samedi 20 octobre 2012

புலவன் யானே!




மூவேந்தர் முன்வளர்த்த
            முத்தமிழே! மூத்தவளே!
                     மூவா தென்றும்
நாவேந்தர் நாவினிலே
            நடம்புரிந்த நற்றமிழே!
                     நாளும் வல்ல
பாவேந்தர் பாடிநின்ற
            பசுங்குயிலே! பைந்தமிழே!
                     பரிவோ டுன்னைப்
பூவேந்திப் புகழேந்திப்
            போற்றிடுவேன் என்தாயே
                     புலவன் யானே!

எத்தனையோ மொழியுண்டாம்
            இருந்தாலும் உளமினிக்கும்
                     என்தாய் உன்போல்
முத்தெனவே நின்றொளிரும்
            மொழியுண்டோ? முச்சங்கம்
                     முறையாய் உண்டோ?
இத்தரையில் நெறியூட்டும்
            இலக்கியமும் இலக்கணமும்
                     எழிலாய்ப் பெற்ற
தித்திக்கும் செந்தமிழே!
            தெவிட்டாத ததெள்ளமுதே
                     சிறந்த வாழ்வே!

எனைவிட்டே எல்லோரும்
            பிரிந்தாலும் என்னுயிரோ(டு)
                     இயங்கும் மூச்சே!
உனைக்கொண்டே நான்நன்றாய்
            உயர்வடைந்தேன்! நற்புகழால்
                     ஓங்கும் வாழ்வே!
மனையரசி போலேஎன்
            மனத்துள்ளே உறைகின்ற
                     மாதே! கன்னல்
அனைமொழியே! என்னுடைய
            அகத்தென்றும் வாழியநீ
                     அமைந்து நன்றே!

4 commentaires:

  1. அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. அருமையான கவிதை அய்யா.தமிழன்னை தங்களின் அகத்தென்றும் வாழுவார்.

    RépondreSupprimer
  3. எதனை நன்று என்று சொல்வது தெரியாதி ஐயா.
    ஒவ்வொரு வரிகளையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள்

    RépondreSupprimer