samedi 18 mars 2023

சந்தக் கலிவிருத்தம் - 9

 


விருத்த மேடை - 92

 

சந்தக் கலிவிருத்தம் - 9

 

தனதன+தனதனனா+தனதன+தனதனனா

[4+6+4+6 சந்த மாத்திரை]

 

திரைவிரி தருதுறையே, திருமணல் விரியிடமே,

விரைவிரி நறுமலரே, மிடைதரு பொழிலிடமே,

மருவிரி புரிகுழலே, மதிபுரை திருமுகமே,

இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே!

 

[சிலம்பு. கானல்வரி - 15]

 

தனதன+தனதனனா+தனதன+தனதனனா என்ற அமைப்புடைய பாடல் இது. முதற்சீரும் மூன்றாம் சீரும் 4 சந்த மாத்திரை பெறும். இவ்விடங்களில் தனதன, தந்தன, தானன  என்ற சந்தங்களைப் பெறும்.

 

இரண்டாம் சீரும் நான்காம் சீரும் 6 சந்த மாத்திரை பெறும். இவ்விடங்களில் தனதனனா, தந்தனனா, தாதனனா, தனதனன, தந்தனன, தாதனன, முதலிய சீர்கள் வரும். இவை இறுதியில் ஒற்றுப் பெற்றும் வரும். தனதனன, தந்தான என்பவை 5 மாத்திரைச் சீர்கள் என்றாலும் அடியிறுதியிலும், அரையடி இறுதியிலும்  வருவதால் சந்த இலக்கணப்படி 6 மாத்திரை பெறும். மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும்.

 

புகழுறு திருமகளே! பொழிலுறு கவிமகளே!

அகமுறு தனியெழிலே! அமுதுறு தமிழிசையே!

முகமுறு மதியொளியே! முளையுறு தளிரழகே!

மிகவுறு கனவலையே! விரிவுறு சுகவுரையே!

 

[பாட்டரசர்]

 

மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

12.03.2023

 

Aucun commentaire:

Enregistrer un commentaire