திரு.வி.க
இன்னிசைச் சிந்தியல் வெண்பா
1.
பெண்ணின் பெருமையை மண்ணில் உரைத்திட்ட
அண்ணல்! அருந்தமிழ்த் தென்றல் திரு.வி.க
பொங்கும் தமிழின் பொழில்!
2.
ஓடைக் குளிர்காற்றாய் ஓங்குதமிழ்ப் பாக்களை
மேடை மணந்திடவே மீட்ட திரு.வி.க
கொஞ்சும் தமிழின் குடில்!
3.
வாடி வதங்கும் தொழிலாளர் வாழ்வேங்க
ஈடிலா நல்லுழைப்பை ஈந்த திரு.வி.க
துாய தமிழின் சுடர்!
4.
அரும்பால் சுவையாக அன்புமழை யாகத்
திருமால் அருள்வேட்டல் செய்த திரு.வி.க
பண்ணார் தமிழின் பயிர்!
5.
எங்கும் எதிலும் இனியதமிழ் வேண்டுமெனப்
பொங்கும் உணர்வினை போந்த திரு.வி.க
அன்னைத் தமிழின் அணி!
6.
வெள்ளைக் கதராடை! கொள்ளைத் தமிழ்ப்பற்று!
பிள்ளை எழிலுள்ளம் பெற்ற திரு.வி.க
இன்பத் தமிழின் எழில்!
7.
என்கடன் நற்பணி ஈந்து கிடப்பதே!
நன்மனக் கொள்கை நவின்ற திரு.வி.க
வாழ்க்கை தமிழின் வளம்!
8.
நவசக்தி ஏட்டில் நறும்பக்தி தந்து
சிவசக்தி சீருரைத்த செம்மல்! திரு.வி.க
வண்ணத் தமிழின் வரம்!
9.
எளிமை! இனிமை! எழுத்துலகம் போற்றும்
வளமை! பகைவிரட்டும் வன்மை! திரு.வி.க
ஆலைவாழ் தோழர் அரண்!
10.
எழுத்தின் எரிமலை! எண்ணங்கள் யாவும்
பழுத்த படைப்பாளி! பண்பார் திரு.வி.க
நாட்டின் நலமாம் நவில்!
18.07.2016
அருமை ஐயா...
RépondreSupprimerஅருமை ஐயா.
RépondreSupprimer