காதல் ஆயிரம் [பகுதி - 37]
361.
கழுவும் பொழுதில் நழுவிடும் மீனாய்
எழுதும் மடல்எதற்கோ! கண்ணே! - உழவன்
தொழுது நிலங்காப்பான்! தூயவளே உன்னை
உழுது செழிக்கும் உயிர்!
362.
கொள்ளளவு மீறிக் கொழிக்குதடி! எந்நொடியும்
சொல்லளவு மீறிச் சுரக்குதடி! - நல்லமுதே!
கள்ளளவு போதைதரும் கண்ணழகு! காண்பதனால்
எள்ளளவும் உண்டோ இடர்!
363.
எனக்குள்ளே நீயும்! இனியதமிழ் பாடி
உனக்குள்ளே நானுமிணைந்(து) உள்ளோம்! -
மணக்கும்
மனத்துள்ளே துன்பம் குடிபுகுந்தால், மாதே!
கணத்துள்ளே நீங்கும் கரைந்து!
364.
கண்ணன் குழலிசைபோல் கன்னல் கவிபாடும்
வண்ணன் குரலிசை வந்தினிக்க! - வெண்ணிலவே!
அன்னம் அசைந்துவர, ஆசை பெருகிவரக்
கன்னம் சிவக்கும் கனிந்து!
365.
வந்தாள் அருகில்! மயில்நடம் நான்மயங்கத்
தந்தாள்! தவிக்க எனைவிட்டாள்! - செந்தமிழ்ச்
சிந்தால் உயிரைச் சிறையிட்டாள்! காதல்பூப்
பந்தால் அடித்தாள் பறந்து!
366.
தூவும் பனிப்பொழிவாய்த் தோழியுன் இன்றமிழ்ப்
பாவும் குளிர்ச்சியைப் பாய்ச்சும்! - நாவினிலே
மேவும் சுவைசொட்டும்! மென்டொடியே! பொற்கவிக்
கோவும் மயங்கக் கொழித்து!
367.
மெல்லச் சிணுங்கி மெதுவாகத் தொட்டென்னை
வெல்ல நினைக்கும் வியப்பழகே! - செல்லமே!
வல்ல இரவு வடித்த கனவுகளைச்
சொல்லச் சுரக்கும் சுகம்!
368.
நவிலும் நறுஞ்சொற்கள்! நற்பணிகள்! பொற்சீர்
குவியும் பெருவாழ்வு கொஞ்சச் - சுவைசேர்
கவியும் கலையும் கவிஞன்என் பேரும்
அவளின் அளிப்பென ஆடு!
369.
பொன்தேர் செலுத்தும் புவியாளும் மன்னனைப்போல்
இன்தேர் செலுத்தும் இசைபுலவன்! - மன்பதையில்
என்பேர் செலுத்த எழிற்கொடுத்த பேரழகே!
உன்பேர் இயக்கும் உயிர்!
370.
உனைத்தொட்ட நாள்முதலாய் உள்ளம் குளிர!
மனைதொட்ட துன்பம் மறைய! - கனவின்
கணைதொட்ட நெஞ்சுள் கமழ்ந்தாடக் காதல்
சினைதொட்டு வாழும் செழித்து!
(தொடரும்)
mmmmmmm.....
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
உம்மென்று உரைக்கும்முன் ஈடில் கவிதைபல
கும்மென்று தோன்றிக் குதித்தாடும்! - எம்தோழா!
கோடி மலா்க்கூட்டம் கொண்ட அழகையெலாம்
சூடிக் களிப்பவளைச் சூழ்ந்து!
அன்பு சுரக்கும் வரிகள்...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
Supprimerவணக்கம்!
அன்பு சுரந்துாறும்! ஆசை நிறைந்துாறும்!
இன்ப நிளனவோ இனித்துாறும்! - மென்றமிழின்
பண்பூறும்! போற்றும் பணிவூறும்! பாவைதன்
கண்ணுாறும் காதல் கவி!
கண்ணன் குரலோசையும் சற்று நிதானித்து தங்கள் கவி மழையில் நனையக் காத்திருக்கும்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கண்ணன் குழலினிமை! கன்னல் கனியினிமை!
வண்ண மலா்கள் வளரினிமை! - எண்ணமெலாம்
உண்ணும் அவளழகைப் பண்ணும் கவியினிமை!
மண்ணும் வியக்கும் மலைத்து!
வந்தாள் அருகில்! மயில்நடம் நான்மயங்கத்
RépondreSupprimerதந்தாள்! தவிக்க எனைவிட்டாள்! - செந்தமிழ்ச்
சிந்தால் உயிரைச் சிறையிட்டாள்! காதல்பூப்
பந்தால் அடித்தாள் பறந்து!
வணக்கம் ஐயா!
ஒவ்வொரு வரிகளிலும் ஓர் ஏக்கம், தவிப்பு, காதல்
மனதைச் சொக்க வைக்கிறது .வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாகத் தொடரட்டும் தங்கள் கவிதைகள். மிக்க நன்றி பகிர்வுக்கு .
Supprimerவணக்கம்!
மோக முகத்தழகி! முல்லை மலா்க்காடாய்
தேக வடிவழகி! தீராத - தாகத்தால்
விக்குதே நெஞ்சம்! விழியழகில் சிக்குண்டு
சொக்குதே நெஞ்சம் சுருண்டு!
அப்பப்பா உங்கள் வலைபூவுக்கு வந்து இவ்வளவு நாட்கள் எல்லாவறையும் படித்து முடிப்பதற்குள் நீங்கள் அடுத்த கவிதை மழை பொழிந்துவிட்டீர்கள் உங்கள் தமிழ் வளமை பற்றி என்ன சொல்வது என்றே புரியவில்லை தமிழுக்கு அழகான தொண்டு
RépondreSupprimerதமிழை காப்பாற்றும் உங்களுக்கு நன்றிகள் பலகோடி
இலக்கிய நயம் மிகுந்துள்ள கவிதைகளுக்கு கருத்து சொல்ல கொஞ்சம் அச்சபடுவேன் மிகவும் அழகு அவ்வளவுதான்
வணக்கம்!
அப்பப்பா என்றுள்ளம் ஆடும்! அவளழகைச்
செப்பப்பா என்றுள்ளம் செம்மையுறும்! - ஒப்பப்பா
என்றுரைக்க ஏதுபொருள்! என்னவளின் பொன்னழகை
நன்றுரைக்க நண்ணும் நலம்!
ஒவ்வொன்றும் அற்புதம் ஐயா! செமையா இருக்கு, உங்களின் தமிழ் வார்த்தைகள் அழகூட்டுது. வாழ்த்துகள்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்
சொற்கள் அழகுபெறும்! துாயவளின் சிந்தனைகள்
நற்கள் தரும்போதை நன்கேற்றும்! - பொற்புடைய
வாழ்வு தழைக்கும்! வளா்வஞ்சி பேரழகில்
ஆழ்ந்து தழைக்கும் அகம்!
வணக்கம்
RépondreSupprimerகவிஞர்,கி,பாரதிதாசன்)ஐயா
கொள்ளளவு மீறிக் கொழிக்குதடி! எந்நொடியும்
சொல்லளவு மீறிச் சுரக்குதடி! - நல்லமுதே!
கள்ளளவு போதைதரும் கண்ணழகு! காண்பதனால்
எள்ளளவும் உண்டோ இடர்!
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
கருமையொளிர் கண்கள்! கலைமகள் போன்றே
ஒருமையொளிர் தோற்றம்! உயிரை - உருக்கும்
அருமையொளிர் பெண்ணே! அடியவனின் நெஞ்சுள்
பெருமையொளிர் வாழ்வைப் பெருக்கு!
பாவலரையா... இனிமையான கவிகள். அழகுமிளிர் சொற்கள். எடுத்தியம்ப வார்த்தைகள் இல்லை. அத்தனையும் எமக்கு அள்ளிப்பருகிட நீங்கள் படைத்திட்ட அமுதகானங்கள்.
RépondreSupprimerவணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா...
Supprimerவணக்கம்!
அடுத்தியங்கும் ஆற்றல் அளிப்பாள்! இனிமை
கொடுத்தியங்கும் பாக்கள் கொழிப்பாள்! - அடடா
எடுத்தியம்ப வேண்டும் இனியவளின் சீரைத்
தொடுத்தியம்ப வேண்டும் தொடா்ந்து!
ஏக்கம் ததும்பும் அற்புத வரிகள் அய்யா
RépondreSupprimer