mercredi 3 octobre 2012

வடலூர்த் தேவே போற்றி



வடலுார்த் தேவே போற்றி


பிறந்துள்ள நூற்றாண்டில் தமிழர் வாழ்வு
     பீடுடனே திகழ்ந்திடவே வேண்டும்! மண்ணில்
சிறந்துள்ள நாட்டினரை மிஞ்சும் வண்ணம்
     செயல்களையே புரிந்திடவே வேண்டும்! வாழ்வை
மறந்துள்ள மாந்தர்தம் உறக்கம் நீக்கி
     மாண்புகளை உணர்த்திடவே வேண்டும்! என்னுள்
நிறைந்துள்ள மாமணியே! வடலூர்த் தேவே!
     நின்னருளால் இவையாவும் நடத்தல் வேண்டும்!

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர், தம்மின்
     உயிராக உயர்தமிழைக் காத்தல் வேண்டும்!
களமெங்கும் வெற்றிகளைச் சூடி, இன்பங்
     கமழ்கின்ற புகழ்வாழ்வில் களித்தல் வேண்டும்!
உளந்தங்கித் துயரூட்டும்  புன்மை போக்கி
     ஒளிர்கின்ற அருட்சுடரை ஏந்தல் வேண்டும்!
வளமிங்குப் பொழிகின்ற வடலூர்த் தேவே!
     மணக்கின்ற உன்னடியில் திளைத்தல் வேண்டும்!

அருட்பாவில் பொலிகின்ற கருத்தை நன்றாய்
     அகத்துள்ளே பதித்திடவே வேண்டும்! நன்கு
பொருள்பார்த்துத் தெளிந்துய்யும் அறிவைப் பெற்றுப்
     பொய்ம்மைகளை அடியோடு மாய்த்தல் வேண்டும்!
இருள்சேர்ந்து உழல்கின்ற இடரைப் ஓட்டி
     இருவினையும் சேராமல் அருளல் வேண்டும்!
தருமமிகு வடலூரில் ஒளிரும் தேவே!
     தண்டமிழின் தீஞ்சுவையே! போற்றி! போற்றி!

ஒருமையுடன் உன்னுருவை எண்ணி, உள்ளம்
     ஒளிர்கின்ற விளக்காக மிளிர்தல் வேண்டும்!
பெருமையுறும் பேறுகளை ஏற்க வைக்கும்
     பெருங்கருணை மழையினிலே குளித்தல் வேண்டும்!    
கருமைமிகும் இருட்டறையில் அமர்ந்த போதும்
     கண்முன்னே பேரோளியைக் காட்ட வேண்டும்!
அருமைமிகு தமிழ்வளர்த்த வடலூர்த் தேவே!
     அருட்சுடரே! ஆரமுதே போற்றி! போற்றி!!

மதமென்னும் மதம்பிடித்தே உலகைத் தாக்கும்
     மடமையெலாம் அடியோடு மடிதல் வேண்டும்!
பதமாகச் சோறுதனை வடித்தல் போலே
     பக்குவமாய் வாழ்க்கையினை நடத்தல் வேண்டும்!
இதமாக உரையாடும் திறனைப் பெற்றே
     என்னுரைகள் நன்மொழியாய் மணத்தல் வேண்டும்!
உதயமென ஒளிகொடுக்கும் வடலூா்த் தேவே!
     ஒண்டமிழின் தீஞ்சுவையே போற்றி! போற்றி!!

தன்னலத்தின் போக்கினிலே தலைவன் ஆகித்
     தமிழுலகைக் கெடுப்பவன்இங்(கு) அடங்க வேண்டும்!
இன்னழகுச் சொற்களினால் பேசி நாட்டை
     ஏமாற்றும் கொடியவர்கள் மாற வேண்டும்!
மண்ணலத்தை அழிக்கின்ற திட்டம் தீட்டி
     வாழ்கின்ற வஞ்சகர்கள் ஒழிய வேண்டும்!
பொன்னகத்துப் புண்ணியனே! வடலூர்த் தேவே!
     பொதுவுடைமைப் பூக்காடே போற்றி! போற்றி!!

தன்போக்கில் ஆட்சியினைச் செய்தே, இங்கே
     தந்திரமாய்ப் பொருள்சேர்க்கும் கொடியோன் நீங்க,
பொன்னாட்சி மேன்மைகளை மக்கள் காணப்
     புவியெங்கும் கருணைமிகு ஆட்சி வேண்டும்!
மண்ணுயிரை மகிழ்விக்கும் ஆன்ம நேய
     மரணமிலா வாழ்க்கையினை ஏற்க வேண்டும்!
என்னரசே! என்னுயிரே! வடலூர் தேவே!
     ஈடில்லாப் பேரொளியே போற்றி! போற்றி!!

சாதிக்கோர் சங்கத்தை வைத்து, நாளும்
     சண்டையிடும் சழக்கர்கள் சாய்தல் வேண்டும்!
நீதிக்கோர் இருப்பிடமாய்த் திகழச் செய்யும்
     நீடுடைய சிந்தனைகள் நிலைத்தல் வேண்டும்!
சோதிக்கோர் திரியிட்டே ஒளியைக் கூட்டிச்
     சுடர்நெஞ்சைப் பெறவேண்டும்! நற்சன்மார்க்க
வாதிக்கு வழிகாட்டும் வடலூர்த் தேவே!
     வண்டமிழின் பெருவளமே போற்றி! போற்றி!!

எல்லோரும் ஒற்றுமையாய் வாழ வேண்டும்!
     இன்பமருள் சன்மார்க்கம் சூழ  வேண்டும்!
இல்லாரே இத்தரையில் இல்லா தாக்கி
     எழில்பொங்கும் புத்துலகம் அமைக்க வேண்டும்!
கல்லாரைக் கற்றவராய் மாற்றும் தொண்டைக்
     கடமையெனக் கற்றவர்கள் ஆற்ற வேண்டும்!
வள்ளலென வாழ்வளிக்கு வடலூர்த் தேவே!
     மணக்கின்ற பைந்தமிழே போற்றி! போற்றி!!

சொல்லொன்று, செயல்லொன்று செய்யா வண்ணம்
     தொண்டாற்றும் தூயமனம் செழித்தல் வேண்டும்!
கல்லென்று நெஞ்சத்தைக் கூறா வண்ணம்
     காணுகின்ற உயிர்களிடம் அன்பு வேண்டும்!
இல்லென்று சொல்லாமல் கொடுக்கும் வண்ணம்
     எழில்மேவி அருளுள்ளம் வளர வேண்டும்!
நல்வாழ்வை அளிக்கின்ற வடலூர்த் தேவே!
     நறுந்தமிழே! நன்னெறியே! போற்றி! போற்றி!!

4 commentaires:

  1. மிகவும் பிடித்த வரிகள் :

    /// சொல்லொன்று, செயல்லொன்று செய்யா வண்ணம்
    தொண்டாற்றும் தூயமனம் செழித்தல் வேண்டும்!
    கல்லென்று நெஞ்சத்தைக் கூறா வண்ணம்
    காணுகின்ற உயிர்களிடம் அன்பு வேண்டும்! ///

    நல்ல எண்ணங்களை மனதில் தைக்கும் வரிகளுக்கு மிக்க மிக்க நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலைப்
      பாடும் மனமே! பணிந்து!

      Supprimer

  2. வடலுார்ப் பெருமான் வகுத்த வழிகள்
    உடலுார் உளத்தர் உயா்வார்! - கடல்மேல்
    மரமென வாழ்வு! வகையறிந்து தந்தாய்
    உரமெனப் பாக்கள் உயிா்த்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வடலுார்த் திருநகரை வந்து தொழுதால்
      உடலுார் வினைகள் ஒழியும்! - மடலுார்
      மணமாய் மனங்கமழும்! மாண்புகள் வாழ்வில்
      குணமாய்க் குவியும் குளிா்ந்து!

      Supprimer