விருத்த மேடை - 91
சந்தக் கலிவிருத்தம் - 8
தனதன+தனதன்னா+தனதன+தனதன்னா
[4+6+4+6 சந்த மாத்திரை]
பணிமொழி கடவாதான் பருவரல் இகவாதான்
பிணியுடை யவனென்னும் பிரிவினன் விடைகொண்டான்
அணியிழை மயிலோடும் ஐயனும் இளையோனும்
திணிமர நிறைகானில் சேணுறு நெறிசென்றார்.
[கம்பன், அயோத்தி. குகப் படலம் - 28]
தனதன+தனதன்னா+தனதன+தனதன்னா என்ற அமைப்புடைய பாடல் இது. முதற்சீரும் மூன்றாம் சீரும் 4 சந்த மாத்திரை பெறும். இவ்விடங்களில் தனதன, தந்தன, தானன என்ற சந்தங்களைப் பெறும்.
இரண்டாம் சீரும் நான்காம் சீரும் 6 சந்த மாத்திரை பெறும். இவ்விடங்களில் தனதன்னா, தனதானா, தனதான, தனதன்ன, தந்தான, தந்தான, தந்தானா முதலிய சீர்கள் வரும். இவை இறுதியில் ஒற்றுப் பெற்றும் வரும். தனதன்ன, தந்தான என்பவை 5 மாத்திரைச் சீர்கள் என்றாலும் அடியிறுதியிலும், அரையடி இறுதியிலும் வருவதால் சந்த இலக்கணப்படி 6 மாத்திரை பெறும். மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும்.
கனிமொழி வருகின்றாள்! கணைகளை விடுகின்றாள்!
பனிமொழி பொழிகின்றாள்! பசுமையை யிடுகின்றாள்!
தனிமொழி தருகின்றாள்! தமிழிசை புனைகின்றாள்!
நுனிமொழி மதுவென்பேன்! நனிமிகு சுவையென்பேன்!
[பட்டரசர்]
இன்மொழி தருவாயே! இசையென வருவாயே!
நன்மொழி அணிவாயே! நலமென இணைவாயே!
பொன்மொழி புனைவாயே! புவிமகள் இணைநீயே!
என்மொழி அறிவாயே! இறையென அருள்வாயே!
[பட்டரசர்]
மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
05.03.2023
Aucun commentaire:
Enregistrer un commentaire