mardi 9 octobre 2012

ஆட்டம்



உள்ளம் போடும் குரங்காட்டம்!
       உணர்ச்சி போடும் பேயாட்டம்!
வெள்ளம் போன்று பேராசை
       விரைந்து போடும் வெறியாட்டம்!
கள்ளம் நிறைந்த உள்ளம்தான்
       கணக்காய்ப் போடும் நரியாட்டம்! 
கொல்லும்  இவைதாம் சேராமல்
       கொள்கை காண்க நன்னெஞ்சே!

பெண்ணின் விழிகள் அழகோடு
       பிணைந்தே ஆடும் மீனாட்டம்!
கண்ணின் மணிகள் சொக்கிடவே
       காதல் ஆடும் கணையாட்டம்!
மண்ணில் வறுமை நிலைகொண்டால்
       வாழ்வே துன்பப் போராட்டம்!
எண்ணி இவைதாம் சேராமல்
       ஏற்றம் காண்க நன்னெஞ்சே!

ஆட்டம் காட்டி ஏமாற்றி
       அஞ்சி வாழ்தல் வாழ்வாமோ?
வாட்டும் கொடிய சட்டத்தை
       வடிக்கும் ஆட்சி நிலைபெறுமோ?
ஏட்டில் மிளிரும் பொன்னெறியை
       ஏய்க்கும் மாந்தர் உயர்வாரோ?
கூட்டும் இன்பம் எவையென்று
       கூர்ந்து தெளிக நன்னெஞ்சே!

அணியாய்ச் சொற்கள் தாம்சேர்த்து
       ஆடும் ஆட்டம் கவியாட்டம்!
கனியாய் இனிக்கும் மங்கையவள்
       கால்கள் காட்டும் ஒயிலாட்டம்!
இனிதாய் உயிரைக் கவர்ந்திடுமே
       எழிலாய் ஆடும் மயிலாட்டம்!
பணியாய் நல்ல கலைகாத்துப்
       பாரில் உயர்க நன்னெஞ்சே!

ஆடும் ஆட்டம் இங்கொருநாள்
       அடங்கிப் போகும் உணர்வாயே!
கூடும் கூட்டம் பின்னொருநாள்
       குலைந்து போகும் அறிவாயே!
தேடும் செல்வம் நில்லாமல்
       திரும்பி உருளும் தெளிவாயே!
ஓடும் வாழ்வை நன்காய்ந்தே
       உண்மை காண்க நன்னெஞ்சே!

ஆட்சி வெற்றி பெற்றிடவே
       ஆடும் சூழ்ச்சிக்(கு) அளவேது?
மீட்சி இன்றித் துயர்கவ்வி
       மிரளும் வாழ்வில் நலமேது?
நீட்சி யில்லாச் சின்னெஞ்சுள்
       நிலைத்த புகழுக்(கு) இடமேது?
மாட்சி நல்கும் வாய்மறையின்
       வழியில் வாழ்க நன்னெஞ்சே!

எல்லாம் எனக்குத் தெரியுமென
       இறுமாந்(து) ஆடும் மனிதா!கேள்
வல்ல வாழ்வு வாய்த்ததென
       மதியாத் துள்ளிக் குதிக்காதே!
பொல்லா விதியின் ஆட்டத்தை
       புவியில் வெல்லல் மிகஅறிதே!
அல்லல் இல்லா நல்வாழ்வும்
       அன்பால் மலரும் நன்னெஞ்சே!

இடியாய் மழையாய் நிலஅதிர்வாய்
       இயற்கை ஆடும் ஆட்டமேன்?
கொடிய மாந்தர் நிறைந்ததனால்
       கோபம் பொங்கி எழுந்ததுவோ!
அடியார் மனத்துள் ஒளிர்கின்ற
       அருளால் உலகம் தழைத்திடுமே!
குடியைக் காக்கும் அறநெறியைக்
       குடித்து மகிழ்க நன்னெஞ்சே!

பிறப்பும் இறப்பும் இறைவன்தன்
       பிடிக்குள் அடங்கும் ஆட்டமடா!
சிறப்பை எய்த அவன்தாளாம்
       சீரைப் போற்றல் நன்மையடா!
வெறுப்பால் விருப்பால் அலையாமல்
       விளைத்த வாழ்வில் செயற்படடா!
உறவாய்த் தேவன் புகழ்பாடி
       உயர்வைக் காண்க நன்னெஞ்சே!

வறுமை ஆடும் ஆட்டத்தால்
       வாழ்வை இழந்தோர் எத்தனைப்பேர்?
பொறுமை இழந்து கொதித்ததனால்
       புகழை இழந்தோர் எத்தனைப்பேர்?
சிறுமை தேடி நற்பண்பைச்
       சிதறச் செய்தோர் எத்தனைப்பேர்?
நறுமை நல்கும் நல்லோரை
       நாடி உயர்க நன்னெஞ்சே!

ஞானசுடர், 04-04-2003

6 commentaires:

  1. எத்தனை எத்தனை ஆட்டங்கள்... முடிவில் சிறப்பான கேள்விகள்...

    வாழ்த்துக்கள்... நன்றி... ஐயா...

    RépondreSupprimer
  2. பல்வேறு ஆட்டங்கள் பற்றி நெஞ்சுக்கு எடுத்துரைத்த கவிதை மிக மிக அருமை.சந்தமும் வரிகளும் மனத்தைக் கவர்கின்றன.

    RépondreSupprimer
  3. இடியாய் மழையாய் நிலஅதிர்வாய்
    இயற்கை ஆடும் ஆட்டமேன்?
    கொடிய மாந்தர் நிறைந்ததனால்
    கோபம் பொங்கி எழுந்ததுவோ!

    கேள்வியும் பதிலும் ஒருங்கே அமைந்த அற்புத வரிகள் நன்றி ஐயா.

    RépondreSupprimer
  4. ஆட்டங்களைப் பற்றியும் முடிவில் உரக்கக் கேள்வியையும் அழகாக சொல்லியுள்ளீர்கள்...

    RépondreSupprimer


  5. வணக்கம்!

    கருத்துரை நண்பா்காள்! நற்கவியில் வைத்தேன்
    விருப்புடன் நன்றி விருந்து!

    RépondreSupprimer

  6. ஆட்டம் ஒருநாள் அடங்கிவிடும்! முன்னிற்கும்
    கூட்டம் ஒருநாள. குறைகூறும்! - நாட்டுகின்ற
    கோட்டை ஒருநாள் குலைந்தழியும்! பேராசை
    வேட்டை முழுதும் விரட்டு!

    ஆடுகின்ற ஆட்டங்கள் அத்தனையும் தாமடங்கி
    ஓடுகின்ற காலம் உணா்வாயே! - தேடுகின்ற
    செல்வத்தைத் தேவன் எனவெண்ணிக் காப்பதுவோ?
    பல்வினைகள் பாயும் படர்ந்து!

    RépondreSupprimer