dimanche 14 octobre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 14 ]




ஏக்கம் நுாறு [பகுதி - 14]

குதிரைவால் குழலழகு! கவிஞன் என்னைக்
     குதித்தாட வைக்குதடி! வீரம் பொங்கும்
மதுரையாள் எனும்சொல்லை முற்றும் போக்கி
     மதுப்போதை மங்கையுனைச் சுற்றும் மூச்சே!
பதுமைபோல் ஒளிர்கின்றாய்! பார்த்துப் பார்த்துப்
     பைத்தியமாய் அலைகின்றேன்! அன்பே உன்னால்
புதுமைவான் பொலிந்தாடும்! பாடும் எண்ணம்
     புலமை..வான் பறந்தாடும்! பூந்தேன் பெண்ணே! 66

மூக்குக்கு நல்லுவமை எடுத்துக் கூற
     முன்னுாறு கற்பனைகள் முன்னே ஆடும்!
நாக்குக்கு அவள்பெயரைச் சொல்லிச் சொல்லி
     நற்றேனைச் சுரக்கின்ற தன்மை வாய்க்கும்!
வாக்குக்குக் கவிபாடப் பாரீச் சாலை
     வடிவழகை உரைத்திடுவேன்! காந்தம் ஈா்க்கும்
போக்குக்குப் போகின்ற துகளைப் போன்று
     போகின்றேன் போதையிலே அவளின் பின்னே! 67
                                               தொடரும் 

5 commentaires:

  1. அங்கங்கள் அனைத்தையுமே அழகாய்க் கூறி-நல்
    ஆற்றலெனும் முரசுகொட்டி விரைந்தே ஏறி
    தங்கமெனும் தமிழ்த்தேரில் வலமே வந்தீர்-நம்
    தன்னிகரில் தமிழ்வளர நாளும் தந்தீர்
    சிங்கமென அயல்நாட்டில் வாழ்ந்த போதும்-உம்
    சிந்தையிலே செந்தமிழே அலைபோல் மோதும்
    எங்களுளம் மகிழ்ந்திடுதே! மிகையா!? அல்ல-எம்
    இதயத்தில் இடங்கொண்டீர்!மேலும் சொல்ல

    RépondreSupprimer
  2. என்னே ஒரு-
    காதல்!

    என்னே-
    பல வரிகள்!

    அருமைங்கய்யா!

    RépondreSupprimer
  3. அய்யா! வணக்கம்... அழகான வரிகள்... அருமையான தமிழ்சுவை...

    RépondreSupprimer
  4. வரிகளில் சொக்கிப் போனேன்...

    அருமை ஐயா...

    RépondreSupprimer

  5. ஏக்கக் கவிநுாறை எண்ணிப் படித்திட்டால்
    ஊக்கம் பிறந்தே உயிர்மகிழும்! - துாக்கத்தில்
    ஆக்கும் கனவுகள் ஆரமுதைத் தான்பொழியும்
    பூக்கும் இனிமைப் பொழில்!

    RépondreSupprimer