mardi 12 juillet 2016

முதன்மொழியே!




முதன்மொழியே!

நலமே புரிவாய்! நறும்பேர் தமிழே!
நிலமே அருள்வாய்! நிறைசீர் தமிழே!
பலமே தருவாய்! பயன்சேர் தமிழே!
இலையே இணையே! எனைக்..கா தமிழே!

கலைமா மகளே! கவிவான் ஒளியே!
மலைமா மகளே! மலர்த்தேன் சுவையே!
அலைமா மகளே! அருங்கான் அழகே!
தலைமா மொழியே! தமிழே! அருள்வாய்!

உனைநான் தொழுதேன்! உயர்வே கொடுப்பாய்!
மனைநான் உழுதால் வளமே விளைப்பாய்!
முனைநாள் சிறப்பாய் எனை..நீ வளர்ப்பாய்!
சுனைபோல் குளிர்சூழ் சுடரே! தமிழே!

அணியே! அமுதே! அறமே! அரணே!
மணியே! மணமே! மறமே! வரமே!
துணிவே! துணையே! தொகையே! துறையே!
பணியே புரிவேன்! படர்நாள் வரையே!

பொழியே! புகழே! புவிமா மொழியே!
எழிலே! இசையே! இறைமா வடிவே!
விழியே! விருந்தே! விரைந்தே தினம்..பாத்
தொழிலே தொடர்வேன் வழியே புனைவாய்!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
12.07.2016

2 commentaires:

  1. முதன்மொழியேதான் ஐயா. உங்களோடு சேர்ந்து நாங்களும் மனம் குளிர பாராட்டுகிறோம்.

    RépondreSupprimer