கட்டளை வெண்பா
[அடிதோறும் எழுத்தெண்ணிக்கை ஒன்றிவருவது கட்டளை வெண்பா. வெண்பாவின் முதல் முன்று அடிகளில் 12 அல்லது 13
அல்லது 14 எழுத்து வரும்படி பாடலாம். ஈற்றடியில் 8 அல்லது 9 அல்லது 10 எழுத்துகள் வரும்படி
பாடலாம்]
[கீழுள்ள மூன்று வெண்பாக்கள் முதல் மூன்று அடிகள்
12 எழுத்துகளையும் ஈற்றடி 8 எழுத்துகளும் பெற்றுள்ளன. இறுதி வெண்பா முதல் மூன்று அடிகள்
13 எழுத்துகளையும் ஈற்றடி 9 எழுத்துகளும் பெற்றுள்ளது]
வண்ண மயிலாக வஞ்சிக் கொடியாக
எண்ணம் பறித்திட்ட ஏந்திழை - பண்ணிசை
பாடும் குரல்கேட்டுப் பாவலன் உள்ளத்துள்
கூடும் இனிமையின் கூத்து!
கண்ணே! கனிச்சாறே! காதல் மழைதரும்
விண்ணே! வியன்மலரே! வேல்விழி - கொண்ட
படைக்கல மே!பாப் படைக்கின்ற உன்னுள்
அடைக்கல மே!என் அகம்!
திருமகள்! செல்வத்தின் சீர்மகள்! அன்பின்
பெருமகள்! தேன்கவி பேசித் - தருவாள்
நிறைந்தோங்கும் இன்பத்தை! நெஞ்சத்துள் நாளும்
அறைந்தோங்கும் காதல் அலை!
குயிலே! மயிலே!சீர் கூட்டுகின்ற காதல்
பயிரே! படைக்கின்ற பார்வை! - உயிரே!பே
ரின்பத்தை ஈந்துவக்கும்! ஈடில் தமிழாகத்
துன்பத்தைத் போக்கும் தொடர்ந்து!
விருந்தளிக்கும் வேல்விழி! மேவுமென் நோய்க்கு
மருந்தளிக்கும் செவ்வாய்! மனத்துள் - இருந்து
விளையாடும் பெண்ணே! வியப்பளிக்கும் பாட்டாய்ச்
சுளைசூடும் உன்றன் தொடர்பு!
19.07.2016
Aucun commentaire:
Enregistrer un commentaire