lundi 4 juillet 2016

குகன் படகு பேசுகிறது - பகுதி 2



புதுவைக் கம்பன் விழாக் கவியரங்கம்

குகன் படகு பேசுகிறது!

கம்பன் காவடிச் சிந்து!

1.
காவிய கம்பனைப் பாடு! - மகிழ்
         வோடு - புகழ்
         சூடு - அவன்
கட்டிய நூல்இறை வீடு - அதைக்
கற்றேதினம் முத்தேதமிழ் பெற்றேமனம் கொத்தேமலர்
கண்டுளம் சொக்கியே ஆடும் - தூய
தொண்டுளம் நம்மிடம் கூடும்!

ஓவியம் போலொளிர் பாட்டு - கனிக்
         கூட்டு - தினம்
         கேட்டு - நீ
ஒப்பிலாப் பாக்களைத் தீட்டு! - வாழ்வு
ஒளியேபெற உயர்வேயுற உயிரேவளர் உரமேயென
ஒண்டமிழ்க் கம்பனை ஏந்து! - இன்பத்
தண்டமிழ் ஆற்றிலே நீந்து!

2.
தாமரைக் கண்ணனை எண்ணி - கவி
         பின்னி - தமிழ்
         மின்னி - தாயைத்
தாங்கிடும் கம்பனின் சென்னி - தாளச்
சந்தம்பல முந்தும்சுவை தந்தும்நமை எங்கும்கவி
சாற்றிட ஆசைகள் ஊறும் - ஒன்றிப்
போற்றிட நம்வினை மாறும்!

நாமரைச் செல்வியைப் பற்றி - புவி
         சுற்றி - அருள்
         முற்றி - கம்பன்
நாட்டினான் நற்றமிழ் வெற்றி - பசும்
நாற்றின்வளம் ஊற்றின்குளிர் ஆற்றின்நடை காற்றின்நலம்
நல்கிய நன்நெறி யாளன் - புகழ்
பல்கிய சீர்களின் சீலன்!

3.
சீதையின் நல்லொழில் கண்டு - விழி
         வண்டு - மது
         உண்டு - கவி
செய்தனன் செந்தமிழ் கொண்டு - கம்பன்
செம்மைதரும் அம்மையருள் வெம்மையொழி இம்மையெழில்
சீர்க்கவி தீட்டிய புலவன் - தமிழில்
ஏர்க்கவி ஓட்டிய உழவன்!

போதையின் எல்லையைத் தொட்டு - மனச்
         சிட்டு - இசை
         யிட்டு - பாடிப்
பூந்தமிழ் மேன்மையைக்  கொட்டு! - கம்பன்
புவியேபுகழ் கவியேயெனும் செவியேபுகும் அமுதேயெனும்
போற்றியே என்மனம் துள்ளும் - விதி
மாற்றியே நல்வழி சொல்லும்!

தொடரும்

Aucun commentaire:

Enregistrer un commentaire