samedi 6 octobre 2012

முரண்பாடு



மொழியைக் காக்கும் அறிஞர்தம்
    முடிவை ஏற்று நன்மையுறும்
வழியைக் காண்பார் அரசியலார்!
    மண்ணில் இதுவே வரலாறு!
பழியைத் துடைத்துத் தமிழறிஞர்
    படைக்கும் நெறியைக் கேட்காமல்
இழிவை நாடித் தமிழ்மக்கள்
    ஏனோ தாழ்ந்து கிடக்கின்றார்?

வீட்டில் பெண்ணைச் சிறைவைத்த
    விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்!
நாட்டில் உள்ள துறையெங்கும்
    நம்மின் மாதர் கால்வைத்தார்!
ஏட்டில் மேலும் பெண்ணுரிமை
    எழுதிப் பேசி மகிழ்கின்றோம்!
பாட்டில் மங்கை சீர்கேட்டும்
    பாரில் வளரும் மணக்கொடையே!

பிறந்த நாளைக் கணக்கிட்டுப்
    பின்னே அமையும் வாழ்வுதனைச்
சிறந்த முறையில் செப்பிடுவார்
    சித்தன் கோயில் சோதிடரே!
திறந்து நூலைப் பார்க்காமல்
    திறமாய்ப் பேசும் அவர்,வாழ்வில்
நிறைந்து வறுமை பெருந்துயரம்
    நிலைத்த தேனோ அறிவாரோ?

இறைவா இறைவா என்றோதி
    இங்கே வாழும் பித்தர்சிலர்
நிறைவாய்க் கருணை பெற்றவரோ?
    நெஞ்சம் கேட்கும் கேள்வியிது!
குறையே இல்லா அருட்சோதி
    கொடுத்த மேலாம் உயிர்கட்குள்
கறையைப் பூசிப் பிரிக்கின்றார்
    மறையை அவர்தாம் உணர்வாரோ?

வாக்கை நாடி நம்வாயில்
    வந்து நின்ற தலைவர்பலர்
ஊக்கத் தோடே உறுதிமொழி
    உரக்கச் சொன்னார் பொய்யாக,
ஆக்கப் பணிகள் புரிகின்றார்
    அவர்தம் வாழ்கை ஓங்கிடவே!
தாக்கும் வறுமை பிடியினிலே
    தவிக்கும் மக்கள் உணர்வாரோ?

சாதி ஒழியப் பாட்டெழுதிச்,
    சண்டை தீர உரையாற்றி,
நீதி நெறியின் நலங்கூறி,
    நேயம் ஊட்டும் நூல்தீட்டிப்,
போதி மரத்துப் புத்தர்தம்
    புகழைச் சொன்ன புலவர்சிலர்
காதி அணிந்து கள்ளுண்டு
    காத்தார் அவர்தம் சாதியையே!

கணக்குப் போட்டுக் கல்விதனைக்
    காசாய் ஆக்கும் கயவன்சொல்
தனக்கு நிகராய்க் கவியெழுதச்
    சான்றோர் உலகில் உள்ளனரோ?
மணக்கும் என்றே அவன்நூலை
    வாங்கி நன்றே படித்திட்டேன்!
வணங்கும் மொழியைக் கொலைசெய்து
    வடித்த அவனை என்சொல்வேன்?

சிந்தை கவர்ந்த மனைவியிடம்
    சிரித்து அடங்கி வாழ்ந்தானே!  
தந்தை தாயைக் காக்காமல்
    தனியே பிரிந்து சென்றானே!
இந்தப் பிரான்சு மண்மீதே
    இனிதே வாழ வந்தானே!
சொந்தம் நாடிப் பெற்றோரைத்
    துணைக்கு அழைத்தான் சூதன்றோ!

ஆன்ம நேயம் வளர்ந்திட்டால்
    அழிவுக் கிங்கே இடமுண்டோ?
ஆன்ற பெரியோர் இதையுணர்ந்தே
    அன்பே கடவுள் என்றனரே!
ஊன்றிப் படித்தால் அறிந்திடலாம்
    உலகை அழித்த பெருங்கொடுமை
தோன்றி வளர்ந்த இடம்,மதமே!
    தொடரும் துயரைத் தடுப்பாயே!
 
உள்ளே ஒன்றும் வெளியொன்றும்
    உரைக்கும் மாந்தர் சேர்ந்தினிதே
வள்ளல் பெருமான் திருப்புகழை
    வடிவாய்ப் பேசி மகிழ்ந்தனரே!
கொல்லா நெறியின் மாண்புகளைக்
    கொடுக்க வந்த பேச்சாளர்
எல்லாக் கறியும் உண்பாராம்
    என்ன கொடுமை இறையவனே?

16 commentaires:

  1. முரண்பாடுகளை அழகான கவிதையாக ஆக்கி இருக்கிறீர்கள் நன்று.படிப்பவர் உணர வேண்டும்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முத்தான உங்கள் மொழிக்கென் நனிநன்றி!
      கொத்தான பூக்கள் பொடுத்து!

      முரணாகும் போக்கினை முற்றும் அழித்தால்
      அரணாகும் ஆற்றல் அமைந்து!

      Supprimer
  2. ஒவ்வொரு முறை கருத்திடும்போதும் வோர்ட் verfication வந்து தொல்லை கொடுக்கிறது.எனவே அதை நீக்கினால் நலம் என்று கருதுகிறேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. மீண்டும் வணக்கம்!

      அன்பா் பலரும் இக்கருத்தை
      அழகாய் எழுதி விடுத்துள்ளார்!
      துன்பா் சிலரை யான்எண்ணித்
      துணிந்து தடையை வைத்துள்ளேன்!
      வன்பா்! வம்பா்! என்றய்யம்
      மனத்தில் இல்லை! செந்தமிழின்
      இன்பா் உங்கள் கருத்தேற்றே
      இன்றே தடையை அகற்றுகிறேன்!

      Supprimer
  3. உண்மையான முரண்பாடுகள்...

    நீங்க வேண்டும்... நீக்க வேண்டும்...

    RépondreSupprimer
    Réponses

    1. தண்டமிழ் நண்பா! தனபாலா! நன்றியை
      வண்டமிழில் சொன்னேன் மகிழ்ந்து!

      நீங்கிட வேண்டும் முரண்பாடே! இக்கருத்து
      ஓங்கிட ஓங்கும் உலகு!

      Supprimer
  4. ஆம் உண்மைதான். முரண்பாடுகளே இன்று புத்திசாலித்தனமாய் பார்க்கப் படுகின்றன

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      கரந்தைத் தமிழ்சங்கம் காத்த தமிழைக்
      கரந்தைச் செயகுமார் காட்டு!

      உள்ளே பொய்ம்மை உற்பத்தி!
      வெளியே உண்மை நற்பக்தி!
      கள்ளே பாலாய்க் காட்சிதரக்
      காட்டும் நடிப்புப் பலகோடி!
      முள்ளே நிறைந்த காடாகும்!
      முரணாய் வாழும் புண்வாழ்க்கை!
      எள்ளே என்று பழியேற்று
      இருத்தல் இறத்தல் ஒன்றன்றோ!

      நண்பா் செயகுமார் அவா்களுக்கு
      இரண்டு வடச்சொற்கள் சேருமிடம் வல்லினம் இயல்பாகும்

      எடுத்துக்காட்டு
      ஆதி பகவன், பாத கமலம், தேச பக்தி, சிவகுமார்.

      ஜெயகுமார் என்பதைச் செயகுமார் என்று எழுத
      மனம் சற்றே தயங்கும், யெரை மாற்றுவதா என்றே மயங்கும்!

      தமிழுள்ளம் உடையவா் வடமொழியில் அமைந்த தங்கள் யெரை
      முழுமையாகத் தமிழாக்கச் செய்து மொழிக்குச் சிறப்புச் செய்து விழியாகத் தமிழைக் காத்துள்ளனா்!

      சாமிகண்ணு என்பதை இறைவிழியன் என்றும்
      சுப்பிரமணியன் என்பதைத் திருமுருகன் என்றும் அமைத்துள்ளனா்

      இதற்கான இலக்கண விதிகள் நன்னுாலில் உள்ளன!

      என் தந்தையாரின் பெயா் கவிஞா் தே. ஜனார்த்தனன்
      60 ஆண்டுகளாக இருந்து வந்த இப்பெயரை நான் எடுத்துரைத்து
      கவிஞா் தே. சனார்த்தனன் என்று முறையாக அரசுஅணை பெற்று மாற்றி வைத்துக்கொண்டார்.

      விழிநலம் போன்றே மொழிநலம் நாடு!
      வழிநலம் தானே வரும்!

      Supprimer
  5. தங்கள் எதுகை சொல்லாடலை எப்படி வாழ்த்துவது என்று தெரியாமல் நான் தவிக்கிறேன் அய்யா. ழகரம்,தகரம், றகரம், றைகரம்,ளகரம், லகரம் என அனைத்திலும் மிக அருமையாக பயன்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துகள். தங்கள் கவி எனக்கு நல்ல விருந்தாகிறது அனைத்தும். தாங்கள் திருக்குறள் படிக்கும் நிழற்ப்படமும் அருமை. இதைவிட சிறப்பாக இருந்தது தாங்கள் எனக்கு எழுதிய கவிதை...

    அற்ப்புதம் அய்யா...

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய நண்பா வணக்கம்!

      இரவின் புன்னகை எனக்குப் பிடித்த பெயா்!

      ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமை
      பிரான்சு கம்பன் கழகம்
      கவியரங்கம் நடத்துகிறது!
      முன் மாதம் மீண்டுமோர் ஆசை என்ற தலைப்பில்
      கழகக் கவிஞா்கள் கவிபடைத்தனா்.

      இம்மாதம் [நான் முதலமைச்சா்] ஆனால்...
      என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறவுள்ளது.

      இவ்வாண்டு இறுதி மாதம் இரவின் புன்னகை என்ற தலைப்பை
      வழங்கலாம் என்று எண்ணியுள்ளேன்

      எங்கள் கவியரங்கக் கவிதைகளை
      இவ்வலையில் இணைக்கப்பட்டுள்ள குயில் இணைப்பில் காணலாம்.

      எதுகை மோனை எழிலாக
      இயங்கும் கவியைத் தினம்படித்தால்
      புதுவை ஆண்ட பாவேந்தன்
      போன்றே தமிழைப் படைத்திடலாம்!
      புதுக்..கை எனக்கு முளைத்ததுபோல்
      போந்த உன்றன் நட்பென்பேன்!
      மதுக்..கை வாணா் போல்நாளும்
      மணக்கும் தமிழை வழங்குகவே!

      Supprimer
    2. இரவின் புன்னகை என்ற பெயரில் கவி படைக்கப் போகிறீர்களா? மிக்க மகிழ்ச்சி. அய்யா எனக்கு ஓர் ஐயம்? தாங்கள் அடுத்தது அடுத்தாற்போல இரு மெய் வராது என்று கூறியுள்ளீர்கள் தங்கள் பதிவில். 'மகிழ்சி' என்பது சரியா? 'மகிழ்ச்சி' என்பது சரியா? விளக்குங்களேன்.

      நித்தமும் எனக்கும் தாங்கள் போல்
      முத்தான கவி படைக்கத்தான் ஆசை.
      ஏனோ தெரியவில்லை- கவி
      தானே வர மறுக்கிறது.
      கருத்து கிடைத்தால் சொல்
      வர மறுக்கிறது என்தன் நினைவில்.
      தங்கள் நட்பு வந்த பின்னாவது
      தானாக கவி வருமா பார்போம்?

      மேலே உள்ளதும் சிறு முயற்ச்சிதான் அய்யா!!!

      இரவின் புன்னகை கவி கேட்க இன்னும் சில மாதங்கள் பொருக்க வேண்டுமா?

      Supprimer
    3. வணக்கம்!

      நித்தமும் எனக்கும் தாங்கள் போல்
      முத்தான கவி படைக்கத்தான் ஆசை!

      அழகிய அடிகள்! அடியவனின் வாழ்த்துக்கள்

      கவிதையின் உயிர் - கருத்து!
      உடல் - சொல் தோ்வு!
      குருதி - பாடும் சந்தம்!
      உணா்ச்சி - பொங்கும் உணா்வு!

      கவிதை பாடுவது மிக மிக எளிது
      தொடந்து கவிதை இலக்கணத்தை எழுதவுள்ளேன்
      அதனைப் படித்து மகிழ்வோர் கவிஞா் ஆவார் என்பது உறுதி!

      மகிழ்ச்சி என்றே எழுத வேண்டும்!
      இதுபோன்ற ஐயம் எழும் இடங்களில் தமிழ் அகராதியைப் பார்க்கவும்

      க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு வல்லின மெய்யெழுத்துக்கள் ஒன்றாக இணைந்து வாரா,

      கற்ப்பனை
      கற்ச்சிலை

      என்பன பிழையாம். இரண்டு வல்லின எழுத்துக்கள் இணைந்து வருவதில்லை, (மேலுள்ள சொற்களில் ற்ப், ற்ச், போன்று)

      கற்பனை, கற்சிலை, அற்புதம், முயற்சி என்றே எழுத வேண்டும்

      நித்தமும் கவிதை பாட
      நினைத்திடும் நெஞ்சம் தன்னை
      முத்தமும் தந்தே பாப்பெண்
      முழுகிடச் செய்வாள் தேனில்!
      சத்தமும் இன்றி ஆன்மா
      சந்தமாம் இசையில் ஆடும்!
      பித்தமும் ஏற ஏறப்
      பிறந்திடும் கவிதைப் பிள்ளை!

      Supprimer
  6. Réponses

    1. வணக்கம்!

      நல்ல பதிவுகளை நாடியே வாக்கிடும்
      வல்ல மனத்திற்கென் வாழ்த்து!

      Supprimer

  7. முரண்பாடு என்னும் முதுமொழிப் பாடல்
    அருங்காடு மின்னும் அழகாம்! - அரணாகத்
    தந்த கவிதைகள் தங்கத் தமிழ்காக்கும்
    சொந்த உறவாய்ச் சுமா்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கள்ளுக் கடைக்குள்ளே காந்தியம் பேசியே
      கொள்ளை அடித்திடுவார்! கூத்திடுவார்! - தெள்ளுதமிழ்
      நாட்டில் நாிகள் அாியாய் நடிப்பதுடன்
      கூட்டிக் கொடுக்கும் குழைந்து!

      Supprimer