mardi 23 octobre 2012

பாரதியார் திருத்தசாங்கம்





 

மகாகவி பாரதியார் திருத்தசாங்கம்

பெயர்

கொஞ்சும் இளங்கிளியே கூறிடுவாய் அன்னியனும்
அஞ்சி நடுங்கிட்ட அன்னோன்பேர் - கொஞ்சுதமிழ்
விஞ்சுபுகழ் வித்தகனாம்! வீரமிகு பாரதியாம்!
நெஞ்சில் எழுந்த நிலவு!

நாடு

சின்ன எழில்நாராய்! சிந்தனைச் சிற்பியின்
இன்பத் திருநாட்டை இங்கேசொல்? - மன்பதையில்;
தன்னிகரே இல்லாத் தமிழகமாம்! நீஅதனைப்
பொன்னெனவே போற்றிப் புகழ்!

நகர்

பச்சைப் பசுங்குருகே! பாட்டால் பகைவர்மேல்
எச்சில் உமிழ்ந்தவன் எவ்வூரோ? - மெச்சுபுகழ்
கட்டபொம்மன் ஆண்ட களமதுவே! கீர்த்திமிகும்
எட்டபுரம் என்றே இயம்பு!

ஆறு

வண்ண மலரின்மேல் வாழும் வரிவண்டே,
அண்ணல் குளித்தநல் ஆறெதுவாம்? - கண்ணனைய
முத்தமிழ் ஆறென முன்மொழிவார், பாரதியின்
புத்தமுதப் பாக்களைப் போற்று!

மலை

மன்னன்தான் கொண்ட மலையென்ன? தாமரையில்
துன்னும் அனமேநீ சொல்லுகவே - இன்சுவை
கண்டின் கவிநயமும் கம்பன்போல் ஓவியச்சொல்
கொண்டான் மலையெனவே கூறு!

ஊர்தி

கூடும் மடமையைக் கொன்றவன் ஊர்தியை
ஆடும் மயிலே அறைந்திடுவாய் - பீடுதனைச்
சாடும் தலைவனின் தூயதமிழ்த் தேராகம்
பாடும் குயிலதுவாம் பார்!

படை

நாவலம் மிக்கநல் நங்கையீர் நம்முயிர்ப்
பாவலன் போர்ப்படையைப் பாடுகவே - காவலனாய்ச்
செந்தமிழின் சீர்காத்த பாவேந்தன் தன்வழி
வந்த படைஎனவே வாழ்த்து!

முரசு

கண்ணான காதலனைக் கண்டாய் கருங்குயிலே
பொன்னான மாமுரசைப் போற்றுகவே! - மண்ணிலுள்ள
சாதி ஒழியத் தகுந்தபா சாற்றியவன்
நீதி முரசாம் நிலத்து!

தார்

சீர்பாடும் தேன்சிட்டே, செந்தமிழ் வேந்தனின்
தார்பாட மாட்டாயோ தண்டமிழில், - பார்போற்றப்
பாமாலை ஆம்அதுவே, பாரில் பகுத்தறிவுப்
பூமாலை கொண்டான் புகழ்!

கொடி

பாட்டுக் கொருபுலவன் பாரதி கண்டகொடி
நாட்டில் எதுமுகிலே நன்கோது - கூட்டும்மூ
வண்ணக் கொடியதன் மத்தியில் சக்கரம்
நண்ணப் பொருத்தியது நாடு!

6 commentaires:

  1. மிகவும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    நன்றி...

    RépondreSupprimer
  2. கவியரசர் பாரதி பற்றி அழகாக எழுதியுள்ளீர்கள்...

    நன்றி, வணக்கம்...

    RépondreSupprimer
  3. பாட்டுக்கொரு புலவன் பாரதியடா என்பது எவ்வளவு உண்மை.

    RépondreSupprimer
  4. அழகு அழகு மிக மிக அழகு
    வித்தியாசமானதுமாகவும் இருக்கிறது ஐயா

    RépondreSupprimer

  5. ஐயா வணக்கம்!

    மகாகவியின் திருத்தசாங்கம் மனத்தைக் கவா்ந்தது

    திருத்தசாங்கம் என்றால் என்ன விளக்கம் தரவும்

    RépondreSupprimer
  6. பறை
    சின்னஞ் சிறுகுயிலே சின்னப்ப பாரதியின்
    கன்னல் பறையெனக்குக் காட்டாயோ? - இன்னல்
    இனங்கொண்ட தென்றால் இடிமுழங்கு கின்ற
    மனம்வெல் கவிதைப் பறை!


    RépondreSupprimer