jeudi 4 octobre 2012

அன்பில் ஆழ்க





அன்பில் ஆழ்க!

முன்னோர் உரைத்த நன்னெறி தம்மைத்
தூற்றி வாழ்தல் போற்றும் செயலோ?
உண்மை தாழப் பொய்ம்மை உயர
எண்ணம் கொண்டால் நன்மை உண்டோ?
சாதிப் பெயரை ஓதி உலகில்
வாழும் பித்தர் வீழ்தல் என்றோ?
பேசிப் பேசி வாழ்வை வீணில்
கழித்தல் சரியோ? பழித்தல் உயர்வோ?
வாட்டும் திட்டம் தீட்டும் கொடியோர்
நாட்டைச் சுரண்டக் கோட்டை ஆள்வதோ?

சீராய் வாய்த்த பேரும் புகழும்,
துன்னும் காமம் குன்றச் செய்யும்!
அடுத்தவர் வாழ்வைக் கெடுக்க எண்ணும்
கீழ்மை யாலே சூழும் துயரே!
உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும்
செப்பித் திரிதல் ஒப்பாச் செயலே!
எல்லாம் அறிந்த வல்லோன் யானே
எனயிங் குளறல் மனத்தின் பித்தே!
தெரியா தொன்றைத் தெரிந்தவன் போலே
கதைக்கும் மாந்தன் விளையா நிலமே!

குற்றம் புரிந்தால் சுற்றம் நாடா!
பொறுமை இழந்தால் பெருமை சேரா!
உரிமை இழந்தால் அடிமை யன்றோ!
ஆணவம் உற்றால் மானம் போகும்!
சூதின் முடிவு தீதே யாகும்!
தற்புகழ் செப்பல் சிற்றறி வாகும்!
பொல்லா நட்பு தொல்லை சேர்க்கும்!
நல்லார் நட்பு வல்லமை யாக்கும்!
தன்னைப் பெரியதாய் எண்ணிக் கொள்ளும்
தலைக்கனத் தாலே குலையும் வாழ்வே!

மொழியை உம்மின் விழியாய்க் காத்தே
இன்பம் கொள்க! அன்பில் ஆழ்க!
பண்பாம் தேனை நன்றே பெறுக!
கற்றவர் உறவைப் பெற்றே வாழ்வில்
நலமே காண்க! வளமே சேர்க!
கள்ளம் இல்லா உள்ளம் உற்றே
நற்றவன் தாள்களைப் பற்றி வாழ்க!
பிறப்பின் நோக்கை இறக்கும் முன்னே
ஆய்ந்து தெளிக! தோய்ந்து தமிழுள்
நூல்கள் படைத்துக் காலம் வெல்கவே!!

6 commentaires:

  1. எத்தனை எத்தனை கருத்துக்கள் ஐயா...

    மிகவும் பிடித்தவை :

    /// பிறப்பின் நோக்கை இறக்கும் முன்னே
    ஆய்ந்து தெளிக! தோய்ந்து தமிழுள்
    நூல்கள் படைத்துக் காலம் வெல்கவே! ///

    மிக்க நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      என்றமிழ்த் தோழா! உன்றன்
      எழில்மிகு கருத்தைக் கண்டேன்!
      இன்றமிழ் அன்னை சீா்கள்
      எத்தனைக் கோடி இன்பம்!
      மென்றமிழ் நுால்கள் நல்கும்
      பொன்னெறி கற்போம்! காப்போம்!
      மின்றமிழ் உலகை ஆள
      விரைந்துநாம் பணிகள் செய்வோம்!

      Supprimer
  2. அன்பாம் அமுதை அளிக்கின்ற உம்முடைய
    இன்பாம் கவிதைக் கிணையுண்டோ? - எம்மின்
    மனம்புகுந்து ஆடும்! வளர்தமிழ்த் தாயின்
    வனம்புகுந்து ஆடும் மணந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அன்பே இறையென்னும் ஆழ்ந்த பொருளுணர்ந்தால்
      துன்பே வருமோ? துணிவறுமோ? - நன்றே...நாம்
      ஒற்றுமை இன்றி உழலும் நிலைவருமோ?
      உற்றுமைப் பாரீர் உடன்!

      Supprimer

  3. சாதியால் சண்டை! சமயத்தால் மோதல்!வெண்
    காதியுடைக் காரரும் கள்விற்பார்! - சோதி
    வழிகாணக் கையூட்டு! வன்முறை! நாட்டில்
    எழில்காண உண்டோ இடம்?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அன்பென்னும் ஆரமுதை அள்ளி அருந்திடுவீர்!
      இன்பென்னும் பண்பை இசைத்திடுவீர்! - மன்பதையில்
      வேற்றுமை நீக்கி விளைத்திடுவீா் ஒற்றுமையை!
      ஏற்று..இவை ஏத்தல் எழில்!

      Supprimer