépondreSupprimerசொல்லாவகை எது சொல்லும் என்ன சொல்லும் நில்லாது உம்முன்
இனிதல்ல இயம்பவல்லதான் உளதோ நம்மொழியின் சிறப்பதனை
புவி ஏற்கும் புளகாங்கிதப்பட்டு...