vendredi 19 octobre 2012

பிறமொழி திணித்தல் நன்றோ?




விழியும் மொழியும் ஒன்றெனவே
            விளங்கும் இனிய செந்தமிழே!
அழியும் உலகில் என்றென்றும்
            அழியா திருக்கும் அந்தமிழே!
பொழியும் இன்ப வாழ்வினிலே
            புகழை அருளும் பூந்தமிழே!
பழியும் பகையும் வந்திடினும்
            பகையை எதிர்க்க அஞ்சோமே!

தாயின் பாலை மறுப்போமா?
            தண்ணீர் இன்றி வாழ்வோமா?
காயும் கசந்தால் சுவைப்போமா?
            கன்னல் அமிழ்தை வெறுப்போமா?
வேயின் அமைந்த மென்றோளி
            வெறிப்பூங் குழலி நீபெற்ற
சேயின் மனத்துள் பிறமொழியைத்
            திணித்தல் நன்றோ செப்புகவே!

நிழலைத் தந்து வாழ்வருளும்
            நின்தாய் மொழியைக் காத்திடுவாய்!
குழலை ஒத்த தமிழ்நூலைக்
            குழந்தை கையில் கொடுத்திடுவாய்!
விழலை ஒத்த பிறமொழியை
            விலக்கித் தமிழில் பேசிடுவாய்!
மழலைச் செல்வப் பெயர்களையே
            மணக்கும் தமிழில் வைத்திடுவாய்!

5 commentaires:

  1. ''..விழலை ஒத்த பிறமொழியை
    விலக்கித் தமிழில் பேசிடுவாய்!...''

    ஆம் சிறப்பு.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
  2. தமிழுக்கு பெருமை சேர்க்கும் வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    த.ம.1

    RépondreSupprimer
  3. மழலைச் செல்வப் பெயர்களையே மணக்கும் தமிழில் வைத்திடல் வேண்டும். நன்று கவிஞரே.. நாமனைவரும் முதலில் செய்ய வேண்டியது இதைத்தான். தமிழின் பெருமை பேசி தலைநிமிரச் செய்கிறது கவிதை.

    RépondreSupprimer
  4. நல்ல அறிவுரை நம்தமிழை வளர்ப்பதற்கு நன்றி ஐயா

    RépondreSupprimer

  5. தன்மொழியை காக்காமல் தாழ்வுறும் மக்களிலே
    என்னினமே இங்கு முதல்என்பேன்! - தன்னலத்தில்
    சிக்கிக் கிடப்பார்! பகைவர்தம் கால்இரண்டை
    நக்கிக் கிடப்பார் நலிந்து!

    RépondreSupprimer