vendredi 22 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 31]





காதல் ஆயிரம் [பகுதி - 31]

301.
நாள்முழுதும் உன்னினைவே ஆல்போல் வலிமையுறும்!
தாள்முழுதும் கற்பனை தாலாட்டும்! - சேல்விழியே!
கால்முழுதும் மின்னாடை கட்டி நடனமிடும்!
வேல்முழுதும் பாய்ச்சும் விழி!

302.
பேசா திருந்தால் பெரும்துயரம்! காற்றிங்கு
வீசா திருந்தால் வினையேது? - நேசனெனை
ஏசா திருந்தால் எழுதுகிறேன்! பொய்களைக்
கூசா துரைப்பதேன் கூறு?

303.
ஒருமுறை என்னைத் திரும்பி..நீ பாராய்!
ஒருகுறை இன்றிநான் ஓங்க! - தெருவில்
வரும்முறை தோறும் மலர்முகம் காட்டு!
தரும்முறை நற்றமிழ்ச் சால்பு!

304.
உனக்கென்ன பெண்ணே? உணர்வால் துடிக்கும்
கணக்கென்ன சொல்லிக் கதைக்க! - மின்னும்
மினுக்கென்ன? காதல் விரிப்பென்ன? தாக்கி
எனக்கென்ன என்றே இரு!

305.
பேசுதடி மீன்அழகாய்! என்னைப் பிடித்திட
வீசுதடி பொன்வலையை! விந்தையெனக் - கூசுதடி! 
மோதல் படைநடத்தி மூச்சை அடக்குதடி!
காதல் பொழியும்உன் கண்!

306.
வாட்டுதடி! வந்தெனது மார்பில் கவிதைகளைத்
தீட்டுதடி! என்மனத்தைத் தின்னுதடி! -  நாட்டமுடன்
ஊட்டுதடி செந்தேனை! உள்ளுயிர் பூரிக்க
மூட்டுதடி மோகத்தை மூக்கு!

307.
வில்லேந்தும் செவ்வுதடு! விஞ்சும் சுவையுடைய
சொல்லேந்தும்! தூய மதுவேந்தும்! - மல்லேந்தும்
வீரன் மயங்க விருந்தேந்தும்! நான்விரும்பும்
ஆரா அமுதம் அவள்!

308.
மின்னிடும் பொற்குடங்கள்! மீட்டும் சுருதிகளைத்
தன்னிடம் கொண்ட தளிர்தனங்கள்! - இன்தேன்
குறையா அமுதச் சுரபிகள்! கண்ணுக்குள்
மறையா தொளிரும் மலர்ந்து!

309.
ஏன்உனைக் கண்டேன்! இனியவளே எந்நொடியும்
நான்உனை எண்ணி நலிகின்றேன்! - தேன்மொழியே!
கூன்மனம் ஏனடி? குன்றும் நிலைபோக்க
வான்மழை போலவே வா!

310.
மெல்ல நடைநடந்து கள்ள விழிதிறந்து
வல்ல கணைதொடுத்து வந்தவளே! – கள்ளூரும்
செல்லக் கவிமொழிந்து சீராய் எனையளந்து
உள்ள உணர்வினை ஊட்டு!

(தொடரும்)

3 commentaires:

  1. மிக அருமையான கவிதை. இன்றையக் காலக் கட்டத்தில் கூட இவ்வளவு அருமையான எளிமையான மரபுக் கவிதைகளை காண்பதே அபூர்வம் .. வாழ்த்துக்கள் தோழரே !

    RépondreSupprimer
  2. ஏன்உனைக் கண்டேன்! இனியவளே எந்நொடியும்
    நான்உனை எண்ணி நலிகின்றேன்! - தேன்மொழியே!
    கூன்மனம் ஏனடி? குன்றும் நிலைபோக்க
    வான்மழை போலவே வா!

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் கவிதை மகள்
    என்றென்றும் இன்பம் தந்து மகிழ்வாள் அஞ்சாதீர்
    இன்பத் தமிழ் என்றும் உங்கள் உயிரோடு ஒட்டிப்
    பிறந்தவை அது என்றும் குன்றிப் போகும் நிலை
    தோன்றாது .மிக்க நன்றி தளராது நின்று கவிதை
    வடிக்கும் தங்களுக்கு!

    RépondreSupprimer
  3. அருமை ஐயா உங்கள் கவிகள்... வாழ்த்துக்கள்!

    தமிழ்மொழியின் தனியழகில் மனம்மயங்கி நிறைத்திட்ட
    சிமிழ்திறந்து சிந்தியஓவியமாம் உம்கவி இன்னும் அதையள்ளி
    அமிழ்தாகப் பருகிட ஆவலைத் தூண்டிடுதே அதுவல்லாமல்
    குமிழாகிக் கிடந்திடுமோ மனம்...

    RépondreSupprimer