விருத்த மேடை - 84
சந்தக் கலிவிருத்தம் - 1
சந்த இலக்கணம்
ஒரு பாடலின் எல்லா அடிகளிலும் ஒரே வகையான சந்தம் தாளத்துடன் கூடிய ஓசையமைப்பு அமைந்திருந்தால் அதனைச் சந்தப்பாடல் என்பர். சந்தப் பாடல்கள் இசைத்தமிழ்ப் பாடல்களாகும்.
இதுவரை நாம் எழுதிய விருத்தங்கள் மா,
விளம், காய், கனி எனும் சீர்களைக் கொண்ட வாய்பாடுகளில் அமைந்தவை. சந்த விருத்தங்கள் மாத்திரைக் கணக்கில் எழுதப்படுவன.
சந்த மாத்திரை
குறில் ஒரு மாத்திரை [க-1]
நெடில் இரண்டு மாத்திரை [கா-2]
குறில் ஒற்று இரண்டு மாத்திரை [கண் - 2]
நெடில் ஒற்று இரண்டு மாத்திரை [காண் - 2]
அடி இறுதியில் தனிக்குறில் இரண்டு மாத்திரையாகவும் கொள்ளப்படும்.
வாழ்க என்பது மூன்று மாத்திரையை உடைய சீராகும். வாழ்க என்ற சொல் அடியிறுதியில் வந்தால் நான்கு மாத்திரையாக நீண்டு ஒலிக்க இடம் தரும்.
சில இடங்களில் சீரின் இடையிலும் ஈற்றிலும் வரும் இடையின மெல்லின மெய்கள் கணக்கிடப்படுவதில்லை.
மலையே மரனே மயிலே குயிலே
கலையே பிணையேகளிறே பிடியே
நிலையா உயிரே நிலைநே டினிர்போய்
உலையா வலியா ருழைநீ ருரையீர்
[கம்பன். ஆரணிய. இராவணன் சூழ்ச்சி - 75]
தனனா தனனா தனனா தனனா
என்ற அமைப்புடைய சந்த விருத்தம் இது. நான்கு சீர்களும் 4 சந்த மாத்திரையுடைன. 1ஆம் சீரிலும் 3 ஆம் சீரிலும் மோனை வரும். நான்கடி ஓரெதுகையில் அமையும்.
இவ்விருத்தத்தில் முதற்சீராக தானா [தேனே] தன்னா [கண்ணா] தனதம் [மலரும்] தந்தம் [முந்தும்] ஆகியனவும் வரும்.
எ.கா
கோதா வரியே! குளிர்வாய் குழைவாய்
மாதா அனையாய்! மனனே தெளிவாய்!
ஓதா துணர்வார் உழையோ டினைபோய்
நீதான் வினையேன் நிலைசொல் லலையோ?
[கம்பன். ஆரணிய. இராவணன் சூழ்ச்சி - 78]
அறமே! அகமே! அழகே! அமுதே!
மறமே! வளமே! மணமே! மதுவே!
திறமே! சிவமே! செகமே தொழுமே!
புறமே! நிறமே! புகழே! தமிழே!
[பாட்டரசர்]
மேலுள்ள அனைத்துச்சீர்களும் தனனா என்ற 4 சந்த மாத்திரையைப் பெற்று வந்தன.
தேனே பொழிவாய்! திணைமா தருவாய்!
மானே வருவாய்! மகிழ்வே இடுவாய்!
மீனே விழியாய் விடிவே வரைவாய்!
நானே கவியாய் நலமே அடைவேன்!
[பாட்டரசர்]
இந்த விருத்தத்தில் முதல் சீர் தானே என்ற 4 சந்த மாத்திரையைப் பெற்றது. இடையில் ஈற்றில் வந்த இடையின மெல்லின மெய்கள் கணக்கில் வாரா.
மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
05.12.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire