dimanche 24 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 34]





காதல் ஆயிரம் [பகுதி - 34]


331.
போற்றும் புலமை பொலிந்தாடும் பூங்கொடியே!
காற்றும் எனக்கு..நீ! நற்கவிதை - ஊற்றும்..நீ!
தோற்கும் நடையழகில் தூயவெண் அன்னங்கள்!
ஏற்கும் அதனினம் என்று!

332.
அன்னமொன்று மெல்ல அசைந்து நடந்துவர!
என்னவென்று சொல்லிடுவேன் என்னிலையை! - மின்னலொன்று
கண்ணிலொன்றைக் கவ்வியது! காதல் பெரும்சுவையின் 
பண்ணிலொன்றைப் பாடுகிறேன் பார்!

333.
அடைகாக்கும் சிட்டென ஆசைகளைக் காத்தே
நடைகாக்கும் நற்றமிழ் நங்கை! - புடைத்த
உடைகண்டும் மென்மை இடைகண்டும் வாழைத்
தொடைகண்டும் நீங்கும் துயர்!

334.
மாலை மணியெட்டு! மங்கையவள் வந்திடுவாள்!
சோலைக் குளிருற்றுச் சொக்குகிறேன்! - சேலையெழில் 
மூளை முழுதும் பதிவாகி முட்டிடுமே? 
காளை கனவில் கலந்து! 

335.
சின்னவள்! மெல்லச் சிணுங்கும் செயலுயர்ந்து
பொன்னவள் ஆகிப் பொலிகின்றாள்! - பண்ணிசைக்கும்
என்னவள்! இன்பருவப் பெண்ணவள்! ஈடிலாத் 
தென்னவள் சீர்களைச் சேர்த்து!

336.
ஊக்கம் இலாமல், உயிர்பருகும் ஒண்டமிழ்
ஆக்கம் இலாமல் அலைவதுமேன்? - எக்கணமும்
தூக்கம் இலாமல் துவளுக்கின்ற என்னவளே 
ஏக்கம் எதுவோ எழுது!

337..
பாடிக் களிப்பாள்! பசுஞ்கவிஞன் என்னுடன்
ஆடிக் களிப்பாள்! நயனணிகள் - சூடியென்று
கூடிக் களிப்பாள்! இரு..கைகள் கொண்டின்று
மூடிக் களிப்பாள் முகம்!

338.
பொன்னணிக் கூடம்! பொலிபுதையல்! தேனுற்று!
மின்மினிக் கூட்டம்! மிளிர்பட்டு! - கண்மயக்கும்
விண்மினிப் பூக்கள்! வியப்பூட்டும் மத்தாப்பாம்!
என்னுயிர்ப் பெண்ணின் எழில்!

339.
இங்கு நலம்..நீ! இளையவளே! பேரழகே!
அங்கு நலமா..நான்! ஆரமுதே! - செங்கரும்பே!
தங்கு தடையின்றித் தண்டமிழ்ப் பாட்டிசைப்போம்!
பொங்கும் இளமை பொலிந்து!

340.
நினைந்துடல் மெல்ல நெகிழும்! வியர்வால் 
நனைந்துடல் ஆடும் நடனம்! - மணந்தே
இணைந்துடல் சொக்கும்! இளமை துடிக்கும்!
பிணைந்துடல் காணுமே பேறு!

(தொடரும்)

3 commentaires:

  1. காதலில் கலக்குகிறீர்கள் மிகசிறந்த சொல்லாடல்கள் ... சிறந்த ஆக்கம் பாராட்டுகள் ....

    RépondreSupprimer
  2. வணக்கம்
    கவிஞர் கி,பாரதிதாசன்(ஐயா)

    இங்கு நலம்..நீ! இளையவளே! பேரழகே!
    அங்கு நலமா..நான்! ஆரமுதே! - செங்கரும்பே!
    தங்கு தடையின்றித் தண்டமிழ்ப் பாட்டிசைப்போம்!
    பொங்கும் இளமை பொலிந்து

    அருமையான வரிகள் சொல்வதற்கு வார்தைகள் இல்லை ஐயா,
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    RépondreSupprimer
  3. ஆடிக்களிக்கத் தமிழில் நற் பாக்களைப்
    பாடித்தந்தீர் பாவலரே! உம் அருங்கவிகளை
    தேடித்தினம் படிக்கும் தமிழார்வலர் எமதுள்ளம்
    கூடிக்குதூகலிக்கும் தினம்.

    RépondreSupprimer