jeudi 25 octobre 2012

கடல் கடந்த கம்பன்



கடல் கடந்த கம்பன்

முன்னைத் தமிழின் புகழ்கூறி
            முப்ப(து) ஆண்டாய்த் தொண்டாற்றும்
சென்னைக் கம்பன் கழகத்தார்
            சீரார் செயலைப் போற்றுகின்றேன்!
என்னை மறந்தே வியக்கின்றேன்
            எல்லாம் கம்பன் திருவருளே!
மன்னும் உலகில் கம்பன்சீர்
            வளர்ந்து செழிக்க வேண்டுகின்றேன்!

புதுவைப் புலவோர் புலமைக்குப்
            புவியில் இணையாய் ஒன்றுண்டோ?
மதுவைப் போன்று மயக்கும்அவர்
            வடிக்கும் தமிழோ கற்கண்டாம்!
எதுகை, மோனை, இயைபுகளும்
            இருக்கும் பாட்டைச் சுவைத்திங்கே
இதமாய்க் கம்பன் விழாவெடுத்த
            இனியோர் தமக்கே என்வணக்கம்!

அம்மா அப்பா அருமைகளை
            அண்ணன் தம்பி பெருமைகளை
இம்மா நிலத்தின் மாந்தரெலாம்
            இனிதே அறியச் செய்திட்ட
பெம்மா னாகி, ஈடில்லாப்
            பிறவிக் கவிஞன் எனத்திகழும்
கம்பன் அடியைத் தலைமேலே
            காத லாலே சுமக்கின்றேன்!

இடரைப் போக்கும் வழிகளையும்
            இனிதாம் வாழ்வின் நெறிகளையும்
தொடரும் வண்ணம் கம்பனவன்
            துணையாய் நின்றே அளிக்கின்றான்!
கடலைக் கடந்து நம்கம்பன்
            காலம் அறிந்தே வந்ததனால்
உடலும் உயிரும் கம்பனென்றே
            உவந்து நின்றார் உயர்ந்தாரே!

நஞ்சாம் போதைப் பொருட்களையே
            நாளும் கடத்தி வாழ்பவரும்
நெஞ்சைக் கவரும் மணிவகையை
            நிறைய கடத்தி உயர்பவரும்
பஞ்சாயப் பறந்து பலப்பலவும்
            பாரில் கடத்தி மகிழ்பவரும்
கொஞ்சு தமிழைக் கடல்கடந்து
            கொண்டு செல்ல வருவாரோ?
 
கதையும் நல்ல கற்பனையும்
            காதல் சிறப்பும் கவிநயமும்
நதியாய் ஓடும் சொல்லழகும்
            நலஞ்சேர் தமிழின் அணியென்றே
மதியை வளர்த்து மானுடரின்
            மாண்பை விளக்கிக் காட்டுகின்ற
புதுமை நிறைந்த காவியத்தைப்
            புகன்றே கம்பன் பொலிகின்றான்!

கவிதை யாவும் தித்திக்கக்
            கம்பன் படைத்தான் காவியமே!
புவியோ ரெல்லாம் விருப்பமுடன்
            போற்றிப் போற்றிப் படித்திடுவார்!
சுவைஞர் தம்மை ஆட்கொண்ட
            தூய நூல் ராமாயணமே!
அவையில் உண்மை உரைக்கின்றேன்
            அடியேன் தொழுதல் கம்பனையே!

அயலார் நாட்டில் வாழ்தமிழர்
            அரிதாம் அமிழ்தை அருந்திடவும்
புயலாய்க் கிளம்பித் தாக்குகின்ற
            புல்லர் நெஞ்சம் திருந்திடவும்
இயலாய் இசையாய் எழிற்கூத்தாய்
            இனிக்கும் தமிழைப் பரப்பிடவும்
உயர்வாய்க் கம்பன் காவியமே
            ஒளிரும் அய்யா கடல்கடந்தே!

எங்கும் போரின் முழக்கங்கள்
            எல்லாத் திசையும் வன்முறைகள்
தங்கும் பொல்லா மதவெறியால்
            தவிக்கும் உலகைக் காண்கின்றோம்!
பொங்குந் தமிழில் கம்பனவன்
            புனைந்த கவிகள் யாவிலுமே
மங்கா மனித நேயந்தான்
            மாண்பார் தமிழர் மூச்சாகும்!

அன்பின் ஆழம், அரும்நட்பின்
            ஆற்றல், சூழும் உயர்மாண்பு,
பண்பின் மேன்மை, நற்பணிவால்
            படரும் இனிமை இவையாவும்
இன்பம் கொடுக்கும்! தூயவுளம்
            இடரைத் துடைக்கும்! எனஓதிப்
பொன்னார் கம்ப நாடனவன்
            புகழைச் சேர்த்தான் கடல்கடந்தே!

சென்னைக் கம்பன் விழா - 2004

2 commentaires:

  1. கம்பன் காவியம் சுவாரசியம் ரசித்த வரிகள் கீழே.

    அன்பின் ஆழம், அரும்நட்பின்
    ஆற்றல், சூழும் உயர்மாண்பு,
    பண்பின் மேன்மை, நற்பணிவால்
    படரும் இனிமை இவையாவும்
    இன்பம் கொடுக்கும்! தூயவுளம்
    இடரைத் துடைக்கும்! எனஓதிப்
    பொன்னார் கம்ப நாடனவன்
    புகழைச் சேர்த்தான் கடல்கடந்தே!

    RépondreSupprimer
  2. ஆகா... மிகவும் அருமை ஐயா... மிகவும் சிறப்பு வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    நன்றி...

    RépondreSupprimer