dimanche 3 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 19]





காதல் ஆயிரம் [பகுதி - 19]


81. 
முகம்கண்டேன்! முல்லை மலர்கண்டேன்! மின்னும் 
அகங்கண்டேன்! இன்னறம் கண்டேன்! – பகையாம்  
நகங்கண்டேன்! வற்றா நலங்கண்டேன்! காதல் 
சுகங்கண்டேன்! என்னவளைச் சூழ்ந்து! 


182.
தனந்தவழும் முத்துச் சரங்கண்டேன்! என்றன்
மனந்தவழும் பொன்னிதழுங் கண்டேன்! – மணஞ்சேர்
இனந்தவழும் இன்பத் தமிழ்கண்டேன்! பூத்த
வனந்தவழும் மங்கை வடிவு!

183.
வண்ண மதிகண்டேன்! சொன்ன மொழியிலே
கன்னல் நதிகண்டேன்! கண்மணியே – அன்னநடை
மின்னல் இடைகண்டேன்! என்னவளை யான்பெறவே
என்ன தவம்செய்தேன் இங்கு!

184.
பூங்குயில் கண்டேன்! புதுமை எழிற்கண்டேன்!
மாங்குயில் கண்டேன்! மனம்மகிழ்ந்தேன்! - நீங்கிடா
வேங்குழல் கண்டேன்! விருந்து நலங்கண்டேன்!
ஏங்குயிர் கொண்டேன் இனித்து!

185.
வண்டும் மலரும் இணைந்து பிறந்ததைக்
கண்டு வியக்கும் கவிமனம்! - தொண்டனாய்
நின்று நெடியவனைக் கண்டு நெகிழ்வதுபோல்
என்றும் இனிப்பாள் இவள்!

186.
எண்ணும் எழுத்தும் இருவிழிகள் என்றவளே!
உண்ணும் உணவாய் உயா்தமிழைக் - கொண்டவளே! 
கண்ணும் கொடுக்கும் கவிகோடி! உன்வரவால்
மண்ணும் மணக்கும் மலர்ந்து!

187.
எத்தனை வண்ணங்கள் என்னவள் பார்வையில்!
சித்தனைக் கூடக் சிலிர்ப்பேற்றும்! - முத்தாக
மின்னுகின்ற பல்லழகும் மீட்டும் இசையாகப்
பின்னுகின்ற சொல்லழகும் பீடு!

188.
வெண்பா முடிவழகு! என்பா வடிவழகு!
நன்..பா விருத்த நடையழகு! - பொன்பாவாம்
ஒண்பா குறளழகு! உன்பாச் சுவையழகு!
கண்..பார் பெருகும் கவி!

189.
சிந்திய முத்தங்கள் சிந்தனை மன்றத்தில.
குந்தி யிருந்து கூத்திசைக்கும் - செந்தமிழே!
முந்தி யிருந்து முகம்காட்டி, ஆசைகளைப்
பந்தி படைத்தாய் பசித்து

190.
ஒத்தையடிப் பாதை! ஒளிரும் மலர்ப்பந்தல்!
மெத்தையடி மென்தழைகள்! சிட்டுகளின் - வித்தையடி!
கொஞ்சுதடி பூங்குயில்கள்! கூடுதடி நம்மிதழ்கள்!
விஞ்சுதடி முத்தங்கள் வென்று!
                                                                                                                               
(தொடரும்)

2 commentaires:

  1. //என்னவளை யான்பெறவே
    என்ன தவம்செய்தேன் இங்கு!//

    இப்படி சொல்ல
    இறைவன் வரம் கொடுத்திருக்க வேண்டும் !

    மெல்லிய வர்ணனைகள்
    மனதை தென்றல் காற்றை தழுவுகிறது.

    வாழ்த்துகள் ... தொடர்க...

    இதற்கும் வருகை தரும்படி அழைக்கின்றேன்.
    http://chitramey.blogspot.in/2013/02/blog-post.html

    RépondreSupprimer
  2. பண்பாய்ப் பாவியற்றும் பாரதிதாசன் ஐயாவே
    உம் பா இனிக்குதையா மேலும் சுவைக்குதையா
    பெண்பாவை நம்பாவை தங்கத்தமிழ்ப் பாவை
    வெண்பாவெனப் பாடினீர் வியந்து!

    ஐயா அத்தனையும் அருமை! விலைமதிக்கமுடியாத ரத்தினங்கள். வாழ்த்தும் அளவிற்கு எனக்கு அறிவு போதவில்லை. வணங்குகிறேன்!

    RépondreSupprimer