விருத்த மேடை - 93
சந்தக் கலிவிருத்தம் -10
தனதனம்+தனதனாம்+தனதனம்+தனதனாம்
[எல்லாச் சீர்களும் 5 சந்த மாத்திரை]
முனைவரும் பிறருமேல் முடிவரும் பகலெலாம்
இனைய[ர்]வந் துறுவரென் றியறவம் புரிகுவார்
வினையெனுஞ் சிறைதுறந் துயர்பதம் விரவினார்
எனையரென் றுரையெ[ய்]கே னிரவிதன் சிறுவனே
[கம்பன். கிட்கிந்தா. நட்புக்கோள் - 13]
மண்ணுளார், விண்ணுளார், மாறுளார், வேறுளார்,
எண்ணுளார், இயலுளார், இசையுளார், திசையுளார்,
கண்ணுளார் ஆயினார், பகையுளார், கழிநெடும்
புண்ணுளார், ஆருயிர்க்[கு] அமுதமே போலுளார்.
[கம்பன். கிட்கிந்தா. நட்புக்கோள் - 3]
தனதனம்+தனதனாம்+தனதனம்+தனதனாம் என்ற அமைப்புடைய பாடல் இது. அனைத்துச் சீர்களும் 5 சந்த மாத்திரை பெறும். இதில் ஓரடியில் உள்ள நான்கு இடங்களிலும் தனதனம், தனதனாம், தனதனா, தந்தனம், தந்தனா, தானனா, தானனம் ஆகிய எந்தச் சீரும் வரலாம். ஒவ்வொரு சீரும் இறுதியில் இரண்டு மாத்திரையைப் பெற்றிருக்கும். மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும்.
திருவருள் முருகனே! செழுமலைக் குமரனே!
தருவருள் கனியனே! தமிழ்மொழித் தலைவனே!
தெருளருள் வடிவனே! செயமருள் விழியனே!
பொருளருள் கவியெனைப் புகழுறப் புனைகவே!
[பாட்டரசர்]
மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
18.03.2023
Aucun commentaire:
Enregistrer un commentaire