mardi 5 juillet 2016

குகன் படகு பேசுகிறது - பகுதி 3



புதுவைக் கம்பன் விழாக் கவியரங்கம்
குகன் படகு பேசுகிறது!

<
குகனின் படகு நான்
அகமுற்றுப் பேசுகிறேன்!
ஆற்றின் காற்றாகக்
சொற்களை வீசுகிறேன்!

தண்ணீரில் உள்ளதால்
என் பேச்சைத்
தள்ளிவிட வேண்டாம்!

கண்ணீரில் பேசுகிறேன்!

கடைசியில் வந்ததால்
கண்ணீரில் பேசுவதாய்க்
கற்பனை செய்ய வேண்டாம்!

கடல் செல்லும் என் மக்கள்
காணமால் போகின்றார்!
ஆதலால்
கண்ணீரில் பேசுகிறேன்!

<
காதலைக் காட்டும்
அகத்துறை!
மோதலைக் காட்டும்
புறத்துறை!
காதலையும் மோதலையும்
காட்டும்
படகுத்துறை!

<
இறைவனும் நானும் ஒன்று!
இறைவனும்
கரையேற்றுவான்!

நானும் கரையேற்றுவேன்!
அதனால்
இறைவனும் நானும் ஒன்று!

சிலேடை வெண்பா (படகும் பரமனும்)

கடல்தவழும்! கண்தவழும்! காதல் மணக்க
இடம்அருளும்! வாழ்நலம் ஏந்தும்! - திடமாக
நம்மைக் கரையேற்றும்! நல்ல எழிற்படகும்
செம்மைத் திருமாலும் செப்பு!

<
மக்களைப் படகாக்கி
அரசியல் வாதிகள்
கரையேறும் காலமிது!

அரசியல் கடலில்
சிலர் முழுகி முத்தெடுப்பார்!
சிலர் முழுகி - மக்களின்
மூச்செடுப்பார்!

<
படகு நான்
பேச்சுக் கலையில் சிறந்தவன்!
பைந்தமிழ்
ஆட்சிக் கலையில் உயர்ந்தவன்!
எப்படி?

இரண்டு நாக்குகளை வெட்டி
ஒன்றாய் ஒட்டி
வளைத்தால் - என்
உருவம் வரும்

நாவலரின் நாக்கின் மேல்
நடமாடும் தமிழன்னை
இன்றென்
வாக்கின் மேல் வலம் வருவாள்!

நாக்குகள் இரண்டை
நானுற்ற காரணத்தால்
பேச்சுக் கலையில்
சிறந்தவன் நானே!

இரு நாக்குப்
பேச்சென என்னை
எள்ளி விட வேண்டாம்!

என் நாக்கு
கருநாக்கு!
கடல் அலையின்
பெரும் நாக்கு!
கவி அலையின்
அரும் நாக்கு!

<
முப்படையில்
கப்பல் படை
என் வாரீசுகளே!

<
நாடுகளைக்
கண்டு பிடிக்க
என் வாரீசுகளே
தொண்டு புரிந்தனர்!

<
உலக முன்னேற்றத்திற்கு
என் வாரீசுகளே
வழி போட்டனர்! - பிள்ளையார்
சுழி போடட்டனர்!

<
வயல்வெளியில்
நீர் அள்ளும்
ஏற்றப் பாட்டுப்போல்..
கடல்வெளியில்
நீர் தள்ளும்
என் பாட்டும்
ஏற்றப் பாட்டு - ஆம்
தமிழரின் ஏற்றத்தைச்
சாற்றும் பாட்டு!

<
நான் மிதப்பது
தண்ணீரில்!
இந்த அரங்கம் மிதப்பது
தமிழ்ச்சீரில் - கம்பன்
கவிச்சீரில்!

<
நான்
நீரில் மிதக்கின்றேன்!
என்னையும் விடச் சிலர்
நீரில் மிதக்கின்றார் - மது
நீரில் மிதக்கின்றார்!

<
ஆற்றுக்கு அணையுண்டு
ஆசைக்கு அணையில்லை!
ஆற்றின் கரைபோன்று
ஆசைக்குப் கரையிட்டால்
அழிவுக்கு வழியில்லை!

காற்றின் திசையறிந்தே - என்
பயணம் சிறக்கும்!
வாழ்வில் - எதிர்
காற்றின் விசையறிந்தால்
வெற்றி கிடைக்கும்!

<
எடுப்பு, தொடுப்பு, முடிப்பு
இசைப்பாட்டு!
துடுப்பு - என்றன்
விசைப்பாட்டு!

தமிழா!
துணிவே வாழ்வின்
மிசைப்பாட்டு!

துணிவை இழந்தால்
காண்பாய்
வசைப்பாட்டு!

<
படகில்
நீர் புகுதல் ஆகாது!
வாழ்வில் - கெட்ட
பேர் புகுதல் ஆகாது!

கடலும் ஆறும்
ஊர் புகுதல் ஆகாது!

சாதிவெறி! சமயவெறி!
பார் புகுதல் ஆகாது!

<
இணைந்து கட்டிய
இரண்டு படகுகள்
இராமனும் இலக்குவனும்!

<
தண்ணீரில் ஆடும்
படகானான்
சுக்கிரிவன்!

<
ஆற்றின் ஆழம்
அறியாமல் இறங்கியவன்
வாலி!

<
காணமால் போன
படகைக்
கண்டுபிடித்த காவலன்!
சொல்லின் நாவலன்!
அனுமன்!

<
வண்ணப் படகாக
எண்ணம் பறித்தாள்
அன்னைத் சீதை!

<
கடலுக்குள்
சுழல் உண்டு!
காதல் கொண்ட
உடலுக்குள்
சுழல் உண்டு!

காதல் சுழலில்
சிக்கிய
இராமனும் சீதையும்
ஓடாத படகானார்!

எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழிக்
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபொறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!
(கம்பன் - 514)

<
துடுப்பிழந்த படகானான்!
போர்க்களத்தில்
இராவணன்!

<
கரையறியாப் படகானான்
பரதன்!

<
புயல் கொண்ட
படகானான்
தயரதன்!

<
உடைந்த படகானாள்
சூர்ப்பணகை!

<
நீரில் முழுகும்
படகானான்!
அன்பென்னும்
சீரில் முழுகும்
கும்ப கருணன்!

<
கரையேற்றும் படகாய்க்
இராமனைக் கொண்டான்!
வீடணன்!

<
சுனாமிபோல்
எழுந்தவன்
இந்திரசித்து!

<
படகின்
வளைவை நிகர்த்தது
கூனியின் முதுகு!

<
பிரிந்து சென்ற
காதலன் வரவுக்குக்
காத்திருக்கும்
காதலிபோல்
நான் காத்திருக்கிறேன்!
இராமன் மீண்டும்
வருவானென....

நல்லதோர் ஆட்சி
அமையுமெனக்
காத்திருக்கும்
தமிழகம்போல்
நான் காத்திருக்கிறேன்

இராமன் மீண்டும்
வருவானென....

பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.05.2016

7 commentaires:

  1. அருமை ஐயா தங்கள் கவித் திறன் வழக்கம்போல் வியக்க வைக்கிறது

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நெடுநாள் கழித்துப் பதிவிட்டேன்! நெஞ்சைத்
      தடுநாள் துயரைத் தகர்த்து!

      Supprimer
  2. Réponses
    1. வணக்கம்!

      படகின் பயணம் பரவசம் ஊட்டும்!
      தொடரும் இனிமை சுழன்று!

      Supprimer
  3. அருமையான வரிகள்
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      குகன்கொண்ட கோலப் படகினை என்றன்
      அகங்கொண்டு பாடினேன் ஆழ்ந்து!

      Supprimer