ஓடிவரும் மேக முடன்ஒளிந்து கண்புதை
ஆடிவரும் வெண்மதியின் அச்செயல்போல் - மாடியின்மேல்
மெல்லிடையாள் நின்று மறைந்துமெல்லக் காட்டுகிறாள்
முல்லையென மின்னும் முகம்!
தேனருந்தும் வண்டினமே! தேடியெனை வந்திடுக!
நானறிந்த செய்திகளை நன்குரைப்பேன்! - தேன்னாடிக்
கால்வைக்க வேண்டா!என் காதலியின் பூமுகத்தில்
வேலெனத் தாக்கம் விழி!
காதல் கதைவரையும் தூரிகை! இன்பமிகு
மோதலை முன்னுரைக்கும் முன்னுரை! - மாதவளே!
பொன்மயிலின் ஆட்ட அசைவுகளைப் பூத்தினிதே
என்னுயிரை ஈர்க்கும் இமை!
அடுக்காய்க் கவிதைகளை அள்ளி அளிக்கும்!
மிடுக்காய் எடுப்பாய் மிளிரும்! - கொடுக்கும்
அகத்துள்ளே பொங்கியெழும் ஆசைகளை! உன்றன்
முகத்துக்(கு) அழகூட்டு மூக்கு!
சுரக்கும் மதுவூற்று! சொர்க்கத்தின் வாயில்!
விரைந்து கணைதொடுக்கும் வில்கள்! - விரவும்
அன்பைப் பொழிகின்ற மேகம்! அழகே!உன்
இன்பத்தேன் ஊறும் இதழ்!
மண்ணில் தவழும் கருமேகம்! மன்னனிவன்
கண்ணில் தவழும் கவியலை! - இன்பெய்தி
மஞ்சம் மணக்கும் பொழுதினிலே என்கைகள்
கொஞ்ச மணக்கும் குழல்!
பொழிலோ? பொழியும் பனியோ? புகழார்
எழிலோ? இறைவாழ் இடமோ? - செழிப்பருளும்
பண்பின் பிறப்பிடமோ? பைங்கொடியே உன்னுடைய
அன்பொளி வீசும் அகம்!
நீராடி நின்றவுனை நேராகக் கண்டதனால்
போராடி நிற்கின்றேன் பூங்குயிலே! - தீராத
தாகத்தைத் தந்து தவிர்த்திடச் செய்யுதடி
மோகத்தை மூட்டும் கனி!
கொஞ்சும்! மலர்க்கொடியை விஞ்சும்! அதைக்கண்டு
நெஞ்சும் நினைவும் நெகிழ்ந்தாடும்! - தஞ்சமென
உன்னைத் தொடர்ந்துவர ஊட்டும் உணர்ச்சியை!
என்னை இழுக்கும் இடை!
மலைவாழைத் தண்டோ? மெழுகால் வடித்த
கலையொளிர் தூணோ? கருத்தை - வளைத்துக்
கவரும் வடிவழகே! கண்மணியே! உன்றன்
துவளும் இடையின் தொடை!
கம்பன் 17-12-2002
adengappaaaaaa.....!!!!!
RépondreSupprimerarumai ayya!
Supprimerவணக்கம்!
நண்பா் கருத்திற்கே அன்பனென் நன்றிகளை
வெண்குறளில் வைத்தேன் விருந்து!
இனிய மொழியால் இயம்பும் கருத்துக்
கனிபோல் கமழும் கலந்து!
நீராடி நின்றவுனை நேராகக் கண்டதனால்
RépondreSupprimerபோராடி நிற்கின்றேன் பூங்குயிலே!
/////////////////
நிறையக் காதல்கள்ன் ஆரம்பம் இதுதான் போல....
நன்றாக இருக்குது சார்
Supprimerவணக்கம்!
சிட்டுக் குருவிக்குச்
செப்பினேன் நன்றிகள்!
நல்ல தமிழினில் நண்பா எழுதுக!
தொல்லை அகற்றுவதே தொண்டு!
சார்என்ற சொல்நீக்கி ஐயா எனச்சாற்று!
பார்உன்னைப் போற்றும் பணிந்து!
அத்தனை வெண்பாக்களும் அருமை .
RépondreSupprimer// தேனருந்தும் வண்டினமே! தேடியெனை வந்திடுக!
நானறிந்த செய்திகளை நன்குரைப்பேன்! - தேன்னாடிக்
கால்வைக்க வேண்டா!என் காதலியின் பூமுகத்தில்
வேலெனத் தாக்கம் விழி!// மிகவும் கவர்ந்தது.
Supprimerவணக்கம்!
பிடித்த கவிதையைச் செந்தேன் பெருக்கை
வடித்த கவிதையை வார்த்தீா்! - துடிப்பாய்ப்
படித்த கவிதையைப் பார்த்தேன்நான்! நெஞ்சை
இடித்த கவிதை இது!
கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துகள்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்! நன்றிகள்!
கவிதைச் சுவையில் கலந்து களித்தீா்!
குவித்தே இருகை குளிர்ந்து!
ஆற்றொழுக்காய் சொற்கள் அழகுத் தமிழ்தன்னில்
RépondreSupprimerஊற்றுப் பெருக்காக ஓடிவந்தே-போற்றிடவும்
வெணபாவாய் இங்கே விளையாட விட்டீரே
நண்பானீர் வாழ்க நனி
Supprimerவணக்கம்!
ஒண்பாப் புலவருக்கு வெண்பாக் கவிஞன்யான்
தண்பா வணக்கம் தருகின்றேன் - நண்பரே!
என்பா படித்தே இனியதமிழ் ஓங்கிடப்
பொன்பா படைத்தீா் புகழ்ந்து!
Ce commentaire a été supprimé par un administrateur du blog.
RépondreSupprimer
Supprimerவணக்கமும்! வாழ்த்தும்! நன்றியும்!
தெரியாமல் உங்கள் கருத்தை நீக்கி விட்டேன்!
மீண்டும் கருத்தைக் கொண்டுவரத் தெரியவில்லை!
வேல்கண் தருகின்ற போதை விருந்தினை
மால்கண் தருமோ மனத்து!
யப்பா... என்ன விழிகள்...
RépondreSupprimerஅழகான வர்ணனை...
நன்றி ஐயா...
Supprimerவணக்கம்!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்!
அப்பா எனுமுரை அந்தமிழ்த் தேன்சுரக்கும்!
இப்பா புகழ்ந்தீா் இனித்து!
RépondreSupprimerவேலெனத் தாக்கும் விழிகளில் தாம்மயங்கிச்
சேலென நீந்துகிறாய்ச் செந்தமிழில்! - பாலென
உள்ளம் படைத்த உயர்புலவ! உன்கவியில்
துள்ளும் இளமை தொடர்ந்து!