விருத்த மேடை - 94
சந்தக் கலிவிருத்தம் - 11
தந்த+தந்ததன+தந்ததன+தந்ததனதாம்
[3+5+5+7 சந்த மாத்திரை]
பம்பு செக்கரெரி யொக்குமயிர் பக்கமெரியக்
கும்ப முற்றவுய[ர்] நெற்றியி[ன்]வி சித்தொளிகுலாம்
உம்ப ருக்கரச[ன்] மால்கரியி னோடையெயிறொண்
கிம்பு ரிப்பெரிய தோள்வளையொ டும்கிளரவே
[கம்பன், ஆரணிய. விராதன் வதைப் படலம் - 12]
தந்த+தந்ததன+தந்ததன+தந்ததனதாம் என்ற அமைப்புடைய பாடல் இது. முதற்சீர் மூன்று மாத்திரை, இரண்டாம் மூன்றாம் சீர்கள் 5 மாத்திரை, நான்காம் சீர் 7 மாத்திரை பெறும்.
தந்த என்பதற்குப் பதில் தான, தனன என்பனவும் வரும். தந்ததன என்பதற்குப் பதில் தானதன வரும். தந்ததனதாம் என்னுமிடத்தில் தானதனதாம் வரும். மோனை 1, 4 ஆம் சீர்களில் அமையும்.
உண்மை காத்தொளிர உற்றபுக[ழ்] ஓங்கியெழுமே!
தண்மை பூத்தொளிர வண்ணநிறை சாந்தமிடுமே!
வண்மை சேர்த்தொளிர வாய்த்தபுவி வந்துதொழுமே!
வெண்மை மூத்தொளிர விண்ணினிறை வெற்றிதருமே!
[பட்டரசர்]
மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
25.03.2023
Aucun commentaire:
Enregistrer un commentaire