காதல் ஆயிரம் [பகுதி - 36]
351.
காலை விடியல்! கருத்தைக் கவர்ந்திழுக்கும்
மாலை மயக்கம்! மனங்கமழும் - சோலையெழில்!
பாளைச் சிரிப்பு! தமிழினிப்பு! பாவையவள்
ஆளை அசத்தும் அழகு!
352.
பேசிட வேண்டும்! பிணைந்துயிர் பேரின்பம்
வீசிட வேண்டும்! விளைகின்ற - ஆசைமலர்
கூசிட வேண்டும்! குளிர்ந்து மனம்பொய்யாய்
ஏசிட வேண்டும் எனை!
352.
கொட்டும் குளிர்பனி! கொஞ்சும் நினைவலைகள்!
சொட்டும் மலைத்தேன்! சுடர்கொடியே! - சட்டென்று
கட்டும் கவிதையெனக் காதல் பெருகுதடி!
முட்டும் நரம்பின் முறுக்கு!
353
சந்தமிடும் கண்ணேஉன் காற்சிலம்பு! செந்தமிழைச்
சொந்தமிடும் கண்ணேஉன் சொற்சிலம்பு! - தந்ததன
விந்தையிடும் கண்ணேஉன் மெல்லிடை! ஆசைமிகச்
சிந்தையிடும் செல்லச் சிரிப்பு!
354.
வரும்நாளை எண்ணி வடித்துள பாக்கள்
திருநாளைப் போன்றுதித் திக்கும்! - அருந்தேன்
தரும்நாளை எண்ணித் தழைத்த மனததுள்
கரும்(பு)ஆலை கண்டாய் களித்து!
356.
ஒருபார்வை பாரடி! உள்ளம் உருக்கும்!
திருப்பாவை போல்தேன் சுரக்கும்! - அருஞ்சீர்
தரும்பாவை நீயே! தமிழ்ப்பாவை! இன்பம்
தரும்பாவை உண்பேன் தனித்து!
357.
வரும்முறை தோறும் மனத்தினை வாட்டிப்
பெரும்சுகம் நல்கிடும் பெண்ணே! - விரும்பி
ஒருமுறை பாரடி! என்னுயிர் ஓங்கத்
திருமரைக் கண்ணைத் திறந்து!
358.
வேர்வைக் குளியல் உழைப்பின்பம்! வெண்பனிப்
போர்வைக் குளியல் மலர்பொழிவு! - ஊர்வசியே!
பார்வைக் குளியல் கவிபடைக்கும்! நம்முயிர்க்
கோர்வைக் குளியலைக் கூட்டு!
359.
ஒன்றும் அறியாக் குழந்தையென உள்ளமர்ந்து
வென்றெனை வீழ்த்தும் விளையாட்டேன்? - என்னவளே!
நன்றுன் செயலா? நடத்துகின்ற நாடகமா?
என்றெனைச் சேர்வாய் இயம்பு!
360.
உள்ளொன்று வைத்து வெளியென்று பேசுமொழி
முள்ளென்று குத்தி முடக்குமடி! - மெல்லவே
கல்லொன்று தேயுமடி! காதல் இலையென்று
சொல்லொன்று சொல்லுதல் சூது!
(தொடரும்)
வர்ணித்திட வார்த்தை-
RépondreSupprimerஇல்லைங்கய்யா....!
அருமை...
என்று சொல்லி
தப்பித்து கொள்கிறேன் அய்யா...!!
பகுதி 36 ஆகி விட்டது...!
RépondreSupprimerஅனைத்தையும் ரசிக்க ஒரு நாள் ஒதுக்க வேண்டும்... நன்றி ஐயா...
தவித்துத்துவண்டு சிரித்து மகிழ்ந்து தமிழினைக்காதலிக்கும்
RépondreSupprimerகவித்துவக் காதலரே! கவிஞரே! உம் இனித்திடும் பாக்களால்
புவித்தலம் பூத்திடும் சிலிர்த்திடும் சிங்காரங்கண்டு என்கரம்
குவித்திடும் கண்கள் பனித்திடும் தானாவே...
ஐயா... நான் எழுதிய மேற்படி (அதை என்னவென்று சொல்வது... ) உளறலில்...:) எழுத்துப்பிழை வந்துவிட்டது. மன்னிக்க வேண்டுகிறேன். திருத்தமாக மீண்டும். தானாவே... என்பது தானாகவே என...
RépondreSupprimerதவித்துத்துவண்டு சிரித்து மகிழ்ந்து தமிழினைக்காதலிக்கும்
கவித்துவக் காதலரே! கவிஞரே! உம் இனித்திடும் பாக்களால்
புவித்தலம் பூத்திடும் சிலிர்த்திடும் சிங்காரங்கண்டு என்கரம்
குவித்திடும் கண்கள் பனித்திடும் தானாகவே...
//சந்தமிடும் கண்ணேஉன் காற்சிலம்பு! செந்தமிழைச்
RépondreSupprimerசொந்தமிடும் கண்ணேஉன் சொற்சிலம்பு! - //
கவி வரிகளில் நெகிழ்கிறேன் ஐயா